தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்தினக்கற்களைக் காட்சிப்படுத்திய நிகழ்ச்சி

2 mins read
f2e2dc4c-3ec3-4ef1-afc7-e9552d5eb2f4
ஜூலை 5 முதல் ஜூலை 7 வரை இந்நிகழ்ச்சி ஃபார் ஈஸ்ட்  பிளாசாவில் நடைபெற்றது. - படம்: பிரீத்தி அசோகன்
multi-img1 of 3

பல நாடுகளிலிருந்து பலதரப்பட்ட ரத்தினக்கற்கள் சிங்கப்பூரில் ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந்த விற்பனை ஜூலை 5 முதல் ஜூலை 7 வரை நடைபெற்றது. இலங்கை, தாய்லாந்து, இந்தோனீசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து ரத்தினக்கற்கள் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் ஒன்பது வணிகக் கடைகள் பங்கேற்றன. நகைக்கடைகளும் கப்பல் வணிகங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. 

நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை முதல்முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்குப் பொதுமக்கள் பலரும் வருகை அளித்தனர்.

மில்லியன் வெள்ளி மதிப்புள்ள ரத்தினக்கற்களும் நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து, இலங்கையிலிருந்து $80,000 மதிப்புள்ள அரிய ‘ராயல் புளூ சஃபையர்’ கல்லும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

வண்ண ரத்தினக்கற்கள், வைரக்கற்கள், தனிப்பயனாக்கப்பட்ட வெள்ளி நகைகள், தங்க நகைகள், ‘ஃபெங்ஷூய்’ ஆலோசனை, தனிப்பயனாக்கப்பட்ட கிரிஸ்டல் வளையல்கள், ‘லேபிடரி’ (ரத்தினக்கற்களை வெட்டுதல்), உள்நாட்டு மற்றும் அனைத்துலக ஆடம்பரப் பொருள்கள் ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் இடம்பெற வைத்தார் அதன் ஏற்பாட்டாளர் சரவணன் காசிநாதன் அலெக்ஸ், 44.

‘மினிஸ்ட்ரி ஆஃப் ஜெம்ஸ்டோன்ஸ்’ கடையை நடத்திவரும் அவர், 18 ஆண்டுகளாக ரத்தினக்கற்களை சேகரித்து வருகிறார்.

2023ல் திறக்கப்பட்ட அவருடைய கடையில் பல புதுமையான கற்களும் அரியவகை கற்களும் உள்ளன. பலதரப்பட்ட ரத்தினக்கற்களை ஒன்றுசேர்த்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.

“ரத்தினக்கற்கள் துறை, போட்டித்தன்மைமிக்க துறை என்றும் அதில் இடம்பெறும் வணிகர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும் மக்கள் நினைக்கின்றனர். இது தவறான எண்ணம்.

“ரத்தினங்களின் அழகைக் காட்சிக்கு வைத்து, மக்கள் அவற்றைப் பார்க்க வேண்டும் என நானும் என் சக வணிகர்களும் விரும்பினோம். அதனால், பல வணிகங்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.

“நாங்கள் இணைந்துள்ளதன் மூலம் எங்கள் வணிகங்கள் வளர்ந்து வருகின்றன என நான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாக ரத்தினக்கற்களைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அது எனக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

“ஒன்பது வணிகக் கடைகளுடன் ஒன்றுசேர்ந்து, ரத்தினக்கற்கள் மீதுள்ள ஆர்வத்தையும் அவை குறித்த தகவல்களையும் மக்களுடன் பகிர விரும்பினோம்,” என்றார் திரு சரவணன்.

ரத்தினக்கற்களை வெட்டும் வல்லுநர் ஒருவர், அவற்றை எவ்வாறு வெட்டுவது என சனிக்கிழமை (ஜூலை 6) மக்களிடம் காட்டினார்.

அதே நிகழ்ச்சியில், கையால் செய்யப்பட்ட நகைகளைக் காட்சிப்படுத்திய சிங்கப்பூர் நிறுவனமான ‘சேவேஜ் ஆர்கிபெலகோ’வின் முதலாளியான திருமதி ரேச்சல், “நாங்கள் ரத்தினக்கற்களுடன் கூடிய வெள்ளி நகைகளை உருவாக்குகிறோம். 

“எங்களின் தயாரிப்புகள் இளையர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதமாக வழங்கப்படுகின்றன. எங்கள் ரத்தினக்கற்கள், பல நாடுகளில் உள்ள வல்லுநர்கள் மூலம் கையால் வெட்டப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப்படுகின்றன.

“பல தலைமுறையாக ரத்தினக்கற்களை வெட்டுபவர்களும் உள்ளனர். இந்தக் கற்கள் வெவ்வேறு வடிவங்களிலும் தனித்துவமான அளவுகளிலும் வருகின்றன.

“கையால் தயாரிக்கப்பட்ட உயர்தர நகைகளை மக்களுக்கு வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததால், இதுபோன்ற நிகழ்ச்சி நவம்பரில் மீண்டும் நடைபெறும் என்று திரு சரவணன் கூறினார். 

குறிப்புச் சொற்கள்