வெப்பத்தில் இருந்து நம்மைக் காப்போம்

வெப்பத்தில் இருந்து நம்மைக் காப்போம்

3 mins read
5b4c9dcc-70a8-459b-9b1c-8b8ea36bc947
வெப்பமான சமையல் இடத்தில் வேலை செய்யும் அப்துல் அலிபு அக்பர் அலி, 38, தம்மை முறையாகக் கவனித்துக்கொண்டு உடலின் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். - படம்: சுந்தர் நடராஜ்

உணவுக்கடையில் சமையல் வேலை செய்யும் அப்துல் அலிபு அக்பர் அலி, 38, அதிகரித்துவரும் வெப்பத்தால், தான் எளிதில் சோர்வு அடைவதாகக் கூறினார்.

காலை ஆறு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை கபகபவென எரியும் அடுப்பின் அருகில் நின்று அயராது சமைக்கிறார் ஒன்பது வயது பிள்ளைக்குத் தந்தையான திரு அக்பர்.

வெப்பத்தை எதிர்கொள்ளவும் குடலைச் சீராக்குவதற்கும் இவர் அதிக பழங்களை உண்கிறார். தண்ணீர், மோர், பழரசம் போன்றவற்றை அருந்துகிறார். உடல்நலச் சிக்கல்களை இது முன்னெச்சரிக்கையாகத் தடுத்துவிடும் என இவர் கருதுகிறார்.

“அத்துடன் நான் இயன்ற அளவு ஓய்வு எடுத்துக்கொள்வேன்,” என்று அவர் கூறினார்.

‘ஆசிடு ரிஃப்லக்ஸ்’ எனப்படும் அமிலப் பின்னோட்ட நோயாலும் நெஞ்செரிச்சலாலும் சிங்கப்பூரில் அதிகமானோர் துன்புறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தப் பாதிப்புகளால் வேறு கடுமையான நோய்கள் உருவாகலாம் அல்லது அத்தகைய நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

கவனிப்பின்றி சிக்கலே

67 வயது ஆடவர் ஒருவர், 40 ஆண்டுகளாக தமக்கு அமிலப் பின்னோட்ட நோய் இருந்ததைக் கவனிக்கவில்லை. மருத்துவரிடம் சென்று உரிய உதவியை நாடத் தவறியதாக மேற்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எட்வர்ட் சியோங் தெரிவித்தார்.

அந்த ஆடவருக்கு ‘பேரட்ஸ் ஓசோபேகஸ்’ என்ற புற்றுநோய்க்கு முன் வரக்கூடிய நோயால் பாதிப்பு இருப்பதாகப் பின்னாளில் தெரியவந்தது. வயிற்றிலுள்ள அமிலம் பின்னோக்கி உணவுக்குழாய்க்குத் தள்ளப்படுவதால் உணவுக்குழாயின் சுவர்கள் சேதமடைகின்றன.

“இதுபோன்ற உடல்சிக்கல்களால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டும் சிலர் மருத்துவ உதவியைக் காலந்தாழ்த்தி நாடுவதால் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன,” என்று பென்ஏஷியா சர்ஜரி குழுமத்தில் பணியாற்றும் டாக்டர் சியோங் கூறினார்.

உரிய மருந்துகளாலும் உடற்பருமனையும் மன உளைச்சளையும் குறைக்கும் நடைமுறை தீர்வுகளாலும் அந்த நபருக்கான சிகிச்சை, நல்லபடியாக நடந்தது.

நெஞ்செரிச்சல் அல்லது ‘ஜெர்ட்’ எனப்படும் அமிலப் பின்னோட்டத்தால் மக்கள்தொகையில் சுமார் 20 விழுக்காட்டினர் பாதிக்கப்படுவதாக டாக்டர் சியோங் தெரிவித்தார். இதனைப் பலர் அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால் முடிவுகள் அபாயகரமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தவிர்க்க வேண்டியவை

உணவுச் செரிமானத்திற்காக வயிறு, வலுவான அமிலத்தன்மை கொண்டுள்ள திரவத்தைத் தயாரிப்பதாக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டோ பின் செட் தெரிவித்தார். இந்த அமிலம் வயிற்று, குடற்பகுதிகளில்தான் இருக்க வேண்டும், என்று நெக்சஸ் சர்ஜிக்கல் மருத்துவ அமைப்பில் பணியாற்றும் டாக்டர் டோ கூறினார்.

அளவுக்கு அதிகமான உடற்பருமனுடன் இருத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், கடுமையான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சிக்கு முன்பு அதிகமாக சாப்பிடுதல், சாப்பிட்டவுடன் படுத்துவிடுதல் ஆகியவை இந்த நோய்களுக்கான அபாயத்தை அதிகரிப்பதாக கூ டெக் புவாட் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் கென்னி ஸு கூறினார்.

காரமான உணவு, காஃபின் மற்றும் சோடா பானங்களும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகலாம் என்று டாக்டர் சூ கூறினார்.

வெப்பத்தால் இந்த நோய்களின் அறிகுறிகள் அதிகரிக்கலாம் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் குடல் மற்றும் கல்லீரலுக்கான பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் கெவின் சியா தெரிவித்தார். இதனைச் சமாளிக்க, அனைவரும் அதிகத் தண்ணீர் அருந்தவேண்டும். மன உளைச்சலைக் குறைக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்