சிங்கப்பூரில் ‘மைஸ்’ எனப்படும் சந்திப்புகள், வெகுமதிகள், மாநாடுகள், கண்காட்சிகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆகப் பெரிய இடமான சிங்கப்பூர் எக்ஸ்போ, தன் 25வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை ஜூலை 30ஆம் தேதியன்று கொண்டாடியது.
அதை முன்னிட்டு, “வாய்ப்புகள் நிறைந்த விளையாட்டுத் திடல்” என தன் அடையாளத்தை சிங்கப்பூர் எக்ஸ்போ புதுப்பித்துள்ளது.
இதைக் கொண்டாட சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த இரவு விருந்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர், உலகின் தலைசிறந்த ‘மைஸ்’ மையமாக வளர அவர் மூன்று பரிந்துரைகளை முன்வைத்தார்.
“இடப் பயன்பாட்டில் புத்தாக்கத்தை உட்புகுத்தி, ஒரே இடத்தில் பலவித அனுபவங்களை வழங்கவேண்டும். உதாரணத்திற்கு, புதுப்பிக்கப்பட்ட அரினா@எக்ஸ்போ, இசைநிகழ்ச்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகள் இரண்டும் நடைபெற உகந்ததாக உள்ளது.
“இரண்டாவதாக, நாம் 2030க்குள் ஆசிய பசிபிக்கின் ஆக நீடித்த நிலைத்தன்மைமிக்க நகராகும் இலக்கைக் கொண்டுள்ளோம். 2023ல் சிங்கப்பூர் எக்ஸ்போவில் வைக்கப்பட்ட 16,500க்கும் மேற்பட்ட சூரிய தகடுகள் 5,000 மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியீடுகளை ஈடுசெய்தன. இதுபோன்ற முயற்சிகளால் நம் போட்டித்தன்மையை மேம்படுத்தலாம்.
“மூன்றாவதாக, நம் மைஸ் துறையினரை ஆற்றல்படுத்தவேண்டும். அப்போதுதான் தலைசிறந்த மைஸ் அனுபவங்களை அவர்களால் வழங்கமுடியும்.” என்றார் துணைப் பிரதமர் ஹெங்.
என்டியுசி கற்றல் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூரின் ‘மைஸ்’ துறையினரை ஆற்றல்படுத்த, சிங்கப்பூர் எக்ஸ்போவும் ‘என்டியுசி’ கற்றல் மையமும் ஜூலை 30ஆம் தேதியன்று பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டானின் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதன்வழி ‘மைஸ்’ சேவைத் தரத்தை மேம்படுத்த பயிற்சிகளும் பல்வேறு பயிலரங்குகளும் திட்டங்களும் அறிமுகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஏற்கெனவே என்டியுசி கற்றல் மையத்துடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது உறுதுணையாக இருக்கும்.
சிங்கப்பூர் எக்ஸ்போவின் புதிய ‘விளையாட்டுத் திடல்’
‘மார்கெட்பிளேஸ்@எக்ஸ்போ’ எனும் புதுப்பிக்கப்பட்ட உணவகம், ‘டிஏஜி’ உணவகத்துடன் இணைந்த இசைக்கூடம், சிங்கப்பூரின் ஆகப் பெரிய உள்ளரங்கக் கூடைப்பந்து மண்டபம் ஆகியவனவும் எக்ஸ்போவில் புதிதாக உள்ளன.
3,000 முதல் 6,000 விருந்தாளிகள் வரை அமரக்கூடிய இசைநிகழ்ச்சிகளோடு வர்த்தக மாநாடுகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில் அரினா@எக்ஸ்போ அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஒற்றை-இடம் கூரை சூரியத் தகடு அமைப்பு (எட்டு விளையாட்டுத் திடல்கள் அளவுக்குப் பெரிதானது, கிழக்குச் சிங்கப்பூரின் ஆகப் பெரிய மின்வாகன மின்னேற்ற நிலையம், மூலிகைத் தோட்டங்களும் இடம்பெறுவதால் சிங்கப்பூர் எக்ஸ்போ, சிங்கப்பூர் ‘மைஸ்’ நீடித்த நிலைத்தன்மை தங்கச் சான்றிதழை இவ்வாண்டு ஜூலை மாதம் பெற்றது.

