தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துயர்துடைத்த தூரிகை: ஃபிரிடா காலோ கண்காட்சி

3 mins read
19b8c23d-34a1-4ad8-8fb4-191a36717118
வருகையாளர் அசைவுகளுக்கு ஏற்ப படங்கள் ஊடாடும் நூதன கண்காட்சியான ‘ஃபிரீடாஸ் யூனிவரஸ்’. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெக்சிகோவைச் சேர்ந்த பழம்பெரும் ஓவியர் ஃபிரிடா காலோவின் உள்ளார்ந்த மெய்நிகர் ஓவிய, ஒளிக்கண்காட்சி தொடங்கி இரண்டு மாதங்களுக்குமேல் ஆனபோதும் கலை ஆர்வலர்களுக்கு அதன் மீதான மோகம் தணியவில்லை.

மரினா பே சேண்ட்ஸ் வளாகத்திலுள்ள அறிவியல், கலை அரும்பொருளகமான ஆர்ட்சைன்ஸ் அரங்கில் ‘லையிலட் பேர்: ஃபிரிடாஸ் இன்னர் வோர்ல்ட்’ என்ற தலைப்பில் அக்கண்காட்சி மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டது.

வேகம், துடிப்பு, பதைபதைப்பு, போராட்டம் உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒளிமிகு நிறங்கள் நிரம்பியவை, ஃபிரிடா காலோவின் தைல ஓவியங்கள்.

கனவு கலந்த மெய்யுலகை நுணுக்கங்கள் நிறைந்த ஓவியங்களாய் வெளிப்படுத்தும் காலோ, பெண்ணியக் கலையுலகில் சிறப்பிடம் வகித்து உலகெங்கும் மனங்களைக் கவர்ந்து வருகிறார். அத்தகையோரில் ஒருவரான தமிழாசிரியர் விக்னேஸ்வரி ரெத்தினம், 43, இந்தக் கண்காட்சி, காலோவின் ஓவியங்களை மேலும் ரசிக்க வைத்ததாகக் கூறினார்.

இருபது ஆண்டுகளுக்குமுன் மெக்சிகோ உணவகம் ஒன்றுக்குச் சென்றபோது ஃபிரிடா காலோவின் சுய ஓவியத்தைக் கண்டதை திருவாட்டி விக்னேஸ்வரி நினைவுகூர்ந்தார்.

“ஓவிய உலகைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். இருந்தாலும், நான் பார்த்த அந்த ஓவியத்தில் இருப்பவர் ஃபிரிடா காலோதான் என்பது எனக்கு அப்போது தெரியாது. அதனை உடனடியாகத் தெரிந்துகொள்வதற்கு வகைசெய்யும் அறிவார்ந்த தொழில்நுட்பமும் அப்போது இல்லை. ஆனால் என்னை அந்த ஓவியம் வெகுவாக ஈர்த்தது,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.

காண்காட்சியைக் கண்டு மகிழ்ந்த தமிழ் ஆசிரியர் விக்னேஸ்வரி ரெத்தினம், 43.
காண்காட்சியைக் கண்டு மகிழ்ந்த தமிழ் ஆசிரியர் விக்னேஸ்வரி ரெத்தினம், 43. - படம்: விக்னேஸ்வரி ரெத்தினம்

அந்தக் காலமும் அதிநவீனமும்

மின்னிலக்க வடிவங்களில் காலோவின் சில ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உடற்குறை மோசமாகி, படுத்த படுக்கையான பிறகு, ஓவியம் தீட்டும் இடமாக இருந்த அவரது மெத்தையின் மெய்நிகர் வடிவமும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

எல்லாத் திசைகளிலும் ஓவியங்களைத் திரையிடும் 360 டிகிரி தொழில்நுட்பத்தின்மூலம் ஓவியத்திற்குள்ளேயே நுழைவது போன்ற அனுபவத்தையும் பங்கேற்பாளர்கள் பெற்றனர்.

காலோவின் முதுகெலும்பைக் காண்பிக்கும் ‘எக்ஸ்ரே’, அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளின் மருத்துவ ஆவணங்கள், அவர் சிகிச்சை பெற்ற ‘அமெரிக்கன் பிரிட்டிஷ் கவுட்ரே’ மருத்துவமனை ஆகிய அரிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

அத்துடன், காலோவின் தங்கையின் பேத்தியான கிஸ்டினா காலோ அல்கலாவின் காணொளிப் பேட்டியும் அவர் கண்காட்சிக்கு இரவல் தந்துள்ள தனிப்பட்ட பொருள்களும் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

கண்ணீர் வளர்த்த கனவுகள்

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஃபிரிடா காலோவின் புகைப்படம்.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஃபிரிடா காலோவின் புகைப்படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபிரிடா காலோவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘ஃபிரிடா’ என்ற படத்தைப் பார்த்து, பின்னர் அவரைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினார் திருவாட்டி விக்னேஸ்வரி.

1907ல் பிறந்த ஃபிரிடா காலோவுக்கு ஆறு வயதில் முடக்குவாதம் ஏற்பட்டது. வலது கால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதற்காகப் பள்ளியில் சக மாணவர்களால் காலோ கிண்டல், கேலிக்கு ஆளானார்.

18 வயதில் பேருந்து விபத்துக்குள்ளான ஃபிரிடா காலோ, கடுமையாகக் காயமடைந்து வெகுகாலம் படுக்கையில் முடங்கிக் கிடந்தார். முதுகுத் தண்டிலும் வேறு பல எலும்புகளிலும் முறிவுகள், வெடிப்புகள் என ஏற்பட்டு அவர் தாளமுடியா வேதனையில் தவித்தார். மருத்துவராகும் அவர் கனவும் சுக்குநூறானது.

துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு ஓவியக் கலை எப்படிப் பயன்படுகிறது என்பதை ஃபிரிடா காலோ ‘ஆர்ட்சைன்ஸ்’ அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஹோனர் ஹார்கர் விவரித்தார்.

கண்காட்சி மூலம் பெற்ற உள்ளார்ந்த அனுபவம் அதிசயமானது எனத் திருவாட்டி விக்னேஸ்வரி வருணித்தார்.

“இது காலோவின் கலைத்திறனைப் பற்றியது மட்டுமன்று. வேதனை சூழ்ந்தபோதும் அவரது மனவுறுதி எப்படி அவரை மிளிர வைத்தது என்பதைப் பற்றியது,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.

இந்தக் கண்காட்சியைக் கண்டதன் மூலம், பெண்ணின் பெருமையும் மதிப்பும் தமக்கு தெரிவதாக சந்தைப்படுத்துதல் அதிகாரி ச ஐஸ்வரியா, 29, கூறினார்.

“தன்னைச் சிறுமைப்படுத்த எண்ணியவர்களுக்கு மத்தியில் தன் கலைப்படைப்பால் தன்னை மிளிரச் செய்தார். கலைச்செறிவுமிக்க இக்கண்காட்சி, ஆணாதிக்கத்திற்கு இடையிலும் நான் நானாகவே மிளிர ஊக்கமளிக்கிறது,” என்றார் அவர்.

இந்தக் கண்காட்சி செப்டம்பர் 1 வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்