கான்பெரா சமூக மன்றமும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகமும் இணைந்து ஜூன் 9ஆம் தேதி மாலை கான்பெரா சமூக மன்றத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய சிறப்புப் பட்டிமன்றத்தை நடத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்து இந்த நிகழ்வில் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. சிறுவர் சிறுமியர்கள் திருக்குறளை கதையாகவும் இசையாகவும் நடித்துக் காண்பித்து முத்தமிழான இயல் இசை நாடகத்தை கண் முன்னே கொண்டுவந்தனர்.
நிகழ்ச்சி நெறியாளர் திரு. மாணிக்கவாசகம் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் .
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு ஹரிகிருஷணன் முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.
பரதநாட்டியம், திரையிசைப் பாடல் என நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்தது.
குறிப்பாக, திருமதி முருகசாமி குமுதப்பிரியாவின் நாட்டுப்புறப்பாடலும், தெம்மாங்குப்பாடலும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
நிகழ்வின் முக்கிய அங்கமான ‘விடுமுறையில் அதிகம் மகிழ்வு தருவது சுற்றமே! சுற்றுலாவே!’ என்ற பட்டிமன்றத்தில் நடுவர் திரு கோபாலகிருஷ்ணன் ரெங்கபிரசாத் பேச்சாளர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார் .
‘சுற்றமே!’ என்ற அணியில் பேச்சாளர்கள் திரு வை. ரெங்கராஜ், திரு ஹயாத் பாஷா மற்றும் திருமதி பிரியா ஆகியோர் தங்கள் பேச்சாற்றலால் சுற்றங்களை நினைவில் கொண்டு வந்து தங்கள் அணிக்கு வலு சேர்த்தனர். அவர்களுக்குச் சரிநிகராக பேச்சாளர்கள் திரு வை. மணிகண்டன், திருமதி பா.கற்பகவள்ளி மற்றும் திருமதி ஜெஸ்லின் ஆகியோர் ‘சுற்றுலாவே!’ எனச் சிறப்பாகவும் நகைச்சுவையாகவும் பேசினர்.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பில் பேசப்பட்ட கருத்துகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து விடுமுறையில் அதிகம் மகிழ்வைத் தருவது சுற்றுலாவே என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார்.
சிறந்த பேச்சாளருக்கான பரிசைச் சுற்றுலா அணியின் பேச்சாளர் திரு வைத்தியலிங்கம் மணிகண்டனுக்கு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமி வழங்கினார். நடுவருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பேச்சாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி கான்பரா சமூக மன்றம் வழங்கிய பரிசுகளை அளித்து மகிழ்வித்தார் திரு தியாகராஜன்.