தமிழ்மொழிக் கற்றல்முறைகளுக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளன புத்தாக்க இந்தியக் கலையகம் வழங்கிய ‘செயற்கை நுண்ணறிவு உலகில் செந்தமிழ்’ பயிலரங்குகள்.
தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக, தொடக்கநிலை 3 முதல் உயர்நிலை 4 வரையிலான மாணவர்களுக்காக செப்டம்பர் 4, 5ஆம் தேதிகளில் 42 வாட்டர்லூ கலையரங்கில் இப்பயிலரங்குகள் நடைபெற்றன.
மாணவர்களின் படைப்புகளை, சனிக்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் ‘கேட்டாபுல்ட்@1 ரோச்செஸ்டர் காமன்ஸ்’ஸில் மக்கள் கண்டு ரசித்தனர்.
மொத்தம் 12 பள்ளிகளைச் சார்ந்த 52 மாணவர்களும் அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட சுமார் 90 பேர் இப்பயிலரங்குகளில் பங்கேற்று சேட்ஜிபிடி (ChatGPT), ஜெமினி (Gemini), மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot), அடோபி ஃபையர்ஃப்லை (Adobe Firefly), ஸ்கெட்ச்ஃபேப் (Sketchfab), வேர்ல்ட்காஸ்ட் (WorldCAST) எனச் செயற்கை நுண்ணறிவைக் கையாளக் கற்றுக்கொண்டனர்.
மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உத்திகளைப் பயன்படுத்திக் கதைகளை ஆங்கிலத்தில் உருவாக்கி, தமிழாக்கம் செய்தனர். பின்பு, அவற்றை ‘மிகைமெய்’ (augmented reality) கதைகளாக வடிவமைத்தனர். பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனைகளுக்கேற்ப மேம்படுத்தினர்.
‘தமிழைக் குகைமனிதர்களுக்குக் கற்பித்த வேற்றுகிரகவாசிகள்’, ‘தமிழ் கற்றுக்கொள்வது’, ‘தொண்டூழியம்’, ‘அன்னப்பூரணியின் அமுதம்’, ‘சிங்கப்பூரில் இன நல்லிணக்கம்’ போன்ற சுவாரசியமான தலைப்புகளில் மாணவர்களின் கதைகள் அமைந்தன.
செப்டம்பர் 7ஆம் தேதி மாணவர்களின் படைப்புகளை அடுத்து, ‘இளையர்களுக்கிடையில் சிறந்த வணிக வாய்ப்புகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயனீடு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத் தலைவர் ரெகுநாத் சிவா தியாகராஜன்.
“செயற்கை நுண்ணறிவுமூலம் தனிப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்கலாம். தரவின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். அன்றாடப் பணிகளைத் தாமாக இயங்கச் செய்யலாம். புதிய சந்தைகளை உருவாக்கலாம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“தாமாகவே புதியனவற்றைக் கற்றுக்கொண்டு, தரமிக்க படைப்புகளை வழங்குகின்றனர் நம் இளையர்கள். அவர்கள் பெரியவர்களின் தலையீடு இல்லாமல் தங்களது கற்பனையாற்றலைப் பயன்படுத்தினால் பலவற்றையும் சாதிக்கலாம்,” எனப் பாராட்டினார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் அருண் மகிழ்நன்.
தொடக்கநிலைப் பிரிவில் முதல் பரிசை வென்றது ‘அன்னப்பூரணியின் அமுதம்’.
உயர்நிலைப் பிரிவில் பங்குபெற்ற இரு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அணிகளில், முதல் பரிசை ‘சிங்கப்பூரில் இன நல்லிணக்கம்’ படைத்த அணியும் இரண்டாம் பரிசைத் ‘தொண்டூழியம்’ படைத்த அணியும் வென்றன.
“சிறந்த படைப்புகளைச் செயற்கை நுண்ணறிவுக் குறும்படங்களாகத் தயாரிக்க உள்ளோம். மாணவர்களுக்கு, தங்கள் படைப்புகளுக்கு அறிவுசார் சொத்தையும் வாங்கிக் கொடுப்போம்,” என்றார் புத்தாக்க இந்தியக் கலையக இயக்குநர் சி குணசேகரன்.
“சாதாரணப் படங்களை முப்பரிமாணப் படங்களாக மாற்றும் முறையைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஜாஸ்பர்.
“வயதானோருக்கு என்ன தேவை, அவர்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினோம்,” என்றார் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் விஷ்வா.
“மூன்று இனத்தவரும் சிங்கப்பூரை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல எதிர்கொண்ட சிரமங்களை இளையர்களுக்குச் சுவாரசியமான முறையில் கற்பிக்க மெருகூட்டிய உண்மையைப் பயன்படுத்தினோம்,” என்றார் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஜான் ஹித்தீஷ்.