வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளைகளில் உடலை அதற்கேற்றபடி தயார்செய்வதும் பாதுகாப்பதும் அவசியம்.
குறிப்பாக அதிக வெயில், வியர்வை வெளியேற்றம், தொற்றுநோய், நீரிழப்பு, அதனால் ஏற்படும் சோர்வு எனப் பல்வகையான சிரமங்களுக்கு வழிவகுக்கும்.
அவற்றிலிருந்து விடுபட தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பரபரப்பான பணிச்சூழல் தாகம் ஏற்படுவதை மறக்கச் செய்யும். அதனால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்கவும் உடலுக்கு குளுமையூட்டவும் அவ்வப்போது இயற்கையாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துவது நல்லது.
நெல்லிச் சாறு
நெல்லிக்காய் இயற்கையாக வைட்டமின் சி நிறைந்தது. பல்வேறு நோய்களில் இருந்து தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் கூறுகள் நிறைந்தது.
நெல்லிக்காயைத் துண்டுகளாக்கி, அத்துடன் சிறிது கறிவேப்பிலை இலைகள் சேர்த்து நீர்விட்டு விழுதாக அரைத்து, வடிகட்டி உப்பு சேர்த்து பருகலாம். நீடித்த புத்துணர்ச்சிக்குக் கறிவேப்பிலைக்கு பதிலாக புதினா இலைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.
இது உடலில் நீரேற்றத்தை அதிகரித்து நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.
பச்சைச் சாறு (Green Juice)
வெயில் நாள்களுக்குச் சிறந்த பானம் எலுமிச்சைச் சாறு. அத்துடன் மேலும் சில பொருள்களைச் சேர்த்து பானமாக்கி அருந்துவது உடலுக்கு வலுசேர்க்கும்.
எலுமிச்சை சாற்றுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து, அத்துடன் சிறிது உப்பு, சாட் மசாலா சேர்த்துப் பருகுவது வெயில் காலத்தில் புத்துணர்ச்சியைத் தரும்.
தொடர்புடைய செய்திகள்
பானகம்
வெயில் காலத்தில் உடலில் சர்க்கரை வெளியேறி ஆற்றல் குறையும் வாய்ப்பு அதிகம். அதிலிருந்து விடுபட பானகம் அருந்துவது சிறந்தது.
சுத்தமான பனை வெல்லத்தை நீரில் கரைத்து, மண் இல்லாமல் வடிகட்டி அதில் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு மூடி எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம்.
இது இனிப்புப் பிரியர்களுக்கேற்ற இயற்கை பானம்.
கற்றாழைச் சாறு
உடல் சூட்டினால் ஏற்படும் பலவித சிரமங்களுக்கு அருமருந்து சோற்றுக் கற்றாழை.
கற்றாழையின் உள்புற ‘ஜெல்’ போன்ற பகுதியை எடுத்து, நன்கு கழுவி, 1 பச்சை மிளகாய், புதினா இலைகள், சிறிதளவு கொத்தமல்லித் தழை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை நீர் மோரில் கலந்து அருந்துவது சிறந்தது.
காலையில் வெறும் வயிற்றில் கற்றாழைச் சற்று அருந்துவது வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொன்று, தொற்றில் இருந்து காக்கிறது.
வாழைத்தண்டுச் சாறு
பழச் சாறுகள் அருந்துவது உடலில் ‘குளுக்கோஸ்’ எனும் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும் எனக் கருதுபவர்கள் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மிக்க காய்கறிகளின் சாற்றை அருந்தலாம்.
அதில் குறிப்பாக சிறந்தது வாழைத்தண்டு. வாழைத்தண்டைத் துண்டுகளாக்கி, தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்ட வேண்டும். இக்கலவையை மோரில் கலந்து மிளகுத்தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி கொத்தமல்லித் தழை சேர்த்துப் பருகலாம்.
இது நாள்முழுதும் உடலைக் குளுமையாக வைத்திருக்க உதவும்.
வாரத்துக்குக் குறைந்தது மூன்று நாள்கள் இவ்வகை பானங்கள் அருந்துவதுடன், சமச்சீர் உணவு எடுத்துக்கொள்வது, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், முள்ளங்கி, தக்காளி, மாதுளம்பழம், சிவப்பு குடமிளகாய் உள்ளிட்ட `லைக்கோபீன்’ (Lycopene) எனும் உடலுக்குத் தேவையான முக்கிய வேதிப்பொருள் அடங்கிய காய்கறிகளை உட்கொள்வது அவசியம்.
உலர் விதைகள், கீரைகள், இளநீர் ஆகியவற்றை அதிக அளவில் உட்கொள்வது உடலின் வெப்பநிலையைச் சமன்செய்து சிரமங்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.