இந்தியச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் சிங்கப்பூர்

3 mins read
e934e8b6-ed66-4be1-91bc-4dc2c5a6f8bd
சுற்றுப்பயணிகளின் வருகை தங்குவிடுதி, உணவங்காடிகள், பிற கடைகள் மூலம் பொருளியளிலும் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தியச் சுற்றுப்பயணிகள் மத்தியில் ஆகப் பிரபலமான சுற்றுலா நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக அண்மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு வருகை தரும் இந்திய, ஜப்பானிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஸ்டர்கார்டு பொருளாதாரக் கழகம், மார்ச் 2024 வரையிலான கடந்த ஓராண்டுப் பயணப் போக்குகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டது.

தரவுகளின் அடிப்படையில் அனைத்துலக அளவில் பயண முறை மாற்றங்கள், அதற்கான காரணங்கள், பயணச் செலவுகள் எனப் பலவற்றைப் பகுப்பாய்வு செய்து வெளியிடப்படும் இந்த அறிக்கை ஆசியான் நாடுகளின் சுற்றுலாப் போக்குவரத்து மீண்டும் அதிகரித்து வருவதைக் கோடிக்காட்டுகிறது.

சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல எண்ணும் இந்தியர்கள் மத்தியில் சிங்கப்பூருக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்றார் சிங்கப்பூர் வேல்ஸ் பயண முன்பதிவு நிறுவனத்தைச் சேர்ந்த சரவணன்.

தமிழ்நாட்டின் சென்னை நகரம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் கூறினார் அவர். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவின் பல்வேறு தரப்பினருக்கு விடுமுறைக் காலம் என்பதால் அக்காலகட்டத்தில் சுற்றுப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, வரவேற்பு எனப் பல்வேறு அம்சங்கள் பயணிகள் மத்தியில் சிங்கப்பூரைப் பிரபலமாக்குகிறது என்றார் சரவணன்.

‘நைட் சஃபாரி’ என்ற இரவு நேர விலங்கியல் தோட்டக் காட்சி தொடங்கி அவ்வப்போது நடக்கும் புதுவித நிகழ்வுகள் வரை சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்ப்பதாகவும் அவர் சொன்னார்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகளும் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு முறை வரும்போதும் ரசிப்பதற்குப் புதிதாக ஏதேனும் இருப்பதாகச் சுற்றுப்பயணிகள் எண்ணுவதாகக் கூறினார் சரவணன்.

இந்தியாவிலிருந்து தேனிலவுக்குச் செல்ல விரும்பும் தம்பதிகளுக்கும், பெரிய குடும்பமாக இணைந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கும் சிங்கப்பூர் பிரபலமான தேர்வாக இருப்பதாகவும் கூறினார் தஞ்சைப் பயண முன்பதிவு நிறுவனத்தைச் சேர்ந்த கனிமொழி.

மேலும், பலமுறை சிங்கப்பூரைச் சுற்றி பார்த்தவர்களும், மீண்டும் சிங்கப்பூருக்கு ஓய்வுப் பயணம் மேற்கொள்ள விரும்புவதையும் காணலாம் என்றார் அவர்.

இந்தியர்களுக்குச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை சற்று எளிதாக்கப்பட்டால் சுற்றுப்பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் எனக் கருதுகிறார் சரவணன்.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூரில் தங்கம் வாங்குவதில் தொடங்கி திறன்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட பல மின்னணுச் சாதனங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகக் கூறினார் கனிமொழி.

தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சாதாரண ஆடைகள் வாங்குவது 27.4 விழுக்காடும், அன்றாட சாதாரண உணவிற்கான சுற்றுலாச் செலவு ஏறத்தாழ 54.7 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

சிங்கப்பூரர்கள் விரும்பும் சுற்றுலாப் பயணங்கள்

ஜப்பானின் யென்னுக்கு நிகராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்ததை அடுத்து ஜப்பானுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 43 விழுக்காடு அதிகரித்ததை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், விமான முன்பதிவுத் தரவுகளின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் வரை சிங்கப்பூரர்கள் மத்தியில் பேங்காக், கோலாலம்பூர், பெர்த் ஆகிய நகரங்கள் பிரபலமாக இருந்ததாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

சுற்றுலாப் பயணங்களுக்கு அடுத்ததாக, கோவில்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் பெருந்தொற்றுக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர் பயண முன்பதிவு நிறுவனத்தைச் சேர்ந்தோர்.

குறிப்புச் சொற்கள்