மறைந்த சாதனையாளர், மறையாத சாதனை: சேச்சா டேவிஸ் குறித்து நினைவுகூர்ந்த பேத்தி

மறைந்த சாதனையாளர், மறையாத சாதனை: சேச்சா டேவிஸ் குறித்து நினைவுகூர்ந்த பேத்தி

2 mins read
b38112a5-11c3-438c-83ea-0c8fe2bcf1bd
மானுட நலன் சார்ந்த பல்வேறு அறப்பணிகள் மற்றும் சேவைகளில்  ஈடுபட்டு வருகிறார் ஆர்வலர் திருவாட்டி சுஷீல் சுந்தரம் கிராஃப்ட். - படம்: த. கவி

சேச்சா டேவிஸ்! சிங்கப்பூர் வரலாற்றில் இவருக்கென்று ஓர் இடம் உண்டு. சிங்கப்பூர் “ஹால் ஆஃப் ஃபேம்” எனப்­படும் ‘புகழ்பெற்ற மாதர் பட்டியலில்’ இடம்பிடித்த இவர், சமூக சேவையாளர், கொடையாளர் எனப் பற்பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 

காலஞ்சென்ற சாதனை பெண்மணி சேச்சா டேவிஸின் சீரிய சமூகப் பணி, அறப்பணி குறித்து மக்களிடம் சுவாரசியமாக நினைவுகூர்ந்தார் திருவாட்டி சுஷீல் சுந்தரம் கிராஃப்ட். இவர் சேச்சா டேவிஸ் வழித்தோன்றலில் வந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். 

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வுக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார் அவர்.

“என் பாட்டி காலஞ்சென்ற சேச்சா டேவிஸ் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆயினும் அத்தகைய மாண்பு பெற்றவரின் பரம்பரையில் வந்தவர்கள் என்ற பெருமையைச் சுமக்கும் அதேவேளையில், சகமனிதர்களுக்காக அவர் ஆற்றிய சேவையின் பாதையில் பயணிப்பதற்கான கடமையும் குடும்பத்தினராகிய எங்களுக்கு உள்ளது,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் திருவாட்டி சுஷீல்.

1950களில் போருக்குப் பிந்தைய காலங்களில் பரவலாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சேச்சா, கணவரால் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட, ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட பெண்களுக்கும் குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளைச் செய்தார் என்பதைச் சுட்டிய திருவாட்டி சுஷீல், தாமும் தம் குடும்பத்தாரும், இன்றளவும் அவர் காட்டிய வழியில் பெண்களுக்கும் நலிந்தோருக்கும் இயன்றவரையில் உதவ முயன்று வருவதாகப் பகிர்ந்துகொண்டார்.

“பாட்டி சேச்சா மிகவும் துணிச்சலானவர். உலகெங்கிலும் பயணம் செய்து பரந்த மனப்பான்மை கொண்ட கிறிஸ்தவராக இருந்தார். வாரம் தவறாமல் ஆலயத்திற்கு செல்வதுமட்டும் மார்க்கம் அல்ல, தேவையுள்ளோருக்கு உதவிக்கரம் நீட்டுவதுதான் உண்மையான இறைபக்தி என்று பாட்டி என் தாயாருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்,” என்றார் திருவாட்டி சுஷீல். 

பாட்டி சேச்சா டேவிஸின் மாண்பை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் தமது பெற்றோர் திருமதி சாந்தா சுந்தரம், திரு செல்லி சுந்தரம் ஆகியோருக்கும் இருந்ததாக திருவாட்டி சுஷீல் கூறினார்.

‘நம்பிக்கை, அன்பு, சேவை’ ஆகியவற்றைப் பற்றிய கதையுடன் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சிறப்பு தருணங்கள் குறித்த நினைவலைகளையும் தொகுத்து அவர் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்