சிங்கப்பூர் இந்திய, இந்தோனீசிய கலாச்சாரங்களின் சிறந்த கூறுகளைப் போற்றும் விதமாக அவற்றின் பாரம்பரிய நாட்டிய, நாடக நிகழ்ச்சி ‘பிரம்பனன்’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.
சிங்கப்பூரின் நுண்கலை அமைப்பான ‘சியாமா’வின் (SYAMA) இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக எட்டு இந்திய பரதநாட்டியக் கலைஞர்கள், ஏழு பாடல்களுக்கு நடனங்களைப் படைக்கவுள்ளனர்.
வீணை, புல்லாங்குழல், மிருதங்க இசைக் கலவையில் அமைந்த பாடல்களுக்கு, சிற்பங்களின் வடிவங்களுக்கு உயிரூட்டும் வண்ணம் அமையும் இந்த நடன நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
ஏறத்தாழ 1,500 ஆண்டுகள் நெடிய இந்திய-இந்தோனீசிய (ஜாவனீஸ்) வரலாற்றுத் தொடர்புக்குச் சான்றாக விளங்கும் ‘பிரம்பனன்’ எனும் கோவிலின் பல்வேறு கூறுகளை அடிப்டையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சி.
அருண் மகிழ்நன், நளினா கோபால் தொகுத்த ‘ப்ரம் சோஜோர்னர்ஸ் டு செட்டிலர்ஸ்’ (From Sojourners to settlers) என்ற புத்தகம், சிங்கப்பூர் துறைமுகத்தில் ‘சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்’ வந்தடைந்தபோது கிடைத்த கல்லின் உடைந்த பகுதி குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது. முற்றிலும் புரிந்து கொள்ளப்படவில்லை எனினும், அது ‘கேசரிவ’ எனும் சொல்லைக் கொண்டிருப்பதாகவும், அது ‘பரகேசரிவர்மன்’ என்ற பெயரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
சோழர்கள் தங்கள் ஆட்சியை இலங்கைக்கு விரிவுபடுத்தியதுடன் சுமத்ரா, ஜாவா தீபகற்பம் வழியாக சீனா வரை வர்த்தக வழிகளைக் கொண்டிருந்தனர் என்கிறது வரலாறு.
“தொன்மத்தைப் பறைசாற்றும் விதமாக சோழர்கள் காலத்திய கட்டடக் கலையின் தாக்கத்துடன் இந்து கடவுள்கள், ராமாயணக் காட்சிகள், இந்திய இந்தோனீசிய இசைக்கருவிகள் உள்ளிட்ட ‘பிரம்பனன்’ கோவில் சொல்லும் கலாசாரக் கூறுகளையும், நாட்டுப்புறக் கதைகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ள இந்த நாட்டிய, நாடகம் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறோம்,” என்றார் இந்த அமைப்பின் நிறுவனரும், வீணைக் கலைஞருமான ராம்குமார் வாசுதேவன்.
ராம்குமாரின் எண்ணத்தில் உருவான இந்த நிகழ்ச்சியை சிங்கப்பூரின் மற்றொரு நடன அமைப்பான ஸ்வர்ண கலா மந்திருடன் இணைந்து நடத்த உள்ளனர் ‘சியாமா’ குழுவினர். இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் டாக்டர் சுஜாதா மோகன், உள்ளூர் நடனக் கலைஞர் ஸ்வர்ண வர்ஷா குருமூர்த்தி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீகணேஷ் வரிகளில் அமைந்துள்ள பாடல்களை உள்ளூர் இசைக் கலைஞர்களான ராஜா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பாடியுள்ளனர்.

