நாம் வாழும் நாள்களெல்லாம் நம் வாழ்நாள்கள் ஆகா. நாம் சிரிக்கின்ற நாள்கள்தான் நாம் வாழ்கின்ற நாள்கள். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. எனவே நாம் அனைவரும் சேர்ந்து மக்களை மகிழ்விக்கலாம் எனும் நோக்கத்தில் தான் நகைச்சுவையை ஒரு பாதையாகப் பயன்படுத்துகிறோம்.
‘ஆகஸ்ட் 9 மீடியா” நிறுவனம் வழங்கிய ‘வாங்க சிரிக்கலாம்’ நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் வந்திருந்த திரு ஈரோடு மகேஷ், தமிழ் முரசுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது கூறிய கருத்துதான் இது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கலக்கப் போவது யாரு’ புகழ் நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா, அஸார், டிஎஸ்கே, மதுபாலா, நவீன், ஆந்தக்குடி இளையராஜா உள்ளிட்ட பலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி ‘கார்னிவல் சினிமா’ அரங்கில் நடைபெற்ற வாங்க சிரிக்கலாம்’ நிகழ்ச்சியின்மூலம் சிங்கப்பூர் மக்களைச் சிரிப்பலையில் மூழ்கடித்தனர்.
“கறிவிருந்து இருந்தாலும், கொஞ்சம் இனிப்பு இருந்தால்தான் விருந்து சுவைக்கும் என்பதுபோல, பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையுடன் கொஞ்சம் நகைச்சுவை இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்,” என்றார் மக்கள் மனங்கவர் கலைஞரான பாலா.
தான் பட்டிமன்றப் பேச்சாளராக இருந்தபோதும் மக்களை எளிமையாக சென்றடைய நகைச்சுவை பெரிதும் கைக்கொடுத்ததாகக் கூறிய அறந்தாங்கி நிஷா, அதனால்தான் மக்களைச் சென்றடைய நகைச்சுவைப் பாதையை தெரிவுசெய்ததாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்க் கலைஞர்களை ஆதரிக்கும் முயற்சியாகவும், தமிழ் மக்களை மகிழ்விக்கும் முயற்சியிலும் ‘வாங்க சிரிக்கலாம்’ நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளராக இணைந்ததாகத் தமிழ் முரசிடம் மகிழ்ச்சியுடன் சொன்னார் ‘யோகோ ரைஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ்.
தேசிய தினத்தை முன்னிட்டு வந்துள்ள நீண்ட வாரயிறுதி நாள்களில், மக்களைக் கவலை மறந்து சிரிக்க வைக்க இந்த நகைச்சுவை விழாவை ஒருங்கிணைத்தாகக் கூறினார், ‘ஆகஸ்ட் 9 மீடியா’ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தாமு.
’வாங்க சிரிக்கலாம்‘ நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க 1,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் விற்பனையானதாகவும், எதிர்காலத்திலும் இதுபோன்ற ஏராளமான கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் திரு தாமு நம்பிக்கை தெரிவித்தார்.

