இளையர்களிடத்தில் ‘6 பேக்ஸ்’ மோகம்

இளையர்களிடத்தில் ‘6 பேக்ஸ்’ மோகம்

2 mins read
56504833-b6d4-4d89-a5fb-f9846b820377
‘6 பேக்ஸ்’ பெறுவதற்குப் பல இளையர்களும் முயற்சி செய்கின்றனர். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

உடற்கட்டோடு இருப்பதை இளையர்கள் பலரும் இலக்காகக் கொண்டுள்ளனர். சிலர் அதற்கும் ஒரு படி மேலாக, ‘6 பேக்ஸ்’ வைத்துள்ளனர். அதை அடையத் தாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றி இளையர்கள் பகிர்ந்தனர்.

‘பார்க்க அழகாக இருக்கவேண்டும்’

அழகைக் குறிவைத்து ‘கிஃப்டட் ஃபைட் அகேடமி’ தோற்றுநரும் முவே தாய் பயிற்றுவிப்பாளருமான 29 வயது அல்வின் ஷாம் ராஜ் ‘6 பேக்ஸ்’ பெறப் பயிற்சி மேற்கொண்டார்.

“உண்மையில் உணவு கட்டுப்பாட்டினால் மட்டுமேகூட எடையைக் குறைத்துவிடலாம். ஆனால், தசைகள் வலுவடைந்து நன்றாகத் தெரிகின்ற ‘6 பேக்ஸ்’ வேண்டுமானால் உடற்பயிற்சி, ஓட்டம் அவசியம்.

“முவே தாய் செய்தால் விரைவாக ‘6 பேக்ஸ்’ வந்துவிடும். குத்துதல், உதைத்தல், அனைத்தும் முழு உடலை ஈடுபடுத்துகின்றன,” என்றார் ஷாம்.

“‘8 பேக்ஸ்’ பெறுவது சாத்தியமே; அதற்குக் கீழ்வயிற்றை ஈடுபடுத்தும் குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்,” என்றும் அவர் கூறினார். குத்துச்சண்டை வீரரான தன் தம்பி பிரிதிவ் ராஜையும் சுட்டி, தம் குடும்பத்திலேயே இயல்பாக ‘6 பேக்ஸ்’ சுக்கான உடல்வாகு இருப்பதாகக் கூறினார்.

முவே தாய் மூலம் கிடைத்த ‘6 பேக்ஸ்’

ஒன்றரை ஆண்டுகளில் 20 கிலோகிராம் எடை குறைத்து ‘6 பேக்ஸ்’ பெற, 21 வயது யாஷ் வசீனுக்கு முவே தாய்தான் வழிவகுத்தது.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல் பருமனாக இருந்தேன். பயிற்றுவிப்பாளர் அல்வின் ஷாமின் காணொளிகளைக் கண்டு எனக்கு முவே தாய் கற்க ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு உடற்கட்டோடு இருக்கவேண்டும் என்பதற்காக நான் அன்றாடம் 5 கிலோமீட்டர் ஓடினேன், 200 ‘சிட்-அப்ஸ்’ செய்தேன்.

“தொடக்கத்தில் கடினமாக இருக்கும். ஆனால் அதற்காகப் பாதியில் நிறுத்திவிட்டால் பலன் தெரியாது. முயற்சி செய்துகொண்டே இருந்தால் கடினமானதும் சுலபமாகிவிடும்,” என்றார் யாஷ்.

உழைப்பினாலும் விரைவு உணவைத் தவிர்த்த மனக் கட்டுப்பாட்டினாலும் தொடங்கிய முதல் ஐந்து மாதங்களிலேயே வசீனுக்கு ‘6 பேக்ஸ்’ வந்துவிட்டன.

தொடக்கத்தில் கடினமாக இருக்கும். ஆனால் பாதியில் நிறுத்திவிட்டால் பலன் தெரியாது.
ஒன்றரை ஆண்டுகளில் 20 கிலோகிராம் எடை குறைத்து ‘6 பேக்ஸ்’ பெற்ற யாஷ் வசீன், 21.

வேலையால் ‘6 பேக்ஸ்’ நீடிக்கவில்லை

தேசிய சேவையின்போது சூரியபிரகாஷ் ‘6 பேக்ஸ்’ வைத்திருந்தாலும், அதன்பின்பு அமர்ந்தபடியே செய்யும் வேலைகளினால் இப்பொழுது 32 வயதில் அதே உடற்கட்டை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

எனினும், அப்பொழுது இருந்த ‘6 பேக்’திரும்பப் பெற, அவர் தொடர்ந்து முயன்றுவருகிறார். ஈராண்டுகால முவே தாய் பயிற்சியோடு தன் உணவிலும் கவனம் செலுத்துகிறார்.

இரவில் சோறு உண்பதைத் தவிர்க்கிறார்; காலையில் கொஞ்சம் சட்னி, சாம்பாருடன் இரு இட்லி அல்லது ஒரு தோசை மட்டும்தான் சாப்பிடுகிறார். அன்றாடம் 100 ‘சிட்-அப்ஸ்’, 50 ‘புஷ்-அப்ஸ்’ செய்கிறார்.

“6 பேக்ஸ் வைத்திருப்போரிடமிருந்தும் ‘யூடியூப்’பிலிருந்தும் நான் இத்தகைய உத்திகளைக் கற்றுக்கொண்டேன். ‘புரோட்டீன் ஷேக்’ உதவும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான் குடித்துப் பார்த்ததில்லை,” என்றார் சூரியபிரகாஷ்.

‘உடற்கொழுப்பு குறையவேண்டும்’

“6 பேக்ஸ் வைத்திருப்பதில் எல்லாருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலரால்தான் அதைத் தக்கவைக்க முடியும். உடற்கொழுப்பு 10 விழுக்காட்டுக் கீழ் இருந்தால்தான் ‘6 பேக்ஸ்’ தெரியும்,” என்றார் சூரியா குமார், 30.

குறிப்புச் சொற்கள்