தமிழ் இலக்கியங்களும் சிங்கப்பூரில் தாவரங்களும்

2 mins read
1245045b-0001-4959-8cd3-017fd556ca1f
சிறப்பு விருந்தினரான சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவர் திரு மு அ மசூது தமிழில் பேசுவதன் முக்கியத்தைப் பற்றி சிறப்புரையாற்றினார். - படம்: கேலாங் செராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
multi-img1 of 3

‘தமிழ் இலக்கியங்கள் கூறும் தாவரங்களில் சிங்கையில் காணப்படுபவன’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கேலாங் செராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்றது.

தமிழ்மொழி விழாவின் ‘ஆற்றல்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்த சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு மு.அ.மசூது, தமிழில் பேசுவதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

பொதுவாக, பண்டைக்கால தமிழ் இலக்கியங்கள் முதல் நவீனகால புதினங்கள் வரை, தாவரங்கள், கொடிவகைகளை முக்கிய அங்கங்களாகக் கொண்டுள்ளன.

அவற்றில் குறிப்பாக சிங்கப்பூரில் காணப்படும் தாவரங்களின் சிறப்புகளையும் அவற்றின் ஆற்றல்களையும் விளக்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அவ்வகையில் சிங்கப்பூர் பேச்சாளர் இரத்தினம் சபாபதி, சிங்கப்பூரில் சங்ககால மரங்கள், செடிகொடிகள் எங்கே உள்ளன என்பது பற்றி விளக்கினார்.

சிங்கப்பூரில் உள்ள சங்ககால மரங்கள், செடிகொடிகள் பற்றி விவரித்த திரு இரத்தினம் சபாபதி.
சிங்கப்பூரில் உள்ள சங்ககால மரங்கள், செடிகொடிகள் பற்றி விவரித்த திரு இரத்தினம் சபாபதி. - படம்: கேலாங் செராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

இலக்கியங்களில் கூறப்படும் பல செடி வகைகள் நம்மிடையே இங்கு இல்லாவிட்டாலும், இருக்கும் செடிகளை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது, அதனால் வரும் பயன்கள், நம் இலக்கியங்களில் ஏன் செடி, கொடி, மரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறித்து திரு சபாபதி எடுத்துரைத்தார்.

கருத்தரங்கிற்கு வந்திருந்த சுமார் 100 பேருக்கும் வீட்டில் வளர்க்கக்கூடிய தொட்டிச் செடி வழங்கப்பட்டது.

“பலவகை செடிகள் சிங்கப்பூரிலும் இருக்கின்றன. அவற்றில் பலவற்றையும் வீட்டிலும் வளர்க்க முடியும் என்பது போன்ற தகவல்கள் எனக்கு வியப்பளித்தன. இலக்கிய நூலைப் படிக்கவும் இதுபோன்ற செடிகளை வளர்க்கவும் இந்நிகழ்ச்சி ஆர்வமூட்டியது,” என்றார் கணினித் துறை விரிவுரையாளர் ஜாஹிர் ஹுசைன்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருமதி ரேவதி, கேலாங் செராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு தமிழ்மொழி விழா நிகழ்ச்சிக்கு இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்வதாகக் குறிப்பிட்டார். இக்குழு சென்ற ஆண்டு விவாத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கேலாங் செராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் மாலிக், இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு கேள்வி கேட்டு பலன் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனிவரும் காலங்களில் நடத்த உந்துதலாக இருப்பதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்