சனிக்கிழமை ஜூன் 29ஆம் தேதியன்று 155 மாணவர்களுக்கு 239,350 வெள்ளி மதிப்பிலான உதவித்தொகை சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதி வழியாக வழங்கப்பட்டது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார்.
மாதாந்திர தனிநபர் வருமானம் 1,900 வெள்ளிக்குள் அடங்கியதாக உள்ள இந்து சிங்கப்பூரர், நிரந்தரவாசி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மானியங்களை வழங்கிவருகிறது இக்கல்விநிதி.
பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள் (ஐடிஇ), பொதுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை உபயோகிக்கும் 1,000 முதல் 1,500 வெள்ளி வரையிலான தொகை வழங்கப்பட்டது.
தனியார் கல்வி நிலையங்களில் பட்டயம், பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் வருடாந்தர கல்விக் கட்டணத்தில் 50 விழுக்காடு வரை, அதிகபட்சம் 1,500 வெள்ளிக்கும் 5,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட தொகையை ஆண்டுதோறும் சலுகையாகப் பெறுவர்.
“நமது இளையர்கள் பல்வேறு படிப்புகளை மேற்கொள்கின்றனர்; பலதரப்பட்ட திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்களைத் தமது வாழ்க்கைப் பயணங்களில் இட்டுச் செல்ல இக்கல்வித் தொகைகள் உதவுகின்றன,” என்றார் குமாரி இந்திராணி ராஜா.
தொண்டூழியத்துக்கு எதிர்பாரா வெகுமதி
ஸ்ரீ மாரியம்மன் கோவில் தொண்டூழியர் தர்வின் அஷோக், 20, தற்செயலாக கோவிலின் பலகையில் இக்கல்வி நிதி பற்றிய தகவலைப் பார்த்து விண்ணப்பித்தார். அதன்மூலம் அவருக்கு இந்த உதவித்தொகை கிடைத்தது.
“இந்த நிதி எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது. நான் என் ஐடிஇ படிப்பை மேற்கொண்ட காலத்திலிருந்தே என் பெற்றோரிடமிருந்து பணம் பெறுவதை நிறுத்திவிட்டேன்,” என்றார் தர்வின்.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினிப் பொறியியல் படித்துவரும் இவர், பகுதிநேர வேலையும் செய்து தாமாகவே தன் படிப்பிற்குப் பணம் கட்டுகிறார்.
தொடக்கநிலை ஆறாம் நிலையில் அடிப்படைக் கணிதம் பயின்று அதில் தேர்ச்சிபெறாமல், வழக்கநிலை (தொழில்நுட்பம்) பிரிவில் தன் படிப்பைத் தொடர்ந்த தர்வின், இன்று அதிகப்படியான கணிதம் தேவைப்படும் கணினிப் பொறியியலைப் படிப்பது அவரது உழைப்பைப் பறைசாற்றுகிறது.
தர்வினுக்குத் தன் 50 வயது தந்தை ஒரு முன்மாதிரி. ராணுவத்தில் ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராகப் பண்புரியும் அவரின் தந்தை, ‘நைட்டெக்’ முடித்து ஐந்து பட்டயப் படிப்புகள் மேற்கொண்டு இப்போது தன் பட்டப்படிப்பைப் படித்துவருகிறார்.
எதிர்காலத்தில் தர்வின் பொதுச் சேவைவழி நாட்டுக்குச் சேவையாற்ற விரும்புகிறார்.
லட்சிய சகோதரர்கள்
மோகன் ராஜ், 17, ஐடிஇ மேற்கு வளாகத்தில் மின் பொறியியல் பயின்று வருகிறார். அவரின் சகோதரர் கார்த்திக் ராஜ், 26, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் கணினிப் பொறியியல் படிக்கிறார்.
“இந்நிதி எங்கள் போக்குவரத்துக்கும் உணவுக்கும் பள்ளித் தேவைகளுக்கும் பேருதவியாக இருக்கும். எங்கள் லட்சியங்களுக்கும் துணைபுரியும்,” என்றார் கார்த்திக்.
சிங்கப்பூர்க் கடற்படையில் ஐந்து ஆண்டுகளாக முழுநேரச் சேவை புரிந்த கார்த்திக், அதன் பிறகு சொந்தமாகப் பணம் செலுத்திப் பட்டப்பிடிப்பு மேற்கொண்டுவருகிறார்.
“நான் எதிர்காலத்தில் மின்னிலக்க, உளவுத்துறைப் படையில் தரவு ஆய்வாளராகப் பணியாற்ற விரும்புகிறேன். சமூகத்திற்குப் பங்களிப்பேன்,” என்றார் கார்த்திக்.
“நான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் சிலிகன் வேலியில் பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார் மோகன்.
‘சிங்கப்பூரர் என்ற பெருமை உண்டு’
‘பிஎஸ்பி’ பயிற்சிக் கழகத்தில் உயிர்மருத்துவம் படிக்கும் கீர்த்தனா ராமராஜன், 24, ஒன்றரை ஆண்டுகளுக்குக் கிட்டத்தட்ட 40,000 வெள்ளிக் கட்டணம் செலுத்துகிறார். அதனால், தனக்குக் கிடைத்த சலுகை மிகவும் பயனளித்துள்ளது என்றார் கீர்த்தனா.
“சிங்கப்பூரில் இத்தகைய மானியங்களை வழங்கி அமைப்புகள் கல்விக்குத் துணைபுரிவதால் நான் இங்கு வாழ்வதில் பெருமைப்படுகிறேன். இங்கு முயற்சி செய்தால் முன்னேறலாம்,” என்றார் கீர்த்தனா. ஒரு பெண்ணாக, எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் தடம்பதிக்க விரும்புகிறார் கீர்த்தனா.
விளையாட்டோடு இணைந்த கல்வி
மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு நிர்வாகத் துறையில் பயிலும் ரூபேஷ், 19, பலதுறைத் தொழிற்கல்லூரியில் நுழையவும் எதிர்காலத்தில் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றவும் விரும்புகிறார். தன் இலக்கை அடைய இந்நிதி உதவும் என்றார் ரூபேஷ்.
அடுத்து இவ்வாண்டு தீபாவளிக்குப் பிறகு வழங்கப்படவுள்ள சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதிக்கு ஆகஸ்ட் - செப்டம்பரில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்றார் கல்வி நிதியின் தலைவர் திரு புருஷோத்தமன்.
இக்கல்வி நிதி தோன்றியதற்குக் காரணம், தயாள மனம் படைத்த திரு சிவதாஸ் சங்கரன் (1914 - 2009).
கேரளத்தில் பிறந்த திரு சிவதாஸ், சிங்கப்பூருக்கு 1937ல் குடிபெயர்ந்து ஆசிரியராகத் தொடங்கி, போருக்குப் பின்னர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையாளராகப் பணியாற்றி, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கேற்ப வெற்றிகரமான பங்குச்சந்தை முதலீட்டாளராகத் தானும் வளர்ச்சிகண்டார்.
2009ல் அவர் மறைந்தபின், இந்து மாணவர்களின் கல்விக்கு உதவ அவர் தனது பங்குகளை இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு வழங்கினார்.