பொதுவாக, ரயிலில் பயணம் செய்வது பெரும்பாலும் எல்லாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
ரயில், பேருந்து என பொதுப் போக்குவரத்துச் சேவை இனிதாக அமைய வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் 1990களில் இயக்கப்பட்ட முதல் தலைமுறை எம்ஆர்டி ரயில்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை இளந்தலைமுறையினர் அறிந்துகொள்ள அரியதொரு வாய்ப்பு.
வரலாற்று, தேசிய முக்கியத்துவம் கருதி, செயல்பாட்டிலிருந்து முற்றிலும் நிறுத்தப்பட்ட எம்ஆர்டி ரயில் ஒன்றின் பாகங்களை முதன்முறையாக சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் பேணிக் காத்து வருகிறது.
ரயில் கதவுகள், இருக்கைகள், எம்ஆர்டி கட்டமைப்பு வரைபடம் ஆகியவற்றைப் போக்குவரத்து சேவை வழங்குநரான எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடமிருந்தும் நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்தும் தேசிய அரும்பொருளகம் பெற்றிருக்கிறது.
அவை 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எஸ்எம்ஆர்டி சீமென்ஸ் சி651 ரயிலின் பாகங்கள். அந்த ரயில் இவ்வாண்டு பிப்ரவரியில் செயல்பாட்டிலிருந்து அகற்றப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘சமகால சிங்கப்பூர் தொகுப்பு’ (Collecting Contemporary Singapore) திட்டத்தின் ஒரு பகுதியாக அவை பெறப்பட்டுள்ளன.
ஜூரோங் போர்ட் சாலையில் அமைந்துள்ள மரபுடைமைப் பாதுகாப்பு நிலையத்தில் அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் சமகால சமூக வரலாற்றுக்குரிய முக்கிய அங்கங்களை அடையாளம் காண்பதே அத்திட்டத்தின் நோக்கம் என்றார் தேசிய அரும்பொருளகத்தின் துணை வடிவமைப்புக் காப்பாளர் சேமுவல் லீ.
“சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், உணர்வுபூர்வமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எம்ஆர்டி விளங்கி வருவதைக் காண்கிறோம். ஏனெனில், 1980, 90களில் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியபோது, நாட்டின் முன்னேற்றத்தைக் குறிப்பதாக அது அமைந்துள்ளது,” என்றார் திரு லீ.
தேசியத் தொகுப்பில் ரயில் பாகங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறை என்றார் அவர்.
“குழந்தைகளாக இருந்தபோது ரயிலில் பயணம் செய்தபோது, பின்னர் ரயில் கட்டமைப்போடு அவர்களும் வளர்ந்ததைக் காணும்போது, அது உண்மையிலேயே தேசிய அடையாளத்தையும் சிங்கப்பூரர்களின் கூட்டு நினைவையும் எடுத்தியம்புகிறது,” என்று திரு லீ சொன்னார்.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழைய ரயில் பாகங்களைப் பொதுமக்கள் எப்போது காண முடியும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

