தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவராகும் முயற்சியில் மூன்றாம் முறை வெற்றி

4 mins read
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் மருத்துவப் பள்ளி தனது வரலாற்றிலேயே ஆக அதிகமாக இவ்வாண்டு 190 புதிய மாணவர்களுக்கு வெள்ளைச் சீருடையை வழங்கி வரவேற்றது.
6cc2375f-cac1-48ea-b8f9-dbaa1709375e
தன் வெள்ளைச் சீருடையை அணிந்து மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கும் ‌ஷிவகிரி நாதன் ஜெயன், 22. - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

முதியவரைப் பேணும் மனமும் முயற்சியைக் கைவிடாத உறுதியும் படைத்தவர் ‌ஷிவகிரி நாதன் ஜெயன், 22.

என்யுஎஸ், என்டியு என இரு மருத்துவப் பள்ளிகளுக்கும் ஈராண்டுகளாக விண்ணப்பித்துத் தோல்வியுற்ற இவருக்கு மூன்றாம் முறை வெற்றி கிட்டியது.

“முதன்முறை எனக்கு நேர்காணல் அழைப்பு வந்தது. இரண்டாம் முறை அதுவும் வரவில்லை,” என்ற ‌ஷிவகிரி, தன் குடும்பம், நண்பர்கள், விரிவுரையாளர்கள் ஆதரவுடன் மூன்றாம் முறையும் விண்ணப்பித்து வெற்றி கண்டுள்ளார்.

மருத்துவத் துறைமீது இவரிடம் நாட்டத்தை விதைத்தது அவருடைய பாட்டியும், தாதியாகப் பணிபுரியும் தாயாருந்தான்.

“என் பாட்டி மிகவும் பாசமானவர். எனது சிறுவயதில் அவர் என்னை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வார்,” என்றார் ஷிவகிரி.

தன் வெள்ளைச் சீருடையைப் பெற்று மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கும் ‌ஷிவகிரி நாதன் ஜெயன், 22.
தன் வெள்ளைச் சீருடையைப் பெற்று மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கும் ‌ஷிவகிரி நாதன் ஜெயன், 22. - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஆனால், ‌ஷிவகிரி உயர்நிலை இரண்டில் பயின்றபோது அவருடைய பாட்டிக்கு மறதிநோய் (அல்சைமர்ஸ்) இருப்பது கண்டறியப்பட்டது.

“பேனா வைத்த இடத்தை மறந்துவிடுவார். அது சாதாரண மறதிதான் என எண்ணி நாங்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. நாளடைவில் அது மோசமானது. அதனால், என் பாட்டியும் மாறினார், அடிக்கடி கோபப்பட்டார். நாங்கள்தான் அவருடைய குடும்பம் என அவருக்குத் தெரிந்தும் யார் யார் என அவருக்கு அவ்வளவாகத் தெரியாமல் போயிற்று. அவர் பட்ட துன்பங்களைப் பார்த்து எனக்கும் மிகுந்த மனவருத்தம். அதனால்தான் மருத்துவராகும் எண்ணம் வந்தது,” என்றார் ஷிவகிரி.

அக்குறிக்கோளை அடையும் முதற்படியாக, போவன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்ததும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருந்து அறிவியல் பயின்றார் ‌ஷிவகிரி.

“அப்போது நான் நிறைய வேலைப்பயிற்சிகள் செய்தேன். அதன்மூலம் மருத்துவர்கள், தாதியர்களுடன் பேசியபோது எனக்கு மருத்துவராவது அதிகம் பிடித்துப்போனது,” என்றார் ஷிவகிரி. தன் பள்ளியின் செஞ்சிலுவைச் சங்க இளையர் பிரிவின் துணைத் தலைவராக, வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதலுதவிப் பயிலரங்குகள் போன்ற சமூக நிகழ்ச்சிகளையும் அவர் ஏற்பாடு செய்தார்.

கல்வியிலும் புலியாக இருந்த ‌ஷிவகிரி, மருந்து அறிவியல் துறையில் தலைசிறந்த மாணவராகத் தங்க விருதுடன் பட்டயம் பெற்றார்.

தேசிய சேவையின்போது வேவுப் பணி அதிகாரியாகப் பணியாற்றிய ‌ஷிவகிரி, அதற்கிடையே UCAT எனும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் படிக்கச் சிரமப்பட்டார். “என் நண்பர்கள் எனக்கு மருத்துவம் தொடர்பான நூல்களைத் தந்து உதவினர்,” என்று அவர் சொன்னார்.

தன் ராணுவ ‘ஓஆர்டி’ அணிவகுப்புக்கு முந்திய நாள்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த நற்செய்தி அவருக்குக் கிடைத்தது.

“என் பெற்றோர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். நான் தோற்றபோதெல்லாம் அவர்கள் என்னை உற்சாகப்படுத்தி வந்துள்ளனர்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ‌ஷிவகிரி.

அன்பைக் கற்பிக்க முடியாது

ஓராண்டாக ‘டிரைஜன்@எஸ்ஜிஎச்’சில் தொண்டாற்றிவரும் ‌ஷிவகிரி, அதன்மூலம் நோய்த்தடுப்பு பற்றி முதியோருக்குக் கற்பிக்கிறார்.

“குடியிருப்பாளர்களில் பலரும் தற்போது நலமுடன் இருப்பதால் நோய்த் தடுப்பு உத்திகளைக் கையாளத் தயங்கினர். ஆனால், பரிவுடன் அவர்களிடம் பேசி, அவர்கள் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கியபோது மருத்துவத்தில் என் நாட்டம் மேலும் வளர்ந்தது,” என்றார் ‌ஷிவகிரி.

தமது தேசிய சேவையின்போது உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தில் வார இறுதிகளில் இவர் சேவையாற்றினார்.

என்டியுசி கற்றல் மையத்தில் அடிப்படைப் பராமரிப்பாளர் பயிற்சிக்குச் சென்றுள்ள ஷிவகிரி, அதன்மூலம் செங்காங் பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு ஊட்டுவது முதல் கழிவறைக்கு அழைத்துச் செல்வதுவரை பலவற்றிலும் தொண்டூழியராக உதவவுள்ளார்.

தன் மகனும் தன்னைப் போல் மருத்துவத் துறையில் கால்பதிப்பதைக் கண்டு மகிழ்ந்த ‌ஷிவகிரியின் தாயார், மகள்களுடன் விழாவிற்கு வந்திருந்தார்.

“என் தாயார் தன் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்தார். என்னென்ன நூல்கள் படித்தால் கைகொடுக்கும் என அறிவுறுத்தினார். மருத்துவர்களுடன் உரையாடும் வாய்ப்புகள் தந்தார்,” என்றார் ‌ஷிவகிரி.

எதிர்காலத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சையாளராவது பற்றிச் சிந்திப்பதாகவும் இவர் கூறினார்.

தன் குடும்பத்தினருடன் ‌ஷிவகிரி நாதன் ஜெயன், 22.
தன் குடும்பத்தினருடன் ‌ஷிவகிரி நாதன் ஜெயன், 22. - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர்

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

மருத்துவப் பற்றுறுதி எடுத்துக்கொள்ளும் சைனாப் ‌ஷேத், 19.
மருத்துவப் பற்றுறுதி எடுத்துக்கொள்ளும் சைனாப் ‌ஷேத், 19. - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

சிறுவயதிலிருந்து மருத்துவராவதா வேண்டாமா என்ற மனக் குழப்பம் சைனாப் ‌ஷேத்துக்கு இருந்தது. அவருடைய தந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர். அது நீண்டநேரப் பணி, மன உளைச்சல் மிகுந்தது என்பதை ‌சைனாப்பால் கண்கூடாகக் காண முடிந்தது. ஆனால், அதே சமயம் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர் அடையும் மனநிறைவையும் சைனாப் கண்டுள்ளார்.

“என் தந்தை பெரும்பாலான நேரம் மருத்துவமனையில்தான் இருப்பார். ஆனால், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அவர் எங்களுடன் இருப்பார்,” என்றார் சைனாப்.

தந்தையின் அனுபவங்கள் மூலம் மருத்துவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட சைனாப், மருத்துவம் பயில்வதென முடிவெடுத்தார். மூன்று நாள்கள் மருத்துவமனையில் மருத்துவர்களைப் பின்தொடர்ந்து கற்கும் அனுபவமும் பயனுடையதாக இருந்தது.

எனினும், தன் கூச்ச குணம் நோயாளிகளுடன் தான் பேசும் விதத்தைப் பாதிக்குமா என்ற அச்சம் சைனாப்புக்கு இருந்தது.

“நாளடைவில் என் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். நோயாளிகளுடன் பேசுவது வளர்த்துக்கொள்ளக்கூடிய திறன் என்பதை உணர்ந்தேன்,” என்றார் சைனாப்.

தன் ‘ஏ’ நிலைத் தேர்வுகளில் 90/90 புள்ளிகளைப் பெற்று ஏற்கெனவே தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ள சைனாப், அடுத்து மருத்துவராகப் பலரையும் சென்றடையவுள்ளார்.

“எதிர்காலத்தில் நான் அறுவை மருத்துவ வல்லுநராக விரும்புகிறேன். சிறுவயது முதல் எனக்குக் கைவினை நடவடிக்கைகளிலும் நாட்டமும் திறனும் இருந்து வந்துள்ளது. அறுவை சிகிச்சை எனக்குப் பொருத்தமான துறை என்றும் நான் நினைக்கிறேன்,” என்றார் சைனாப்.

தன் பெற்றோருடன் சைனாப் ‌ஷேத்.
தன் பெற்றோருடன் சைனாப் ‌ஷேத். - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
குறிப்புச் சொற்கள்