தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விடுபடும் வழிகள்

3 mins read
‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதைப்போல் நவீன உலகில் திறன்பேசி இன்றி ஒரு நாளை நகர்த்த முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது என்றே கூறலாம்.
bbc0a8ac-206a-4c8b-b031-9aec949d2f7f
இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாகாமலும் பிற மோசடிகளில் சிக்காமலும் காத்துக்கொள்ள மின்னிலக்கச் சாதனங்களை முறையாகப் பயன்படுத்தத் தேவையான அறிவு அவசியம். - படம்: பெக்சல்ஸ்

திறன்பேசியில் தொடங்கி, கைக்கணினி, மடிக்கணினி, திறன் கைக்கடிகாரம் என ஒவ்வொருவரும் பல்வேறு மின்னிலக்கச் சாதனங்களை வைத்திருப்பது சாதாரணமாகிவிட்டது.

பலருக்கு இவை வாழ்வின் அங்கங்களாகவே மாறிவிட்டன. அலுவலகப் பணி மேற்கொள்ள, கட்டணம் செலுத்த, வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த என அத்தியாவசியப் பணிகளுக்கு நாம் மின்னிலக்கச் சாதனங்களைச் சார்ந்துள்ளோம். மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்கவும் கல்வி சார்ந்த குறிப்புகளை எடுக்கவும் மின்னிலக்கச் சாதனங்கள் உதவுகின்றன.

நாள் முழுவதும் இவற்றில் பொழுதைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும் இச்சாதனங்களில் மூழ்கியிருப்பது மூளைக்கும் உடலுக்கு நல்லதன்று என்கின்றனர் மருத்துவர்கள். இது தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல உடல்நல, மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

உணவிலுள்ள நச்சுத்தன்மை உடலில் சத்து சேர்வதைத் தடுப்பதுபோல, அளவுக்கு அதிகமான இணையப் பயன்பாடு ஏற்படுத்தும் பாதிப்பால் மனத்துக்கு நன்மை விளைவிக்கும் பண்புகள் குறைகின்றன. இதனைத் தவிர்க்க உடலுக்கு ‘டீடாக்ஸ்’ செய்வதுபோல, ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ எனும் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டிலிருந்து விலகி இருப்பதும் அவசியம்.

பெரியவர்களைவிட, சிறுவர்களும் வளரிளம் பருவத்தினருமே இந்த அச்சுறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகின்றனர். குறிப்பாக, குழந்தைப் பருவத்திலிருந்து பதின்ம வயதுப் பருவம் முடிவுறும் வரை மூளை படிப்படியாக வளர்ச்சியடையும்.

அந்த வயதில் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்வதை விடுத்து மின்னிலக்கச் சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் கண், கழுத்து, முதுகெலும்பு போன்றவற்றில் தொந்தரவு ஏற்படுகிறது.

திரையில் செலவிடும் நேரம் அதிகரிப்பதால், ஏதாவதொன்றில் குறைந்தது 20 நிமிடங்கள் கவனம் செலுத்த முடியும் எனும் நிலை மாறி, அது சராசரியாக ஐந்து நிமிடங்களாகக் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதீத மின்னிலக்கப் பயன்பாட்டால் நிஜ வாழ்க்கையின் சின்னஞ்சிறு மகிழ்ச்சிகள் புறக்கணிக்கப்பட்டு, இணைய வாழ்வே போதுமானது எனும் நிலைக்கு மூளை பழகிவிடும். இதனை ‘நெக்லெக்டிங் ஆல்டர்நேட்டிவ் பிளஷர்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒருவருக்குப் பிடித்த சம்பவம் ஏதேனும் நடக்கும்போது மனித மூளையில் இருக்கும் ‘ரிவார்டு சென்டர்’ எனும் பகுதி தூண்டப்பட்டு மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். அதிக மின்னிலக்கப் பயன்பாடு காரணமாக ஒரு கட்டத்தில் அதனைத் தவிர வேறெதுவும் மகிழ்ச்சியைத் தர முடியாது எனும் நிலை ஏற்படும்.

சமூக ஊடகம் வழி பிறரது வாழ்வைப் பார்த்து அதனுடன் தங்களது வாழ்க்கையை ஒப்பிடுவதால், தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான எதிர்மறைச் செய்திகளைப் பார்ப்பதும் மனத்தைப் பாதிக்கலாம். எப்போதும் இணைய விளையாட்டுகளில் மூழ்கி இருப்பதும் மூளையை மழுங்கச் செய்கிறது.

மின்னிலக்கச் சுழலிலிருந்து விடுபடும் வழிகள்

‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ மேற்கொள்வதன் முதல் படியாக, அத்தியாவசியப் பணிகளைத் தவிர்த்து மற்ற நேரங்களில் மின்னிலக்கச் சாதனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நாளொன்றுக்கு ஓரிரு முறை மட்டுமே முக்கியமில்லாத தகவல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னை அறியாமல் நேரத்தை விழுங்கும் ‘இன்ஃபைனைட் ஸ்க்ரோலிங்’கைத் தவிர்க்க, முழுநேர விளக்கக் காணொளிகளைப் பார்க்கவோ ஒலிப் புத்தகங்களையோ வலையொளிகளையோ கேட்கலாம். பின்னர் படிப்படியாக வேறு பொழுதுபோக்குக்கு மாறலாம்.

ஒரு நாளைக்கு சில மணிநேரம் மின்னிலக்கச் சாதனங்களை உபயோகிக்க முடியாதபடி பொழுதுபோக்குச் செயலிகளைப் பூட்டி வைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அலுவலகத்திலோ வேறு பணியிலோ முழுக் கவனம் செலுத்த முயற்சி செய்யலாம்.

இணையத்துக்கு அதீத அடிமையாகியிருப்பதாக உணர்ந்தால் சில காலத்துக்கு அடிப்படைக் கைப்பேசிக்கு மாறலாம்.

உணவுண்ணும் மேசை, படுக்கை, கழிவறை உள்ளிட்ட வீட்டின் சில அறைகளில் திறன்பேசிக்கு அனுமதி இல்லை எனும் வழக்கத்தை ஏற்படுத்தலாம்.

காலையில் எழுந்தவுடன் குறைந்தது ஒரு மணி நேரம் திறன்பேசி பார்க்காமல் இருக்கலாம். உணவுண்ணும்போதும் நண்பர்கள், குடும்பத்துடன் இணைந்திருக்கும்போதும் சாதனங்களில் மூழ்கியிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

திறன்பேசியின்றி மூளையைச் சோர்வின்றி வைத்துக்கொள்ள, புத்தகங்கள் வழியோ நேரடி வகுப்புகள் மூலமாகவோ புதிய மொழியைக் கற்கலாம். இயற்கையுடன் நேரம் செலவிடுவது, படம் வரைதல் உள்ளிட்ட கலை, கைவினைப் பொருள்கள் செய்யக் கற்றுக் கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்