தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவியின் மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டும் வெளிநாட்டு ஊழியர்

2 mins read
099fbbcb-b034-4be8-897d-d0f0b3b2c4a6
பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்றுவரும் மனைவி ஷர்மிளா தேவிக்காக $100,000 நிதி திரட்டி வருகிறார் வெளிநாட்டு ஊழியர் பிரதீப். - படம்: கிவ்.ஏஷியா இணையத்தளம்
multi-img1 of 2

க்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.

100,000 வெள்ளி திரட்டுவது இவரது இலக்கு. தற்போது கிட்டத்தட்ட 40,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது. நிதித் திரட்டு https://give.asia/campaign/help-my-wife-sharmila-devi-recover-from-stroke எனும் இணையத்தளம்வழி நடைபெறுகிறது.

சிங்கப்பூரில் தன்னைக் காணவந்த மனைவி ஷர்மிளா தேவி, 38, தீடீரென மூளை ரத்தக்கசிவால் மயக்கமடைந்து, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார் பிரதீப்.

அவசர சிகிச்சைக்குப் பின்னர் சிக்கல்கள் எழுந்தன. சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. அதனால் மூளை மீது ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்க ஷர்மிளாவின் மண்டை ஓட்டில் ஒரு பகுதி தற்காலிகமாக அகற்றப்பட்டது என்றார் பிரதீப்.

ஷர்மிளா முழுமையாகக் குணமடைவதற்கு செயற்கை மண்டை ஓட்டை உட்புகுத்த மற்றொரு சிகிச்சையும் எதிர்காலத்தில் தேவைப்படும் என மருத்துவர் கூறியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இதய ஓட்டைக்கான பரிசோதனையும் தேவைப்படுவதாக பிரதீப் கூறினார்.

ஷர்மிளாவின் உடல்நிலை சற்று மேம்பட்டதால் மருத்துவர்கள் அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து உயர் பராமரிப்புப் பிரிவுக்கும் பின்பு சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றினர்.

எனினும், வலது கால், வலது கை ஆகியவை செயலற்றுப்போன நிலையில், ஷர்மிளாவிற்குக் குழாய் வழியாகத்தான் உணவு தரப்படுகிறது.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அண்மைய இடைக்கால கட்டண ரசீதுப்படி மருத்துவச் செலவு இதுவரை 94,372.02 வெள்ளியை எட்டியுள்ளது. அடுத்தது, அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் தசைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கட்டணம் மேலும் உயரும்.

தனக்கான நிறுவனக் காப்புறுதி தன் மனைவியை உள்ளடக்காது என்பதாலும் தன் மனைவி பயணக் காப்பீடு எடுக்கவில்லை என்பதாலும் மருத்துவச் செலவுகளுக்காக ‘கிவ்.ஏஷியா’ தளத்தை நாடியதாக பிரதீப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்