வள்ளுவத்தை கல்கியின் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் விளக்கும் புத்தாக்க முயற்சியாக ‘பொன்னியின் செல்வனில் வள்ளுவம்’ நிகழ்ச்சி நடந்தேறியது.
சனிக்கிழமை ஜூலை 13 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ‘குறள்4ஆல்’ (kural4all) அமைப்பின் சார்பில் ‘குறளோடு விளையாடு’ நிகழ்வு உட்லண்ட்ஸ் நூலகத்தில் நடைபெற்றது.
தியாகராஜன் நடராஜன் நெறியாளராக நடத்திய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக நூலக வாரியத்தின் ‘ரீட் ஃபோர் புக்ஸ்’ (Read For Books) ஒட்டி 15 நிமிடங்களுக்குப் பார்வையாளர்கள் புத்தகம் வாசித்தனர்.
அதற்கடுத்து நடந்த மழலையர் அங்கத்தில் பிள்ளைகள், குறட்பாக்களையும் அவற்றின் பொருளையும் குறள் சார்ந்த கதைகளையும் கூறிப் பாராட்டு பெற்றனர். பங்குபெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் திருக்குறள் புத்தகமும் ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டன.
அடுத்ததாக, திருக்குறளுடன் கல்கி நாவலை ஒப்பிட்டு ஆராயும் ‘பொன்னியின் செல்வனில் வள்ளுவம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது.
பெரிய பழுவேட்டரையர், வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பூங்குழலி, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான், நந்தினி ஆகிய எட்டு கதாபாத்திரங்களைப் பற்றி எட்டு பேச்சாளர்கள் பேசினர். இந்தக் கதாபாத்திரங்களின் வழி வள்ளுவரின் விழுமியங்களை எடுத்துரைத்தனர்.
கார்த்திகேயன், வானதி பிரகாஷ், அனுராதா, கேந்திரபாலன், லதா, கிருஷ்ணா, மதிவதனா, அழகு தெய்வானை ஆகிய பேச்சாளர்களோடு இந்தக் கருத்தரங்கத்தின் நடுவராக முனைவர் திருமதி சரோஜினி செல்லக்கிருஷ்ணன் வழிநடத்தினார்.
பொன்னியின் செல்வனின் சிறப்பை விளக்கியதோடு பல்வேறு திருக்குறள்களை இணைத்து பேச்சாளர்கள் உரையாற்றினர். திரு ஜோதி மாணிக்கவாசகம், முனைவர் செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் பார்வையாளராக வந்து சிறப்பித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இறுதியாக பேச்சாளர்கள், நடுவர் மற்றும் நெறியாளருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அடுத்த மாத ‘குறளோடு விளையாடு” நிகழ்வு சுவா சூ காங் நூலகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் எனும் அறிவிப்போடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.