எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், முன்னைய தலைமுறையினரைவிட இளைய தலைமுறையினர்க்குப் போட்டிமிக்க சூழல் உள்ளது என்று இந்திய விஞ்ஞானி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
அதனை எதிர்கொள்ள கணிதம், அறிவியல், தொடர்புத்திறன் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் தனிச் செயலாளராகப் பணியாற்றியவருமான முனைவர் பொன்ராஜ் கூறினார்.
இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளின் பொதுக் கொள்கை உருவாக்கங்களில் பங்களிப்பவருமான அவர், சிங்கப்பூரில் ‘இசையுடன் கூடிய அபாக்கஸ்’ கற்றல் திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் இவ்வாறு கூறினார்.
சுறுசுறுப்பு, திறன், சுய கற்றல் ஆகிய மூன்றும் இளையர்களின் வெற்றிக்கு வழி என்று அவர் குறிப்பிட்டார்.
அடிப்படைக் கணிதப் பாடத்தை நன்கு கற்க அபாக்கஸ் ஒரு சிறந்த முறை என்ற அவர், “எட்டு நிலைகளில் அபாக்கஸ் பாடத்திட்டத்தை உருவாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் ஓர் இசையை அடிப்படையாக அமைத்துத் தாள அடிப்படையில் எளிதாகக் கணிதம் கற்கும் முறையை ‘எச்எம்எச் அனைத்துலகக் கல்வி ஆலோசனை நிறுவனத்தினர் அறிமுகம் செய்துள்ளனர். அதனைத் தொடங்கி வைத்துள்ளேன்,” என்றார் முனைவர் பொன்ராஜ்.
இத்திட்டம் எட்டு நிலைகளில் வகுக்கப்பட்டு, வாரம் இரு வகுப்புகளாகப் பிரித்துக் கற்பிக்கப்படுகிறது.
“மாணவர்கள் பலரும் செவிப்பொறியை அணிந்தவாறே எல்லாப் பணிகளையும் மேற்கொள்வது இயல்பாகியுள்ளது. அதனை நல்ல முறையில் பயன்படுத்தி, மெல்லிய இசையுடன் கணிதம் கற்பதை ஊக்குவிக்க எண்ணினோம். அப்படி உருவானதே இந்த இசையுடன் கூடிய அபாக்கஸ்,” என்றார் எச்எம்எச் அனைத்துலகக் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஹனிஃபா இக்பால்.
தொடக்கநிலையிலேயே இதனைக் கற்பது, திறனை அதிகரித்து நீண்டகால ஆதரவு வழங்கும் என்றும் மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“கல்வி ஆதரவில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட நிறுவனம் எச்எம்எச். புதிய, மாறிவரும் உலகுக்கேற்ப இன வேறுபாடின்றிச் சிங்கப்பூர் மாணவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு ‘ஐ ஆன் டெக்’ நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்,” என்று திரு இக்பால் கூறினார்.
அத்துடன், ‘‘எச்எம்எச் டெக் ஹப்’ எனும் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுவோர்க்கு தேவைப்படும் நவீனத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளதாக அவர் சொன்னார்.

