புகைபிடித்தல், காற்றுத் தூய்மைக்கேடு உள்ளிட்ட அம்சங்களைக் குறைப்பதன் மூலம் மில்லியன்கணக்கான நினைவாற்றல் இழப்புச் சம்பவங்களைத் தடுக்க முடியும் அல்லது தள்ளிப்போட முடியும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இருப்பினும், அது சிறிதளவே பலன் தரும் என்று வல்லுநர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
உலகெங்கும் தற்போது 55 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ‘டிமென்ஷியா’ எனப்படும் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலும் மொழித்திறன், சுதந்திரமான நடமாட்டம் ஆகியவற்றை இழந்தும் அவர்கள் தவிக்கின்றனர்.
பல்வேறு நோய்களால் நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும் என்றாலும் அல்சைமர்’ஸ் நோய் பெரும்பாலும் அதற்குக் காரணமாக விளங்குகிறது.
நினைவாற்றல் இழப்பைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆதாரங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வு ஜூலை 31ஆம் தேதி ‘த லேன்சட்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்றும் இந்நோயைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
அப்போது, நினைவாற்றல் இழப்புச் சம்பவங்களில் 40 விழுக்காட்டுக்கும் 12 அம்சங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அனைத்துலக ஆய்வாளர் குழு மதிப்பிட்டிருந்தது.
குறைவான கல்வி, செவித்திறன் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், உடற்பருமன், மனச்சோர்வு, உடலியக்க நடவடிக்கைகளில் ஈடுபடாதிருத்தல், நீரிழிவு, அளவுக்கதிகமாக மது அருந்துதல், அதீத அச்சம் ஏற்படுத்தக்கூடிய வகையில் மூளையில் காயமேற்படுதல், காற்றுத் தூய்மைக்கேடு, சமூகத்துடன் ஒன்றாமல் தனித்திருத்தல் ஆகியவை அவை.
தொடர்புடைய செய்திகள்
அண்மைய ஆய்வில் மேலும் இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பார்வை இழப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல் ஆகியவை அவை.
இந்த 14 அம்சங்களை நீக்கிவிட்டால் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு நினைவாற்றல் இழப்புச் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று அண்மை ஆய்வு கூறுகிறது.
இந்த நோய்க்கான சிகிச்சை அல்லது இதைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல மில்லியன் டாலர் செலவில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பலனளிக்கவில்லை.
உயர் தொழில்நுட்ப முறையில் சிகிச்சைகளை உருவாக்குவதைவிட நினைவாற்றல் இழப்பு ஏற்படக் காரணமான அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள். அண்மை ஆய்வில் கூறப்படும் அம்சங்கள் இந்நோயுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டவை அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

