தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழ் விருதுவிழா

2 mins read
b3912820-f3c5-4cee-8f0b-0c458f2b6d4c
சமூகத்திற்குப் பங்களித்த அனைத்துலகத் தமிழர்கள் லண்டனின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். - படம்: பெருமாள் அருமை சந்திரன்

பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்று முதன்முறையாக புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்றது.

கலாசாரம், மொழி, சமூகம் ஆகிய துறைகளில் தங்கள் நாடுகளில் அரும்பங்காற்றியவர்களைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

குரோய்டன் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 24 நாடுகளைச் சேர்ந்த 60 தமிழர்கள் கலந்துகொண்டனர்.

கவிஞர் டாக்டர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் பாட்டழகன், ‘கோல்ட்ஸ்மித்ஸ்’ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு கே. சிவப்பிள்ளை ஆகியோரது ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள், தமிழ்ச் சமூகத்திற்குப் பங்களித்தவர்கள், தமிழ்ச் சமுதாயத்துக்குப் பல தொண்டு செய்தவர்கள் என விருதுப் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர்கள் நால்வர் தங்களின் சமூகப் பணி, கல்வி, கலாசாரத் துறைகளில் ஆற்றிய சேவைக்காகக் கௌரவிக்கப்பட்டனர்.

மூத்த இதய மருத்துவர் ஜெயராமன் லிங்கமநாயக்கர், நற்பணிப் பேரவையின் முன்னாள் தலைவர்  பி. திருநாவுக்கரசு, அப்துல் கலாம் லட்சியக் கழகத்தின் தலைவர் பெருமாள் அருமை சந்திரன், ‘ஜூனியர் குப்பன்னா’ உணவகத்தின் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் அந்த நால்வர்.

இலங்கை, இந்தியா, லண்டன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் கல்விமான்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் முதலியோரும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

“மேற்கத்திய நாட்டில் இவ்வளவு சிறப்பான முறையில் தமிழர்கள் கௌரவிக்கப்படுவது பெருமையை அளிக்கிறது,” என்று திரு அருமை சந்திரன் குறிப்பிட்டனர்.

தமிழ்ப் பட்டிமன்ற கலைக் கழகத்தின் முன்னாள் தலைவரான திரு அருமை சந்திரன், நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்ததோடு, சிங்கப்பூரின் சுவா சூ காங் கொன்கார்ட் தொடக்கப்பள்ளியில் ஆலோசனைக் குழுத் தலைவராக நான்கு ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்