தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசித் திரைகளுக்கு இரையாகும் கண் பார்வை

5 mins read
2d5c6d34-4eb6-4b93-81ca-46834a7f18aa
இருவிழிப் பார்வைக் குறைபாடு இருக்கையில் ‘ஸ்ட்ரபிஸ்மஸ்’ (Strabismus) எனும் பாதிப்பு நேரிடுகிறது. இது கண்களின் தவறான சீரமைப்பு காரணமாக ஏற்படும் இரட்டைப் பார்வையைக் குறிக்கிறது. - படம்: இணையம்

ஆதவனுக்கு வயது 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஐந்து வயது தொடங்கியதிலிருந்தே பொழுதுபோக்கிற்காகத் திறன்பேசியில் விளையாட்டு நடவடிக்கையில் நேரம் செலவழிப்பது இவருக்கு வாடிக்கையாகிப் போனது.

வீடு, அலுவலகம், வேலை என ஓய்வில்லாமல் பல்வேறு பணிகளில் பெற்றோரும் ஈடுபட்டு வந்ததால், தங்கள் மகன் பல மணிநேரம் ஐபேட் உள்ளிட்ட திறன்பேசி சாதனங்களில் கணினி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றில் நேரம் கடத்தி வந்ததை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு சிறுவன் தன் தந்தையிடம், “எனக்கு இரண்டு அப்பா, இரண்டு அம்மா” என்று கூறியிருக்கிறான். அப்போது, மகன் ஏதோ விளையாட்டுத்தனமாகப் பேசுகிறார் என்று நினைத்து, தந்தை அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையே, அச்சிறுவன் தன் பெற்றோரிடம், “என் கண்ணை இப்போது வெளியே வரும்படி செய்து காட்டுகிறேன்,” என்று சொல்லி பலமுறை கருவிழியை மேல், கீழ், முன்புறம் என்று விழிகளை நகர்த்திக்காட்டத் தொடங்கியிருக்கிறார். அதையும் சாதாரணமாக நினைத்த பெற்றோர், அதில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் ஒருநாள் இரவு, ஆதவன், தன் பெற்றோரிடம், “நான் இப்பொழுது என் கருவிழியைப் பல நிலையிலும் நகர்த்திக் காட்டப்போகிறேன் என்று விழியைச் சுழற்ற, விழிப்படலம் வெளியே வருவது போல் பிதுங்கியவாறு அப்படியே நின்றுவிட்டது,” என்றார்.

இம்முறை மகனின் கருவிழியை இயல்பு நிலைக்குக் கொண்டுவர பெற்றோர் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. இது குறித்து தமிழ் முரசிடம் விவரித்தார் சிறுவனின் தந்தை திரு. அகிலன், 48 (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“சம்பவம் நடந்த அன்று பதறிவிட்டோம். எப்போதும் மகன் கருவிழியைச் சுழற்றியவாறு அசைப்பான். சிறிது நேரத்தில் அவனே கண்ணைச் சரிசெய்து விடுவான். ஆனால் அன்று அவன் விழி அப்படியே நின்றுவிட்டது. நாங்களும் நீரைக் கண்களில் தெளிப்பது உள்ளிட்ட பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. அப்போதுதான் என் மகனின் கண்களில் ஏதோ குறைபாடு இருக்கலாம் என்று முதன்முறையாக ஓர் அச்சம் ஏற்பட்டது, “ என்றார் திரு அகிலன்.

உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றாலும் மகனின் கண்களுக்கு என்ன பாதிப்பு என்பதை உடனடியாக இவர்களால் அறிந்துகொள்ள இயலவில்லை. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே தெரியவந்தது, சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது ‘டிப்லோபியா’ என்னும் இரட்டைப் பார்வைக் குறைபாடு என்று.

சிங்கப்பூரில் ‘டிப்லோபியா’ என்னும் இரட்டைப் பார்வைக் குறைபாடு சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், இந்தக் குறைபாட்டுடன் சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தை (எஸ்என்இசி) நாடுவோரின் எண்ணிக்கை, உலக நிலவரத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் என்றும் அண்மையில் ‘எஸ்என்இசி‘ மூத்த மருத்துவ ஆலோசகரான மருத்துவர் யுவோன் லிங் தெரிவித்து இருந்ததும் நினைவுகூரத்தக்கது. 

அந்த வகையில் சிறுவனின் கண்பார்வைக்கு ஆக அதிகளவு தீங்கு விளைவித்தது என்றால்,  திறன்பேசி சாதனங்களில், திரையைப் பார்ப்பதில் இருந்து அவர் தன் கண்பார்வையை விலக்காமல் இருந்தது என்பது மருத்துவம் கண்டறிந்த உண்மை. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவர் யுவோன் சந்தித்த பார்வைக் குறைபாடு நோயாளிகளில் சிறுவன் ஆதவனும் ஒருவர்.

மருத்துவர் யுவோன் சிறுவனுக்கு சிகிச்சையளிக்க துவங்கியபோது பெற்றோரிடம் சிறுவனின் பொழுதுபோக்கு என்ன என்பது குறித்து கேட்கையில், சிறுவன் வெளிப்புற நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்றும் பெரும்பாலும் ‘லெகோ விளையாட்டு’ விளையாடுவது, கணினித் திரையை உற்றுப்பார்த்து வரைவது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்திருப்பதை அறிய முடிந்தது.

மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளை வெளியே செல்லாமல் வீட்டிலேயே நேரத்தைச் செலவழிக்கச் செய்வது, உணவு உண்ணவைக்க உற்சாகப்படுத்துவது என பல நடவடிக்கைகளில் பிள்ளைக்குத் திறன்பேசியைக் கொடுத்து பழக்குவிப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, சிறுவனின் பார்வையைத் திரும்பப்பெற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இன்று ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் மருத்துவச் சிகிச்சை பெற்றதுடன் திறன்பேசியின் திரைகளில் செலுத்தும் நேரத்தைக் குறைத்து விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல், இயற்கையை ரசித்து பார்த்தவாறே நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்வது, போதிய நேரம் தூங்குவது என வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்துகொண்டு இழந்த கண்ணொளியை மீண்டும் பெற்றிருக்கிறார் ஆதவன்.

சிறுவர்களை அவ்வப்போது தாக்கும் இந்தப் பார்வைக் குறைபாடு பெரியவர்களைத் தாக்கும் அபாயம் மிகவும் அதிகம். இளம் வயதில் இந்த பாதிப்பை சரிசெய்வது சாத்தியம். ஆனால் பெரியவர்களிடையே இந்தப் பாதிப்பின் தாக்கம் பார்வையிழப்புக்கும் வழிவகுக்கக்கூடும் என்று எச்சரித்தார் மருத்துவர் யுவோன். 

“‘டிப்லோபியா’ என்பது ஒரு பொருள் அல்லது உருவத்தை  இரண்டு படங்களாக  பார்க்கும் ஒரு நிலை. இருவிழிப் பார்வைக் குறைபாடு இருக்கையில் ‘ஸ்ட்ரபிஸ்மஸ்’ (Strabismus) எனும் பாதிப்பு நேரிடுகிறது. இது கண்களின் தவறான சீரமைப்பு காரணமாக ஏற்படும் இரட்டைப் பார்வையைக் குறிக்கிறது. பெரும்பாலும் கண்ணைச் சுற்றியுள்ள தசைகளின் பலவீனம் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தால் இது ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்,” என்றார் மருத்துவர்.

திறன்பேசிகளுக்கு அடிமையாவது ஆபத்து 

காலவரையறை இல்லாமல் கைப்பேசி, மடிக்கணினி என திறன்பேசித் திரைகளே கதி என்று மக்கள் மூழ்கியிருப்பது அக்கறைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார் மருத்துவர் யுவோன்.

பார்வைக் குறைபாடு பாதிப்பு தொடர்பாக தம்மைச் சந்திக்க வரும் நோயாளிகளின் கைப்பேசியை வாங்கி அவர்கள் திறன்பேசித் திரையில் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளனர் என்பதைத் தாம் சோதிப்பது உண்டு என்று சொன்ன அவர், தற்போது திறன்பேசிச் சாதனங்களுக்கு அடிமையாகும் போக்கைப் பார்க்க முடிகிறது எனவும் சொன்னார்.

‘எஸ்என்இசி‘ மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் யுவோன் லிங்.
‘எஸ்என்இசி‘ மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் யுவோன் லிங். - படம்: ‘எஸ்என்இசி‘

“பிள்ளைகளின் கண் சார்ந்த பிரச்சினைக்காக வரும் பெற்றோரும்கூட கைப்பேசித் திரையை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.

“எனவே, பிள்ளைகள் கணினி விளையாட்டுகள், கைப்பேசிகளில் மூழ்கிடப் பெற்றோரும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறார்கள். பெற்றோர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாமல், பிள்ளைகளின் கண்பார்வை மீட்டெடுப்பதற்கான பங்கை மருத்துவர் மட்டும் ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நீடித்த நன்மை பயக்காது,” என்றார் மருத்துவர். 

கண்பார்வை பாதிப்பு, அல்லது குறைபாட்டுடன் வருவோர் சிகிச்சை குறித்துக் கேட்பதில் மும்முரமாக இருப்பதைச் சுட்டிய மருத்துவர் யுவோன், பிரச்சினைக்கான ஆணிவேர், திறன்பேசி உள்ளிட்ட இதரச் சாதனங்களை அவரவர் கையாளும் விதத்தில்தான் உள்ளது என்பதை உணர மறுப்பது கவலைக்குரியது என்று விளக்கினார்.

“கைப்பேசிகளைத் தொலைபேசியாக மாத்திரம் பாவித்துப் பயன்படுத்த வேண்டும். பாதிப்பு வந்த பிறகு மேற்கொள்ளும் சிகிச்சையைக் காட்டிலும் கண்பார்வைக் கோளாறு வருமுன் காப்பதே சிறந்தது. தெளிவான கண்பார்வைக்கான தீர்வு அவரவரிடம்தான் உள்ளது,” என்றார் மருத்துவர் யுவோன்.

“போதிய தூக்கம் நிச்சயம் வேண்டும். அறைக்குள்ளேயே நேரம் செலவழிக்காமல், ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பது, மரம் பறவைகள் என இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பது என வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். புத்தகங்கள் உள்ளிட்ட எவற்றையும் கண்களுக்கு மிக அருகாமையில் வைத்து மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருப்பதும் தவிர்க்க வேண்டியதே,” எனக் கண் நலன் பேணிடும் பழக்கங்களை விவரித்தார் மருத்துவர்.

“கண்பார்வை குறைபாட்டைச் சரிசெய்ய, தனிநபர்கள் திறன்பேசியின் திரையில் செலுத்தும் நேரத்தைக் கட்டுக்குள் வைத்து மருத்துவர்கள் பயன்மிக்க சிகிசிச்சையளிக்க உதவிடுங்கள்,” என வலியுறுத்தினார் அவர்.

குறிப்புச் சொற்கள்