சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூன் 22ஆம் தேதியன்று குட்மன் கலைகள் நிலையத்தில் உள்ளூர் நூல்களின் காட்சி – வாசிப்பு மற்றும் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் சிறார் நூல்களின் வெளியீடும் நடைபெற்றன.
இனிமையாய் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்களை, குட்மன் கலைகள் நிலையத்தில் உள்ள சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அலுவலக அறையில் பார்வையாளர்கள் வாசித்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘வண்ண வண்ண ஆர்க்கிட்’, ‘வாலோடு பிறந்தவன்’, ‘கருப்பு வண்ணப் பூனை’, ‘ஒற்றைக் கொம்புக் குதிரை’ ஆகிய நான்கு சிறுவர் பாடல் நூல்கள் வெளியீடு கண்டன.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம், நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை உற்சாகத்துடன் வரவேற்றதுடன் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடமளித்த குட்மன் கலைகள் நிலையத்திற்கு நன்றியும் தெரிவித்தார்.
தலைமையுரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன், சிறாருக்கு மிகக் குறைந்த அளவிலேயே படைப்புகள் வெளிவருவதாகவும் எழுத்தாளர்கள் இதைக் கருத்தில்கொண்டு சிறுகதைகளையோ பாடல்களையோ சிறுவர்களுக்கு அதிகம் படைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
‘வண்ண வண்ண ஆர்க்கிட்’, ‘கருப்பு வண்ணப் பூனை’ ஆகிய இரு நூல்களை அறிமுகம் செய்த திருவாட்டி இசக்கி செல்வி, வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்துருவில் வடிவமைக்கப்பட்ட நூல், குழந்தைகளை கவரும் விதத்தில் அமைந்திருக்கிறது என்றும் தமிழ் மொழி ஆர்வத்தை குழந்தைகளிடத்தில் கடத்துவதற்குப் பேருதவி புரியும் என்றும் தெரிவித்தார்.
‘வாலோடு பிறந்தவன்’, ‘ஒற்றைக் கொம்புக் குதிரை’ ஆகிய இரு நூல்களை அறிமுகம் செய்த திருவாட்டி அ.மஹ்ஜபீன், சிறார்களிடத்தில் நன்னெறிக் கருத்துகளை விதைக்கும் விதத்தில் பாடல்கள் எழுதப்பட்டிருந்ததைப் பாராட்டி, இத்தகைய நூல்கள் சிறுவர்களைச் சென்றடைய நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை ஆற்றிய வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. ஜோதி மாணிக்கவாசகம், “இலக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி, இளம்வயதிலேயே இணையச் செயலிகளைவிட நூல்களை அறிமுகப்படுத்துவதில் பெற்றோர் கவனம் செலுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனாலும் செயலிகளைப் பயன்படுத்த விரும்பும் பெற்றோர் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்மொழிச் செயலிகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம்,” என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. தனபால் குமார், சிங்கப்பூரில் படைப்புகளுக்காக இருக்கும் தளத்தைப் படைப்பாளிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘மகிழ்வூட்டும் கற்றல்’ எனும் கல்வி அமைச்சின் நோக்கத்திற்கு இவைபோன்ற நூல்கள் பலனளிக்கும் என்று அவர் கூறினார்.
நூல் வெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்பட்ட ‘சிறுவர் பூங்கா’ எனும் அங்கத்தில், மாணவர்கள் மீரா ஜெய்குமார், அஷ்மிதா அசோக்குமார், ஜானுஷா ஸ்ரீ, சிவ வேதாந்த், ராஜா ஷமிகா, காவ்யா ராகவி ஆகியோர் நூலில் உள்ள பாடல்களைப் பாடிப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
நூலாசிரியர் திருவாட்டி மணிமாலா மதியழகன் ஏற்புரையில், தம் கணவர் திரு. பி.மதியழகன் செயற்கை நுண்ணறிவின் துணையோடு நூல்களுக்குரிய படங்களை வடிவமைத்ததைப் பகிர்ந்துகொண்டார்.
செயற்கை நுண்ணறிவின் வருகை சிறார் இலக்கியத்தைப் புதிய பாணியில் வடிவமைக்கப் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளதாக அவர் கூறினார்.
நூல்களை சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. தனபால் குமார் வெளியிட, வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. ஜோதி மாணிக்கவாசகம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 பேர் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினர் திருவாட்டி ஷோபா குமரேசன் நிகழ்ச்சியைச் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

