அரிய பட்டியலில் மேலும் ஐந்து இந்திய உணவுக்கடைகள்

2 mins read
d81535da-4968-4ef7-9a4a-4023544c438b
‘மிஷேலின் கைட் சிங்கப்பூர் பிப் கோர்மாண்ட் 2024’ பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘பொடி அண்ட் பொரியல்’ உணவகம். - படம்: டினேஷ் குமார்
multi-img1 of 2

‘மிஷெலின் கைட் சிங்கப்பூர் பிப் கோர்மாண்ட் 2024’ (Michelin guide Singapore bib gourmand) பட்டியலில் 11 புது உணவுக்கடைகள் இடம்பெற்றுள்ளன.

மலிவு விலையில் கிடைப்பது உள்ளிட்ட சுவையான உணவுக்கடைகளை அது பட்டியலிடுகிறது.

இவ்வாண்டிற்கான பட்டியலில் ஐந்து புதிய இந்திய உணவுக்கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலோ இந்தியன், முத்துஸ் கறி, லக்னா, பொடி அண்ட் பொரியல், டெல்லி லாகோரி ஆகியவையே அவை.

சைவ உணவகமான ‘பொடி அண்ட் பொரியல்’ வித்தியாசமாக வாரந்தோறும் புதுவகை உணவுகளை வழங்குகின்றது. 

சிராங்கூன் சாலையில் இயங்கும் இவ்வுணவகத்தில் பலாப்பழ பிரியாணி, எடமாமே சுண்டல், ஆரஞ்சுப் பொடி இட்லி, ரயில் கட்லெட் போன்ற உணவுவகைகளைச் சுவைக்கலாம்

தேங்காய் பானம், மாங்காய் மார்கரிட்டா போன்ற புதுமையான பானங்களையும் அங்கு பருகலாம்.

இக்கடையின் துணை உரிமையாளர் கவிதா சக்ரவர்த்தி, 46, “மிஷேலின் வழிகாட்டிப் பட்டியலில் தென்னிந்திய உணவுவகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். இந்த உணவகத்தின்மீது ஆர்வம் கொண்ட ஒரு சிறந்த குழுவினரைக் கொண்டிருப்பது எங்களின் நற்பேறு,” என்றார்.

காக்டெயில், மாக்டெயில் போன்ற பானங்கள் தங்கள் உணவகத்தின் அம்சம் என்றார் அவர். 

“இக்கடையின் நிறுவனர், 75 வயதான ஜமுனா பாட்டி. அவருக்காக அவருடைய மகன் இந்த உணவகத்தை தொடங்கினார். தென்னிந்திய உணவுவகைகள் இட்லி, தோசை மட்டுமல்ல என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, பல புதுமையான உணவுவகைகளைத் தயாரித்தோம்.

‘பொடி அண்ட் பொரியல்’ கடையின் ‘அவகாடோ பலாப்பழப் பப்பட்’.
‘பொடி அண்ட் பொரியல்’ கடையின் ‘அவகாடோ பலாப்பழப் பப்பட்’. - படம்: டினேஷ் குமார்

“ஒவ்வொரு வாரமும் இட்லிக்கு வெவ்வேறு பொடிகளைப் பயன்படுத்துவோம். பலாப்பழ பொடி, ஆரஞ்சுப் பொடி என 12க்கும் மேற்பட்ட பொடிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,’’ என்று திருவாட்டி கவிதா பகிர்ந்துகொண்டார்.

‘பொடி அண்ட் பொரியல்’ கடையின் ‘ஆரஞ்சுப் பொடி இட்லி’.
‘பொடி அண்ட் பொரியல்’ கடையின் ‘ஆரஞ்சுப் பொடி இட்லி’. - படம்: டினேஷ் குமார்

‘மிஷெலின்’ பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவுக்கடைகளில் ஒன்றான டெல்லி லாகோரி, தேக்கா நிலையத்திலுள்ள உணவங்காடி நிலையத்தில் செயல்படுகிறது. ‘நான்’ ரொட்டி மற்றும் ‘பட்டர்’ சிக்கனுக்காகப் பட்டியலில் இக்கடை சேர்க்கப்பட்டது.

“மிஷெலின் பட்டியலில் எனது கடை தேர்ந்தெடுக்கப்பட்டத்தை கேட்டு நான் வியப்படைந்தேன். சாதாரண உணவங்காடி நிலையத்தில் இருக்கும் ஒரு கடை அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது பெருமை அளிக்கின்றது,” என்றார் கடையின் உரிமையாளர் நசீர் அகமது கான், 47.

‘டெல்லி லாகோரி’ உணவுக்கடையின் ‘நான்’ ரொட்டி.
‘டெல்லி லாகோரி’ உணவுக்கடையின் ‘நான்’ ரொட்டி. - படம்: டினேஷ் குமார்

“நாங்கள் தரமான பொருள்களை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்துகின்றோம். மலிவான பொருள்களை நாடுவதில்லை. ஐந்து நட்சத்திர விடுதியில் கிடைப்பது போன்று உணர்வையும் அனுபவத்தையும் வழங்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவையாற்ற விரும்புகின்றோம்,” என்றார் திரு நசீர்.

‘பட்டர்’ சிக்கனுக்கு வாட்டப்பட்ட (பார்பகியூ) கோழியை மட்டுமே தாங்கள் பயன்படுத்துவதே அதன் சிறப்பான சுவைக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்