மனித உடலில் சராசரியாக 60 முதல் 70% அளவுக்கு நீர் இருக்கிறது.
நம் உடலுக்கும் மூளைக்கும் தசைகளுக்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சுமார் 650 மில்லி லிட்டர் தண்ணீர் குடிப்பது பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
சிங்கப்பூர் போன்ற அதிக வெப்பம் மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களில் கோடைகாலத்தில் நீரேற்றமாக இருப்பதற்குத் தண்ணீர் அருந்துவது மிகச் சிறந்த வழியாகும்.
வெறும் தண்ணீர் அருந்துவதுடன், நீரில் ஒரு சில பொருள்களைச் சேர்த்து அருந்துவதன் மூலம் அதன் பயன்களை மேலும் அதிகரிக்கலாம்.
அரிசி நீர்
அரிசி நீர் என்பது அரிசியை ஊறவைத்த பிறகு மீதமுள்ள மாவுச்சத்து நீரைக் குறிக்கும்.
இதிலுள்ள தாதுக்களின் இருப்பு, உடலில் மின்பகுபொருளை (எலக்ட்ரோலைட்) சமநிலைப்படுத்த உதவுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய நீரிழப்பு மற்றும் சோர்வைத் தடுக்கமுடியும்.
மேலும், இதை முடி மற்றும் சரும பராமரிப்புக்குப் பயன்படுத்தி, அடர்த்தியான கூந்தலையும் பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
எலுமிச்சை சாறு
சிட்ரிக் அமிலம் எலுமிச்சைப் பழத்தில் அதிகம் உள்ளது.
காலையில் எலுமிச்சை சாறு முதலில் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றலாம்.
நம் குடல் சரியான முறையில் செயல்பட உதவும் சக்தியும் இதற்கு உண்டு. இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
வெந்நீரில் எலுமிச்சை சாறுடன் தேனைக் கலந்து அருந்தினால் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு சளி, காய்ச்சல், இருமல் இருக்கும்போது நெஞ்செரிச்சலைக் குறைப்பதற்கும் உதவும்.
சோம்பு நீர்
சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓரு மூலிகைத் தாவரம் ஆகும்.
இதைத் தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலங்களை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சரிசெய்து, உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரும்.
இஞ்சி சாறு
சமையலறையில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த பொருள்களில் ஒன்று, இஞ்சி.
இஞ்சி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் செரிமானத்திற்கு உதவுதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் இஞ்சி பயன்படுகிறது.
புதினா சாறு
புதினா குளிர்ச்சி தன்மையுடையது என்பதால் உடல் வெப்பப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும்.
மேலும், கோடைகாலத்தில் அதிக வெப்பம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் அளவில் மாற்றங்களைச் சரிசெய்து சமநிலையில் பராமரிக்கும் குணமுடையது புதினா சாறு.
உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் புதினாவில் நிறைந்துள்ளதால் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.