சென்னையைச் சேர்ந்த முழுநேர பரதநாட்டியக் கலைஞர் ஹரிணி ஜீவிதா, ஆறு வயது முதல் பரதநாட்டியம் கற்று, 70க்கும் மேற்பட்ட தனி நாட்டிய நிகழ்ச்சிகளைப் படைத்து 23 ஆண்டுகளாக இக்கலையில் முழுமூச்சாகச் செயல்படுகிறார்.
ஊனுடம்பை ஆலயமாகக் கருதும் பண்புக்கு ஏற்றாற்போல் திருவாட்டி ஹரிணி, அபிநயங்களாலும் அங்க அசைவுகளாலும் காஞ்சிபுரத்தின் வரதராஜ பெருமாள் கோயிலின் 10 நாள் பிரம்மோற்சவ விழாவைச் சித்திரிக்கும் நடனப் படைப்பை வழங்கவுள்ளார்.
தேசிய பல்கலைக் கழக வளாகத்திலுள்ள பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் (University Cultural Centre) ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) ‘வரதராஜம் உபாஸ்மஹே’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சிங்கப்பூரின் அப்சராஸ் ஆர்ட்ஸ், இந்நிகழ்ச்சியைச் சேர்ந்த கலைஞர்களை உபசரிக்கிறது.
வைணவர்களால் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றுடன் காஞ்சிபுர வரதராஜ பெருமாள் காேயில் ஆகப் பிரபலமான தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
“40 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அத்தி வரத தரிசனத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயில் மிகவும் பிரபலம் அடைந்தது,” என்று கூறிய திருவாட்டி ஹரிணி, அத்திவரதர் நிகழ்வையும் தம் நடனத்தில் கொண்டு வரவுள்ளார்.
வாய்ப்பாட்டில் ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், மிருதங்கத்தில் குரு பரத்வாஜ், புல்லாங்குழலில் வி. முத்துக்குமார், வீணையில் அஞ்சனி ஸ்ரீநிவாசன், வயலினில் நந்தினி சாய் கிரிதர், வேத பாராயணத்திற்கு சங்கர சாஸ்திரிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் அங்கம் வகிப்பர்.
சங்கீத மேதை தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றுடன் தொடங்கும் இவரது நடனப் படைப்பு, சமயப் புலவர் வேதாந்த தேசிகரின் ‘அடைக்கலப்பத்து’ என்ற தமிழ்ப்பாட்டின் வரி ஒன்றுடன் முற்றுபெறும்.
உண்மைத்தன்மை முக்கியம்
தொடர்புடைய செய்திகள்
கட்டுக்கோப்பு, விடாமுயற்சி, நாட்டியத்தின் மீதான காதல் ஆகிய பண்புகள் திருவாட்டி ஹரிணியை இந்தக் கலைப் பயணத்தில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
நீடித்த வெற்றிக்கு முக்கியம் தெளிவான சிந்தனையும் நிதானமான செயல்பாடும் என்று திருவாட்டி ஹரிணி கூறுகிறார்.
திறன்களை மெருகேற்றுவதற்குப் பயிற்சி முக்கியம் என்றாலும் அது நம் ஆரோக்கியத்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது என்பதை திருவாட்டி ஹரிணி வலியுறுத்துகிறார்.
“ஒவ்வொரு சரீரமும் தனித்தன்மை வாய்ந்தது. சிலரது உடல் இயற்கையிலேயே உரமாக இருக்கும். வேறு சிலர், யோகாசனம், உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தங்களைப் பராமரிக்க வேண்டி வரும்,” என்று அவர் கூறினார்.
கலைஞர்களுக்கு உண்மைத்தன்மை முக்கியம் என வலியுறுத்தும் திருவாட்டி ஹரிணி, “மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்றோ தற்காலப் போக்குகளைப் பின்பற்ற வேண்டும் என்ற முனைப்பிலோ சொந்த உடலை வறுத்திக்கொள்ளக்கூடாது,” என்கிறார்.
“உங்களுக்கு உண்மையாக இருக்கும்போது நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்,” என்றும் அவர் கூறினார்.
உண்மையான ஆர்வம் என்பது உணர்ச்சிகளிலிருந்து வெளிவரும் உத்வேகத்திலிருந்து மாறுபட்டது என்பதையும் திருவாட்டி ஹரிணி தெளிவுபடுத்துகிறார்.
“நம்மைப் பற்றிய பிறரது கருத்துகள் காலத்திற்கேற்ப மாறும். எனவே,பிறர் நம்மைப் பாராட்டினாலும் குறைகூறினாலும் எதற்கும் வசப்படாமல் நமக்கு நாமே ஊக்கம் கொடுப்பது சிறந்தது,” என்றார் திருவாட்டி ஹரிணி.

