பாலின இடைவெளியில் சிங்கப்பூருக்கு 48வது இடம்

பாலின இடைவெளியில் சிங்கப்பூருக்கு 48வது இடம்

1 mins read
5ed49e9f-6e8a-41fc-b26c-b1a70953c02e
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுவரும் ஐஸ்லாந்து, இவ்வாண்டும் 93.5 விழுக்காடு சமநிலையுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. - படம்: இணையம்

அனைத்துலக அளவில் பாலின இடைவெளித் தரவரிசையில் சிங்கப்பூர் 48வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலகப் பொருளியல் மன்றம் வெளியிட்ட அண்மை அறிக்கை கூறியுள்ளது. 74.4 விழுக்காடு சமநிலையை அடைந்துள்ள சிங்கப்பூர் கடந்த ஆண்டைவிட ஓர் இடம் முன்னேறியுள்ளது.

உலகின் 146 நாடுகளில் பரவலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பொருளியல் பங்கேற்பும் வாய்ப்புகளும், கல்வி அடைதல், ஆரோக்கியமும் நல்வாழ்வும், அரசியல் பங்கேற்பு ஆகிய நான்கு முக்கியக் கூறுகளில் அடைந்துள்ள பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், கல்வி பெறுதலில் 99.4 விழுக்காடு சமநிலை பெற்று 65வது இடத்தையும், பொருளியல் பங்கேற்பில் 77.9 விழுக்காட்டுடன் 18வது இடத்தையும், அரசியல் பங்கேற்பில் 23 விழுக்காட்டுடன் 69வது இடத்தையும் பெற்றுள்ளது. கிழக்காசியா, பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த 18 நாடுகளில் அது நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.

அனைத்துலகப் பாலின சமத்துவ இடைவெளி மதிப்பெண் 68.5 விழுக்காடு என்றும் 146 நாடுகளில் எந்த நாட்டிலும் முழுமையான சமநிலை இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, பெரிய மாற்றம் இல்லை எனவும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில், முழு சமநிலையை அடைய 134 ஆண்டுகள் ஆகலாம் என்றும் அது குறிப்பிட்டது.

இது, நிலையான வளர்ச்சி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 2030ஆம் ஆண்டைவிட ஏறத்தாழ ஐந்து தலைமுறைக் காலம் அதிகம்.

குறிப்புச் சொற்கள்