தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்

3 mins read
d603829c-d607-44aa-beca-17d1c989d8c6
கருத்தரிக்கும் வயதில் உள்ள பெண்கள் நார்த்திசுக்கட்டிகளைக் கவனித்து, உரிய சிகிச்சை மேற்கொள்வது குழந்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். - படம்: ஊடகம்

நடுத்தர வயதுடைய (30 - 50 வயது) பெண்களில் ஏறத்தாழ 30 முதல் 40 விழுக்காட்டினருக்கு ‘யூட்டரின் ஃபைப்ராய்ட்ஸ்’ எனப்படும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவற்றில் சில வகைகள் பெண்களின் கருத்தரிக்கும் தன்மைக்கு ஊறு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“ஃபைப்ராய்ட்ஸ் எனும் திசுக்கட்டிகள் கருப்பையின் தசைச் சுவரிலோ கருப்பையின் வெளிப்புற மேற்பரப்பிலோ வளரும் புற்றுநோய் அல்லாத தசை வளர்ச்சி. சிறிய அரிசி போன்ற அளவில் தொடங்கி வெவ்வேறு அளவுகளில் இக்கட்டிகள் தோன்றும்,” என்றார் மகப்பேறு, சிறுநீரக மருத்துவ வல்லுநர் ஹார்வர்ட் லிம்.

பொதுவாக இவ்வகைக் கட்டிகளால் அறிகுறிகள் எதுவும் ஏற்படாததால் பலரிடம் இவை கண்டறியப்படாமல் இருப்பதாகவும் திரு லிம் சொன்னார். பலருக்குத் தற்செயலாக இடுப்புப் பகுதியைச் சுற்றிய பாகங்களைச் சோதிக்கும் ‘அல்ட்ராசவுண்ட்’ எனும் சோதனை மேற்கொள்ளும் போது அவை கண்டறியப்படுவதாகவும் அவர் கூறினார்.

நார்த்திசுக்கட்டி அறிகுறிகள்

நார்த்திசுக்கட்டிகள் இருந்தால், அவற்றின் அளவு, எண்ணிக்கை, இருப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்து பரவலாக மாறுபடும் என்றார் ஆசிய மகப்பேற்றியல், மகளிர் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரு லிம்.

இடுப்பு வலி, அழுத்தம்: நார்த்திசுக்கட்டிகள் இடுப்பு பகுதியில் ஒருவித அசௌகரியத்தையும் வலியையும் ஏற்படுத்தலாம். சிறுநீர்ப்பை, குடல் பகுதிகளில் அழுத்தம் ஏற்படலாம்.

வீக்கம்: நார்த்திசுக்கட்டிகள் அளவில் பெரியதாக இருந்தால், கருப்பையைப் பெரிதாக்கலாம். இதனால் அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்ட உணர்வு தோன்றும்.

முதுகு வலி: சில குறிப்பிட்ட பகுதிகளில் தோன்றும் நார்த்திசுக்கட்டிகள் கீழ் முதுகில் வலி ஏற்படுத்தும்.

அறிகுறிகளின் தீவிரம், பல கூறுகளைப் பொறுத்து மாறுபடும் என்று சொல்லும் மருத்துவர் லிம், சிலருக்கு சிறுநீர்ப்பை, மலக்குடலில் அழுத்தம், கர்ப்பம் அல்லது மகப்பேற்றின்போது சிக்கல் ஏற்படவும் வழிவகுக்கும் என்றார். சில பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

கிழக்காசியப் பெண்களுக்கு இக்கட்டிகள் ஏற்படும் வாய்ப்பு மற்ற பெண்களை விட 21.8 விழுக்காடு அதிகம் என்கின்றன ஆய்வுகள். குறிப்பாக, குடும்பத்தில் இவ்வகைத் திசுக்கட்டிகள் ஏற்பட்ட யாரேனும் இருந்தால், அவர்களுக்கும் இது வர வாய்ப்புள்ளது என்று திரு லிம் குறிப்பிட்டார்.

மோசமான உணவுப் பழக்கங்களும் நார்த்திசுக்கட்டிகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். சிவப்பு இறைச்சி உட்கொள்வதைக் குறைத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை உட்கொள்வதும், போதிய அளவு வைட்டமின் ‘டி’ பெறுவது திசுக்கட்டி தோன்றும் அபாயத்தைக் குறைக்கும்.

பொதுவாக ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள் இவ்வகைக் கட்டிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்றும் இதனால் கருவுறும் வயதைத் தாண்டிய, மாதவிடாய் நிற்கும் வயதை எட்டியோர்க்கு இக்கட்டிகள் சுருங்கத் தொடங்கும் என்றும் திரு லிம் கூறினார்.

நார்த்திசுக் கட்டிகள் பரிசோதனை, சிகிச்சை

அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ ஆகிய பரிசோதனைகள் தொடங்கி, ‘ஹிஸ்டெரோசல்பிங்கோகிராபி’ எனும் கருப்பையில் சாயத்தைச் செலுத்தி கண்டறியும் சோதனை, ‘ஹிஸ்டரோஸ்கோபி’ எனும் கட்டிகளை அடையாளம் காணும் பரிசோதனைகள் மூலம் இவ்வகைக் கட்டிகள் கண்டறியப்படுகின்றன.

பெண்களின் வயது, கட்டிகளின் அளவு, தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை முறையும் மாறுபடும் என்றார் மருத்துவர் லிம். அறிகுறிகள் ஏதுமில்லாத அளவில் சிறிய கட்டிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பது போதுமானது என முடிவெடுக்கலாம். சிலருக்கு அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படலாம்.

மருந்துகள் உட்கொண்டும் கட்டிகள் அளவில் குறையாமல் இருந்தால் சிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்று திரு லிம் சொன்னார். அதிக அறிகுறிகள், அதிக அளவிலான பெரிய கட்டிகள் உள்ள பெண்களுக்கு ‘ஹைஸ்டெரெக்டமி’ எனும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

நார்த்திசுக்கட்டிகள் வளரும் ஹார்மோன் சூழலை மருந்துகளைக் கொண்டு மாற்றியமைப்பதன் மூலமும் இக்கட்டிகள் வளர்வதைக் குறைக்கலாம் என்றார் மருத்துவர் லிம்.

இக்கட்டிகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் பல்வேறு சிக்கல்கள், பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு, அதனால் ஏற்படும் ரத்தசோகை, உடற்பலவீனம், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, குடல் இயக்கத்தில் சிரமம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்படலாம்.

இவ்வகை நார்த்திசுக்கட்டிகள் இருப்பது தெரியவந்தால், மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என்றும் திரு லிம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்