மறைந்த சே.வெ.சண்முகம் நினைவாகப் புதிய அறக்கட்டளை

மறைந்த சே.வெ.சண்முகம் நினைவாகப் புதிய அறக்கட்டளை

2 mins read
5101d4f7-33c0-4c12-b78f-cd9f715ab0ed
நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் (இடமிருந்து இரண்டாவது) கலந்துகொண்டார். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான மறைந்த திரு சே.வெ.சண்முகத்தின் நினைவாக அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்து சபை, சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கம் இணைந்து மார்ச் 28ஆம் தேதி வழங்கிய ‘தமிழ் இலக்கியக் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின்போது தம் தந்தை திரு சே.வெ.சண்முகம், தாயார் ருக்குமணி ஆகியோரின் பெயரில் முனைவர் மீனாட்சி சபாபதி அறக்கட்டளையை அதிகாரபூர்வமாக நிறுவினார்.

நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் கலந்துகொண்டார். அவரது உரையைக் கேட்க சுமார் 50 தமிழ் ஆர்வலர்கள் வந்திருந்தனர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளர்தமிழ்ப் புலத்தின் (Faculty) புலமுதன்மையருமான (Dean) முனைவர் குறிஞ்சிவேந்தன், 60 அனைத்துலக ஆய்வுக் கட்டுரைகளையும் 12 நூல்களையும் வெளியிட்டுள்ளார். 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளர்தமிழ்ப் புலத்தின் (Faculty) புலமுதன்மையருமான (Dean) முனைவர் குறிஞ்சிவேந்தன், 60 அனைத்துலக ஆய்வுக் கட்டுரைகளையும் 12 நூல்களையும் வெளியிட்டுள்ளார்.  - படம்: ரவி சிங்காரம்

“சிங்கப்பூர் உட்பட, பன்னாட்டுத் தமிழாசிரியர்கள் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாக இருந்து வித்திட்டவர்,” என அவரை அறிமுகப்படுத்தினார் முனைவர் மீனாட்சி சபாபதி.

கல்வியின் கலங்கரை விளக்கமாக சிங்கப்பூர் விளங்குவதாகக் கூறித் உரையைத் தொடங்கினார் முனைவர் குறிஞ்சிவேந்தன்.

திருவாசகம், தொல்காப்பியம், மகாபாரதம் போன்ற பண்டைக்காலப் படைப்புகளில் தமிழோடு ஆன்மிகமும் இயைந்திருப்பதாக அவர் விவரித்தார்.

அவரது உரையின் முடிவில், பெற்றோர் நினைவாக நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு முனைவர் மீனாட்சி சபாபதி $8,100 காசோலை வழங்கினார்.

‘தமிழ்த் திருமுறைகளைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கற்று, போட்டிகளில் பங்குபெறவும் சைவ கூட்டு நடவடிக்கைகளுக்கும் இது வழிவகுக்கும்,” என்றார் அவர்.

முனைவர் மீனாட்சி சபாபதிக்கு (வலமிருந்து இரண்டாவது) திருச்சிராப்பள்ளி சைவத் தமிழ்வளர் மன்றத்தின் சார்பில், திருமுறைச்செம்மல் விருதை வழங்கினார் முனைவர் குறிஞ்சிவேந்தன் (வலது).
முனைவர் மீனாட்சி சபாபதிக்கு (வலமிருந்து இரண்டாவது) திருச்சிராப்பள்ளி சைவத் தமிழ்வளர் மன்றத்தின் சார்பில், திருமுறைச்செம்மல் விருதை வழங்கினார் முனைவர் குறிஞ்சிவேந்தன் (வலது). - படம்: ரவி சிங்காரம்

அவரது தொண்டுக்காக திருச்சிராப்பள்ளி சைவத் தமிழ்வளர் மன்றத்தின் ‘திருமுறைச்செம்மல் விருது’ வழங்கப்பட்டது.

70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்து சபை, இல்லங்களில் தமிழ்மொழியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்