சிங்கப்பூரில் பல சமயத்தினர் ஒற்றுமையாக வாழும் போக்கை ஆராய்ந்து, அதில் கண்டறியப்படும் சிறந்த அம்சங்களை தாய்லாந்தில் அமல்படுத்தும் நோக்குடன் அந்நாட்டின் சமய விவகாரத் துறையினர் சிங்கப்பூர் ஆலயங்களில் கடந்த வாரம் ஆய்வு நடத்தினர்.
சிங்கப்பூர் எவ்வாறு வெவ்வேறு சமயத்தினரிடையே சமயம் சார்ந்த உரையாடல்களை ஊக்குவிக்கிறது, இந்து சமயத்தை எவ்வாறு நிலைக்கச் செய்கிறது போன்றவற்றைக் கண்டறிவது இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என ஆய்வாளர்கள் கூறினர்.
தாய்லாந்திலிருந்து இங்கு வந்திருந்த புத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து, சீக்கியப் பிரதிநிதிகள் ஆய்வை மேற்கொண்டனர்.
தாய்லாந்திலும் சிங்கப்பூரிலும் பல சமயங்களைச் சேர்ந்தோர் ஒன்றாக வாழ்வதாகவும் சிங்கப்பூரில் இச்சூழ்நிலை கையாளப்படும் விதம் நல்லதொரு முன்னுதாரணமாக அமைவதோடு பல முக்கியக் கற்றல் கூறுகளைக் கொண்டுள்ளதாகவும் தாய்லாந்தின் சமய விவகாரத் துறையின் தலைமை இயக்குநர் செய்யபொன் சுக்-இயாம் கூறினார்.
“இருநாட்டு ஆலயங்களுக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக, இந்து கோவில்களில் திராவிட கட்டுமான பாணிகள் அதிகம் தென்படுகின்றன.
“இருநாட்டு ஆலயங்களையும் ஒப்பிடுகையில், தாய்லாந்து ஆலயங்களில் பக்தர்கள் அதிகம் ஒன்றுகூடினாலும், இங்கும் ஆலயங்களுக்கு அதிக மரியாதை வழங்கப்படுவது நன்கு புலப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஆலயங்கள் அன்னதானங்கள், நன்கொடை திரட்டு போன்ற சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது நெகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
“சிறுபான்மையினராக இருப்பினும், இங்குள்ள இந்துக்கள் கொண்டுள்ள பக்தி எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அதோடு, அவர்களது தினசரி பிரார்த்தனைகளைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆய்வு சமயம், கலாசாரம் சார்ந்த ஆய்வில் சிங்கப்பூர்-தாய்லாந்து உறவை வலுப்படுத்த உதவும் முதல்படி என தாய்லாந்து சமய விவகாரத் துறை கூறியது.
எதிர்காலத்தில் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தாய்லாந்தில் இத்தகைய ஆய்வுகளை நடத்துவர் என்றும் அத்துறை நம்பிக்கை கொண்டுள்ளது.