‘பம்பிள்’, ‘டிண்டர்’, ‘கோப்பி டேட்’ என இணை தேடும் ‘டேட்டிங்’ செயலிகளில் வலம் வருவோரில் பலரும் ‘லிபரல்’ எனப்படும் தெளிவான சிந்தனை கொண்ட முற்போக்குவாதிகளாகத் தங்களை முன்னிறுத்துவதையே விரும்புகின்றனர்.
மெய்நிகர் உலகம் அளித்துள்ள சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பயன்படுத்தி இளையர்கள் தங்களுக்குச் சரிநிகரான இணையைத் தேர்ந்தெடுக்க இந்தச் செயலிகள் உதவுவதாக நம்பப்படுகிறது.
இது வரவேற்கத்தக்க சமூக மாற்றம் எனும் கருத்து ஒருபுறம் இருக்க, இந்த இணை தேடும் செயலிகளில் தங்களின் அடையாளமாக முன்வைக்கும் கூறுகளை ஆழமாக அறிந்து செயல்படுகிறார்களா அல்லது சமூக ஊடகங்களில் பரவலாக வரவேற்கப்படும் கருத்துகளை வழிமொழிவதன் மூலம் தங்களை அறிவார்ந்தவர்களாக் காட்டிக்கொள்ள முயல்கிறார்களா எனும் ஐயத்தையும் எழுப்பியுள்ளது.
இவ்வேளையில், ‘ராசிப் பொருத்தம்’ பார்க்கும் இளையர்களின் மனநிலை அண்மையில் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னணி இணை தேடும் செயலி ஒன்றும் ராசிப் பொருத்தம் பார்க்கும் வசதியையும் வழங்குகிறது.
சிங்கப்பூரில் மூன்றில் ஒரு இளையர் ராசி பலன், இணைப் பொருத்தம் பார்க்க விரும்புவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இணையின் பண்புகளை ராசியின் மூலம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆண்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் ராசிப் பொருத்தத்தை நம்புவதாகவும், 22 விழுக்காட்டினர் ஆழமாக நம்பவில்லை என்றாலும் சுவாரசியத்திற்காக ராசி பார்ப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பதிலளித்தவர்களில், ‘மில்லேனியல்’ எனப்படும் 1981 முதல் 1996 வரை பிறந்தோரில் பத்தில் ஒருவர் தனது ராசிக்கு எதிரான சில ராசிகளில் இருக்கும் இணையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் பல்துறைக் கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவி, தமது இணையின் சில பண்புகளுக்கு அவரது ராசியே காரணம் என நம்புவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ரிஷப ராசியுடைய தமது இணை, தான் நினைத்தது நிறைவேற கடினமாக உழைக்கத் தயங்கமாட்டார் என்றும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காத, தனிமையை, அமைதியை விரும்புகிற, தனது செயல் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனமாகக் கையாளக் கூடியவர் என்றும் அம்மாணவி குறிப்பிட்டார்.
மருத்துவரான சஞ்சனா குமார், 23, இணையரின் பண்புகளை ராசி இயக்குகிறது என நம்பவில்லை என்றாலும், குடும்பத்தினரின் பரிந்துரைக்கேற்ப பொருத்தம் பார்த்ததாகச் சொன்னார்.
புரிதல் இருந்தால் பொருத்தம் பார்ப்பது அவசியமற்றது என்பது மருத்துவர் சஞ்சனாவின் கருத்து.
கணக்கியல் துறையில் பணியாற்றும் கீர்த்திகா, 23, ஒருவரின் மொத்த பண்புகளையும் ராசியின் அடிப்படையில் ஆராய முடியாது என்றாலும், அந்த ராசிக்குரிய சில பண்புகள் ஒருவரிடம் இருப்பதைக் காணலாம் என்கிறார்.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ராசி குறித்து நண்பர்கள் பேசுவதைக் கேட்டுள்ளேன் என்றும், தமது சமயம் அதனை அங்கீகரிக்காததால் ராசி பார்ப்பதும், அதனை நம்புவதும் இல்லை என்று சொன்னார்.
நன்யாங் பல்கலைக்கழக உளவியல் துறை மாணவரான ஆதித்யா, 25, ராசி, நட்சத்திரம் உள்ளிட்ட யாவும் ஒருவர் தாமாகக் கற்பித்துக் கொள்ளும் நம்பிக்கைதான். அது உண்மையென நம்பவில்லை என உறுதிபடக் கூறினார்.
இது ஒரு கவனிக்க வேண்டிய ஆகப் பெரிய சமூகக் கவலையா என்றால், ஆதாரமற்ற பல நம்பிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பவும், ஆராய்ந்தறியவும், தனது இணை பிற்போக்குவாதியாகவும், தனக்கு ஒத்துவராத சில கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கக்கூடாது என எதிர்பார்க்கும் நிலைக்கு வரவும் சில நூற்றாண்டுக்காலம் பிடித்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி அளித்திருக்கும் சுதந்திரம், சிந்தனைகளை ஆழமாக்கி, நம்பிக்கைகளை விவாதத்துக்குள்ளாக்கி, பல்வேறு கருத்துகளைக் குவித்து, அதிலிருந்து பண்பட்ட சமூகமாக மாறுவதை விடுத்து, மேலோட்டமான சில நம்பிக்கைகளிலும், உணர்ச்சிவசத்திலும் திளைத்திருக்கிறார்களா எனும் ஐயமும் எழுந்துள்ளது.
மறுபுறம், இளையர்கள் ஒருவரையொருவர் அறிந்து புரிந்துகொள்ளாமல் வாழ்வில் இணைவதில்லை. அதிக மனிதத் தலையீடு இல்லாமல், பெரும்பகுதி நேரத்தை இயந்திரங்களுடன் செலவிடும், செயற்கை நுண்ணறிவின் பதில்களை அடிப்டையாகக் கொண்டு நகரும் தலைமுறைக்கு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் குறித்த இயல்பான பதற்றம், ஏதேனும் நம்பிக்கையைத் தரும் ஒன்றை இறுகப்பற்றிக்கொள்ள வைக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
உறவையும் பிரிவையும் நயத்துடன் கையாண்ட சமூகத்தின் வழித்தோன்றல்கள், எந்த நம்பிக்கையையும் புறந்தள்ளாமல், அதேசமயம் நன்கு ஆராய்ந்து ஆலோசித்து அதன்வழி செயல்படும் என்ற நம்பிக்கை இன்னும் மிச்சமிருக்கிறது.

