சிங்கப்பூரின் 59ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா தென்கிழக்காசிய நீர்வாழினக் காட்சியகத்தில் (S.E.A. Aquarium), முக்குளிப்பாளர்கள் நால்வர் நீருக்குள் இருந்தபடி சிங்கப்பூர்க் கொடியைத் தாங்கிப் பிடித்தபடி காட்சியளிப்பர்.
நூற்றுக்கணக்கான கடல் விலங்குகள் சூழ, சிங்கப்பூரின் பிறந்தநாளைக் கொண்டாட இது ஒரு தனித்துவமான வழி.
2022ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். அம்மூன்று நாள்களிலும் பிற்பகல் 1.30 மணி அளவில், தேசிய தினப் பாடல்களுடன், தேசிய தினக் கொடி நிகழ்ச்சி, ‘ஓப்பன் ஓஷன் ஹேபிடாட்’ (Open Ocean Habitat) இடத்தில் நடைபெறும்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘ஓஷன் டோம்’ (Ocean dome) பகுதியில் பிற்பகல் 3 மணிக்கு, ‘மீட் அண்ட் கிரீட்’ நிகழ்வு நடைபெறும். பார்வையாளர்கள் மீன்வளச் சின்னங்களுடன் புகைப்படம் எடுக்கலாம்.
அது மட்டுமல்லாமல், ‘சிங்கப்பூர் 59 உணவுப்பை’யில் கண்காட்சிக்குள் செல்வதற்கான ஒருநாள் நுழைவுச்சீட்டு இடம்பெற்றிருக்கும். அங்குள்ள மலேசிய உணவுக்கடையிலிருந்து ஓர் உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும்.
தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்குளிப்பாளர் மோகன் ராஜா சைத்புத்தி, 29, ஒரு மீன்வள நிபுணர்.
தொடர்புடைய செய்திகள்
“முக்குளிப்பில் நிறைய சவால்கள் உள்ளன. நாம் கொடியை நீருக்குள் எடுத்துச் செல்லும்போது, கடல்வாழ் உயிரினங்கள் பலவும் கொடியைக் கண்டு நெருங்கக்கூடும். எனவே, அவை மிகவும் நெருக்கமாக வரும்போது நாம் கவனமாகவும் இருக்க வேண்டும்.
“நேரமும் ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. நீருக்குள்ளே இருக்கும்போது, மேலே நிலப்பரப்பிலிருந்து ஒலிக்கப்படும் இசையை நம்மால் கேட்க முடியாது. ஆகையால், எங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்து, சரியான நேரத்தில் கொடியோடு நகர்வோம்.
“ஒரு மாதத்திற்கும் மேல் இதற்காகப் பயிற்சி செய்தோம். இது எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல, தனிச்சிறப்புமிக்க வாய்ப்பு. இதனைச் செய்வதில் நான் பெருமைகொள்கிறேன்,” என்று திரு மோகன் கூறினார்.