தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேரியா பாதிப்பு குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வு

1 mins read
e4ea609f-9099-475f-b65e-ccfb7397eef1
2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க மலேரியா சார்ந்த  உதவிகள் தொடர்பான கோரிக்கைகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 15 விழுக்காடு அதிகரித்தது. - கோப்புப் படம்: புளூம்பெர்க் 

உலகளாவிய நிலையில் கவனத்திற்குரிய அச்சுறுத்தலாக விளங்கும் மலேரியாத் தொற்றால் 2022ஆம் ஆண்டில் 240 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 25ம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மலேரியா நோய்க்கு எதிரான  நடவடிக்கைகளை ஒருசேர முடுக்கிவிடுதல் அவசியம் என்று இந்த ஆண்டுக்கான கருப்பொருள் வலியுறுத்துகிறது.

2022ஆம்  ஆண்டுடன் ஒப்புநோக்க, மலேரியா சார்ந்த  உதவிகள் தொடர்பான கோரிக்கைகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 15 விழுக்காடு அதிகரித்ததாக ‘இன்டர்நேஷனல் எஸ்ஓஎஸ்’ தரவுகள் குறிப்பிடுகின்றன. மலேரியா பாதிப்புகளில் 57 விழுக்காடு ஆசியாவில் ஏற்பட்டதாகவும் குறிப்பாகச் சுரங்கத் தொழிற்துறையை இவை பாதித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

மலேரியா குறித்த விழிப்புணர்வு, அந்த நோயின் அபாயம், மலேரியா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம்  உட்பட, மலேரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் நிறுவனங்கள் எவ்வாறு பங்காற்றலாம்   என்பவை குறித்த செயல்திட்டங்களை ‘இன்டர்நேஷனல் எஸ்ஓஎஸ்’ நிறுவனம்  பட்டியலிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் ஏற்படும் சூழலில் மலேரியா பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உருவாகலாம்  என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக ‘இன்டர்நேஷனல் எஸ்ஓஎஸ்’ நிறுவனத்தின் தொழில்முறை மருத்துவ நிபுணராகவும் மலேரியாப் பிரிவு வல்லுநராகவும் பணியாற்றும் டேவ் நைட் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களிடையே மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், ‘மலேரியா விழிப்புணர்வு இணையம்வழி கற்றல்’ எனும் வாய்ப்பை வழங்குகிறது இந்த நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்