தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மீடியாகார்ப் வழங்கும் குறுந்தொடரில் தமிழ் முரசின் கதை

அனுபவப் பதிவுகளை ஆவணப்படுத்தும் ‘தமிழ்’

2 mins read
காலங்கள் கடந்தும் மக்களின் குரலாய்த் தொடர்ந்து வலம் வந்துகொண்டிருக்கும் தமிழ் முரசின் சாதனைகளைப் படம் பிடித்துக்காட்டுகிறது ‘தமிழ்’ குறுந்தொடர். எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனங்கவர்ந்த ஆளுமைகள் எனப் பலரின் அனுபவத்தை ஏந்தி வருகிறது இந்தத் தொடர்.
4e02e4db-5212-40ba-ba7f-9bbbc3aa7249
வியாழக்கிழமைதோறும் இரவு 9:30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகிவரும் ‘தமிழ்‘ குறுந்தொடரில், ஐந்து மற்றும் ஆறாம் பாகங்கள் இம்மாதம் 16 மற்றும் 23ஆம் தேதியன்று ஒளிபரப்பாகவுள்ளன. இதில் சிங்கப்பூரின் ஒரே அதிகாரத்துவ தமிழ் நாளிதழான தமிழ் முரசின் கதை இருபாகங்களாக இடம்பெறுகிறது.  - படம்: மீடியாகார்ப்

தமிழ்மொழியின் வளர்ச்சியை உரக்கச் சொல்லும் ‘தமிழ்’ ஆவணக் குறுந்தொடரின் அடுத்த இரு பாகங்கள் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் ‘தமிழ் முரசு‘ நாளிதழின் பயணத்தை மக்கள் பார்வைக்குக் கொண்டுவரவுள்ளன.

திரு முகமது அலி இயக்கத்தில் பத்துப் பாகங்கள் கொண்ட தொடராகக் களம் காணும் இந்நிகழ்ச்சியை மீடியாகார்ப் வழங்கி வருகிறது.

வியாழக்கிழமைதோறும் இரவு 9:30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகிவரும் இந்தக் குறுந்தொடரில், ஐந்தாம், ஆறாம் பாகங்கள் இம்மாதம் 16 மற்றும் 23ஆம் தேதியன்று ஒளிபரப்பாகவுள்ளன.

இதில் சிங்கப்பூரின் ஒரே அதிகாரத்துவ தமிழ் நாளிதழான தமிழ் முரசின் கதை இரண்டு பாகங்களாக இடம்பெறுகிறது.

அதுகுறித்து தமிழ் முரசிடம் பேசிய திரு அலி, ‘‘தமிழ் முரசின் வயது 90. முரசுடன் சமகாலத்தில் தோன்றிய பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் மறைந்துவிட்ட நிலையில், சமூகத்தின் குரலாகத் தொய்வின்றி ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ் முரசை பத்திரிகையாக மாத்திரம் பார்த்துவிட்டுக் கடந்து சென்றுவிட முடியாது,’’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் முரசின் கதை ஆவணப்படுத்தப்பட்டதன் பின்னணியை விவரித்தார்.

‘‘ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத எதுவும் காணாமற்போகும்.

‘‘அவ்வகையில், மாறிவரும் உலகின் தேவைக்கேற்ப ஒவ்வொரு சூழலிலும் அச்சு, மின்னிலக்கம் எனப் புத்தாக்கச் சிந்தனையுடன் தன்னைப் புதுப்பித்துச் சமூகத்தில் இன்றளவும் வேரூன்றி நிற்கும் தமிழ் முரசின் பயணத்தை மக்களுக்குத் தெரிவிப்பது முக்கியம்,’’ என்றார் திரு அலி.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள், உயரிய விருது பெற்ற ஆளுமைகள் எனப் பலருக்கும் ஒரு தளமாகத் தமிழ் முரசு இருந்துவந்துள்ளது என்று சுட்டிய அவர், அவ்வகையில் முரசின் பயணத்துடன் கைகோத்த பலர் இந்தத் தொடரில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துள்ளதாகவும் கூறினார்.

‘‘தமிழ் முரசின் நிறுவனர் கோ சாரங்கபாணியுடன் பயணம் செய்து, அவரின் முயற்சிகளுக்குத் தோள்கொடுத்தவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் அனுபவங்களை இத்தொடரில் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவை சரித்திரப் பதிவுகள் அல்ல, அனுபவப் பதிவுகள்!” என்றார் அவர்.

“குடியுரிமை, மொழிக் கொள்கை என எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றி, சமூகத்தின் எல்லா நிலைகளையும் தொட்டுவந்துள்ள தமிழ் முரசின் வரலாறு இந்தப் பாகங்களில் இடம்பெறும்,” என்று மேலும் விவரித்தார் திரு அலி.

குறிப்புச் சொற்கள்