உடல் நலம், ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், மாவுச்சத்து நிறைந்த அரிசியைத் தவிர்த்து, அதனை விட நார்ச்சத்து, புரதச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுகளைப் பலரும் உண்ணத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக எடையைக் குறைக்க விரும்புவோர், நீரிழிவு பாதிப்புடையவர்கள் இதனை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்ட கனிம சத்துகளும் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன.
இந்தியர்கள் பொதுவாக உண்ணும் இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல் ஆகியவற்றை தினை, சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைக்க முடிவதால் இந்தியச் சமூகத்தினரிடையே இவை பிரபலமாகியுள்ளன.
சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை பயக்கின்றன. அதேசமயம், உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய சில நுண் ஊட்டச்சத்துக்களும் இவற்றில் காணப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தி, தேவையான சத்துகளை மட்டும் பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
அரிசி சமைப்பதுபோல அப்படியே சமைக்காமல், சிறுதானியங்களை சற்று வறுத்த பின்னர் சமையலுக்கு பயன்படுத்துவது அவசியம். இவ்வாறு செய்வது தானியங்களை மிருதுவாக்கி, அவற்றை ஆவியில் வேக வைக்கும் உணவுகளாகத் தயாரிக்க ஏதுவாக்குகிறது. செரிமானக் கோளாறுகளைக் குறைக்கிறது.
அதேபோல நேரடியாக தானியங்களை பயன்படுத்தாமல், முளைகட்டிய பின் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. கேழ்வரகு, கம்பு, தினை, சோளம் ஆகிய சிறுதானியங்கள் முளைகட்டிப் பயன்படுத்த ஏதுவானவை.
ஒன்றுக்கு மேற்பட்ட தானியங்களைக் கலந்து பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றை முறைப்படி அலசி, மாவாக அரைத்துப் பயன்படுத்தலாம். இவ்வாறு சிறுதானியங்களை முறைப்படி பயன்படுத்துவதால், தைராய்டு உள்ளிட்ட பக்க விளைவு ஏற்படாமல் தடுக்க சாத்தியமுள்ளது.
பயன்படுத்தும் முறைகள்
பொதுவாக சோறு அதிகம் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் ஆகிய தானியங்களை வறுத்து சாதத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
சம்பா கோதுமையைப் பயன்படுத்தி பொங்கல், கிச்சடி உள்ளிட்ட உணவுகளை சமைப்பதற்கு பதிலாக வரகு, சாமை, குதிரைவாலியுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்யலாம். இது ஆரோக்கியமான இரவு உணவாகும்.
இவை தவிர, கோதுமைக்கு பதிலாக பல சிறுதானியங்கள் கொண்டு செய்யப்படும் சப்பாத்தி, கூழ், இடியாப்பம் போன்றவற்றை காலை உணவாக உட்கொள்ளலாம். இனிப்பு கார வகைகளையும் அரிசிக்கு பதிலாக சிறு தானியங்கள் சேர்த்து செய்யலாம்.
நோய் பாதிப்புகள் ஏதுமில்லாத பெரியவர்கள் அன்றாடம் ஒருவேளை சிறுதானியம் உட்கொள்வது நல்லது. செரிமான மண்டலக் கோளாறுகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப வாரம் ஓரிருமுறை உட்கொள்வது சிறந்தது.

