வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ் இளையர் விழா ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
‘ஆற்றல்’ என்ற கருப்பொருளிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாண்டு விழா, சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வெளிப்படுத்திக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நான்காவது ஆண்டாக இளையர்களால் இளையர்களுக்காக நடத்தப்படும் இவ்விழாவில் பத்துப் பங்காளித்துவ அமைப்புகள் வழங்கும் பத்துப் புதுமையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பாரம்பரிய மேடை நிகழ்ச்சிகளுடன் உயிரோவியம், செயற்கை நுண்ணறிவுப் படைப்புகளையும் எதிர்பார்க்கலாம்.
இளைய தலைமுறையினரிடையே தமிழ்மொழியில் ஆர்வத்தை வளர்க்கவும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், 35 வயதுக்குட்பட்ட இளையர்களை இலக்காகக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் நடத்தப்படவுள்ளன.
“தமிழ் என்பது நமது மொழி மட்டுமல்ல. தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் உள்ளது,” என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு நசீர் கனி.
“தமிழர்களின் வளமான பண்பாட்டையும் மரபுடைமையையும் கொண்டாடுவதற்குத் தமிழ் இளையர் விழா வாய்ப்பளிப்பதுடன் இளைய தலைமுறையினர், தமிழ் அடையாளத்தில் பெருமிதம் கொள்வதற்கும் எதிர்காலத்தில் மொழியும் மரபுகளும் தொடர்ந்து செழித்தோங்குவதை உறுதிசெய்வதற்கும் இது உதவுகிறது,” என்றார் அவர்.
“பள்ளிகளிலும் வீட்டிலும் பேச்சுத்தமிழ் சிறப்பாகப் புழங்கப்பட்டாலும், சமூகச் சூழலில் இளையர்கள் ஒருவருக்கொருவர் ஈடுபட கூடுதலான ஒரு தளத்தை தமிழ் இளையர் விழா வழங்குகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்ற தலைப்பைக் கொண்ட வினவல் வழி (inquiry-based) நாடகப் பயிலரங்கு விழாவில் புதிய பங்காளியாகச் சேர்ந்துள்ள அகம் நாடகக் குழுவால் நடத்தப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் எழுத்துத் திறனை மேம்படுத்த கட்டுரைப் பயிலரங்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கான விவாதப் போட்டி, ஒத்திகையின்றி மேடையிலேயே உடனடியாக நடித்துக் காட்டும் நாடகம், சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஆடை ஆபரணங்களைப் பற்றிய கலந்துரையாடல் போன்ற ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளையும் விழாவில் எதிர்பார்க்கலாம்.
மேல் விவரங்களுக்கு www.tamil.org.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.