புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை, சமூகத் தாக்கம்

மாற்றத்தை ஏற்படுத்த இளையர்களுக்கான கருத்தரங்கு

3 mins read
50390ba4-ee63-42a4-8f76-8ab7ac831bd4
தங்களது குழுத் திட்டப்பணி விளக்கக்காட்சியின் முன்னால் தன் குழு உறுப்பினருடன் அபிலயணன். - படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் ஜெயா ஐஸ்வர்யா உசேன் பியும் அபிலயணன் மதிவாணனும் தங்களது குழுத் திட்டப்பணிகளின்வழி பங்காற்றி வருகின்றனர்.

இவர்களின் குழுத் திட்டப்பணிகள் இவ்வாண்டின் அனைத்துலக மாணவர் கருத்தரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.

ஹாங்காங்கின் தொழிற்பயிற்சி மன்றமும் (விடிசி) தொழில்நுட்பக் கல்விக் கழகமும் (ஐடிஇ) இணைந்து ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் இந்தக்‌ கருத்தரங்கு, ஹாங்காங்கில் ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை நடைபெற்றது.

‘மாற்றத்தை உருவாக்கும் இளையர்கள்’ என்ற இந்த ஆண்டின் கருப்பொருளையும் ‘புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை, சமூகத் தாக்கம்’ ஆகிய துணைக் கருப்பொருள்களையும் ஒட்டி கலந்துரையாட சுமார் 620 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முதியோர் இணையப் பாதுகாப்பு

நவீன யுகத்தில் முதியவர்கள் இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (கிழக்கு) உயிர்தொழில்நுட்பத் துறையில் பயில்கிறார் ஜெயா, 20. மூத்தோர் இணைய மோசடிகளால் பாதிக்கப்படுவதை உணர்ந்த ஜெயாவும் அவருடைய குழுவினரும் ‘சூப்பர் சீனியர்ஸ்’ என்ற குழுத் திட்டப்பணி மூலம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முனைந்தனர்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை அதிகளவில் பாதிக்‌கும் மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜெயாவின் குழு ஒரு உதவித்தொகுப்பை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கினர்.

இதில் ‘ஃபிஷிங்’ எனப்படும் மின்-தூண்டிலிடல் மோசடிகள், சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகள், முதலீட்டு மோசடிகள் மற்றும் இணைய வர்த்தக மோசடிகள் போன்றவை அடங்கும்.

சந்திப்பு அமர்வுகளின்வழி அவர்கள் பிரச்சினைகளை அடையாளம் காண்பது மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துகொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் மூத்தோருக்குக் கற்பித்தனர்.

கருத்தரங்கில் இடம்பெற்ற பல்வேறு வகையான விளக்கக்காட்சிகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேச்சாளர்களால் படைக்‌கப்பட்டிருந்தன என்றும் அவர்களிடம் தகவல் பரிமாற்றம் மூலம் புதிய தகவல்களைக்‌ கற்றுக்கொண்டதாகவும் ஜெயா சொன்னார்.

“இந்தக்‌ கருத்தரங்கில் நான் பார்த்த பல்வேறு திட்டங்களையும் அவற்றின் புதுமையான தீர்வுகளையும் உத்வேகமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். எதிர்காலத்தில் நிலவும் பிரச்சினைகளுக்‌குப் புத்தாக்‌கத் தீர்வுகளை நான் கண்டுபிடிக்‌க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

நீடித்த நிலைத்தன்மையில் ஆர்வத்தை வெளிப்படுத்திய ஜெயா, அந்தத் துறையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த விழைகிறார்.

“எந்தத் தொழிலில் பணிபுரிந்தாலும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். நமக்கு இருப்பது ஓர் உலகம் என்பதால் இன்றைய தலைமுறையினர் பொறுப்பாக நடந்துகொள்ளாவிட்டால் அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கும்,” என்றார் அவர்.

மன உறுதிக்கு உதவி

தொழில்நுட்பக் கல்விக் கழகம் மத்திய வளாகத்தில் எந்திர மின்னணுவியல் பொறியியல் கல்வியை மேற்கொள்கிறார் அபிலயணன் மதிவாணன், 18. இவர், ‘மைண்ட் ஃபார்டிஃபை’ என்ற தலைப்பில் குழுத்திட்டப்பணி ஒன்றைத் தன் குழுவுடன் உருவாக்கினார்.

தன்னைப்போல் சிங்கப்பூரில் 17 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தத்தை நிவர்த்தி செய்யும் எண்ணத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தக்‌ குழுத்திட்டப்பணி.

அபிலயணனும் அவரது குழுவும் மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மன உறுதியை மேம்படுத்த நினைத்தனர்.

பல்வேறு பயிற்சிகள், செயல்பாடுகள் மூலம் பங்கேற்பாளர்களின் மனநலனை மேம்படுத்தி, அவர்களை வழிநடத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் சுய-கவனிப்பு உதவித்தொகுப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதில் மனநலக் கழகமும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் வழங்கிய சில வளங்களும் எழுதுபொருள்களும் தேநீர் பைகளும் வைக்கப்பட்டிருந்தன.

“பங்கேற்பாளர்கள் என்னோடும் என் குழுவினரோடும் மனந்திறந்து பேசியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, எங்கள் குழுவினரும் அதே வயது வரம்பிற்குள் இருந்ததால் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் முடிந்தது,” என்று அபிலயணன் பகிர்ந்தார்.

கருத்தரங்கிற்குச் சென்றபோது ஹாங்காங் மாணவர்களுடன் கலாசாரப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

“மொத்தத்தில், இந்த அனுபவம் எதிர்காலத்தில் நான் எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்பதைப் பற்றி என்னை மேலும் சிந்திக்க வைத்துள்ளது,” என்றார் அபிலயணன்.

குறிப்புச் சொற்கள்