நாவுக்கினிய பொங்கல் நல்விருந்தை ஜனவரி 21ஆம் தேதி நடந்த வருடாந்தர பொங்கல் கொண்டாட்டத்தில், சன்லவ் துடிப்பான மூப்படைதல் நிலையத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 50 முதியோர் உண்டு மகிழ்ந்தனர்.
கலந்துகொண்ட முதியோர் அனைவரும் தமிழர்கள் அல்லாதவர்கள்.
இருப்பினும், மற்ற இனத்தார் பொங்கல் பண்டிகையைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
71 வயது தொண்டூழியர் ஜெயக்கோடி குணசீலன், மக்கள் முன்னிலையில் சர்க்கரைப் பொங்கல் வைத்துக் காட்டினார்.
இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்த சீன ஏற்பாட்டுக் குழுவினரும் அவருடன் இணைந்து முந்திரி, நெய், திராட்சை போன்றவற்றைச் சேர்த்தனர்.
பால் பொங்கும் தருணத்தில் முதியோர் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து காணொளிகள் எடுத்தபடியே, “பொங்கலோ பொங்கல்” என உரக்கக் கூவினர்.
அனைவருக்கும் மதிய உணவோடு ஓர் அகப்பை அளவு பொங்கலும் வழங்கப்பட்டது.
“அனைவருக்கும் முன்னால் பொங்கலை வைக்கும்போது அவர்களுக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி. வயதானவர்களும் உண்ணும் வகையில், சர்க்கரை அளவைக் கால்பங்கு குறைத்துள்ளேன். கறுப்புச் சீனியைப் பயன்படுத்தினேன்,” என்றார் திருமதி ஜெயக்கோடி. இந்நிலையத்தில் பொங்கல் வைப்பது அவருக்கு இது மூன்றாவது முறை.
தொடர்புடைய செய்திகள்
வீட்டில் பொங்கல் வைப்பதுபோன்ற அனுபவம்
முதன்முறை சுவைப்போருக்கு வீட்டில் செய்யும் பொங்கலைப் போன்ற பாரம்பரிய அனுபவத்தை வழங்க விரும்பியதாகவும் கூறினார் நிலைய மேலாளர் ஷோபிகார்.
“சில முதியவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். அவர்கள் புதிய நட்புகளை ஏற்படுத்த, இந்நிலைய நடவடிக்கைகள் துணைபுரிகின்றன. அத்தகைய ஒன்றுதான் இந்தப் பொங்கல் கொண்டாட்டம்,” என்றார் அவர்.
“நம் நிலையத்தில் என்ன பண்டிகையானாலும் அதைத் தவறாமல் கொண்டாடுகிறோம்,” என்றார் நிலையத்தின் திட்டங்களுக்கான உதவி அதிகாரி தனராஜ், 78.
இந்நிலையத்திற்கு ஈராண்டுகளாக வந்துகொண்டிருக்கும் தொண்டூழியர் மகாலிங்கம், 76, பொங்கல் பண்டிகையைப் பற்றி மக்களுக்கு விளக்கி ஈடுபாட்டுடன் பங்கேற்றார். தம் முழங்காலில் மேற்கொண்ட சிகிச்சையால் நிலையத்தில் அவர் உடற்பயிற்சியும் செய்துவருகிறார்.
“பொங்கல் பண்பாட்டைப் பற்றிப் பிற இனத்தார் அறிந்துகொள்வதில் கொண்டிருந்த ஆர்வத்தைக் காணும்போது பெருமகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் மகாலிங்கம்.
இனிப்புப் பொங்கலை சுவைத்த மற்ற இனத்தார்
“பொங்கல் என்பது சீனர்கள் உண்ணும் ‘டோங் யூன்’ எனும் பசையுடைய அரிசி உருண்டைகள் போன்றது. அதையும் சீனர்கள் கொண்டாடும் அறுவடைப் பண்டிகையன்று உண்போம்.
“நான் எப்பொழுதும் உண்பதைவிட பொங்கல் சற்று வித்தியாசமாக உள்ளது. ஆனால், எனக்குப் பிடித்திருந்தது. சற்று இனிப்பாக இருந்தாலும், எனக்கு நீரிழிவு நோய் இல்லாததால் நான் சுவைத்து மகிழ்ந்தேன்,” என்றார் திருவாட்டி மார்கரட் யாவ், 85.
“பொங்கல் சமைத்த விதத்தைக் காணும்போது சுவாரசியமாக இருந்தது. இக்கொண்டாட்டம் எனக்கு முதல் அனுபவம். இது உழவர்களின் அறுவடையைப் பாராட்டும் பண்டிகை என அறிந்துகொண்டேன்,” என்றார் திரு ஜேக்சன் டான், 74.