கவனச் சிதறலைக் குறைத்து உற்பத்தித்திறனை உயர்த்த உதவும் நுட்பம்

3 mins read
‘போமோடோரா’ - சமையலறையில் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்ட தக்காளி வடிவக் கருவிகளின் நினைவாக, நேர மேலாண்மை நுட்பத்திற்கு இந்தப் பெயர் வந்தது
53ed8f54-c4a0-444f-97ff-d206a3344132
‘போமோடோரா’ நுட்பத்தை ஃபிரான்செஸ்கோ சிரிலோ என்ற இத்தாலியப் பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்தார். - படம்: பிக்சாபே

கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள் நிறைந்துள்ள மின்னிலக்க உலகில் வேலை, சொந்த வாழ்க்கை, பொழுதுபோக்கு என அன்றாடம் பல்வேறு பணிகளுக்கான நேரத்தை ஒழுங்கமைக்க உதவுகிறது ‘போமோடோரா’.

‘தக்காளி நேர மேலாண்மை’ எனப் பொருள்படும் ‘போமோடோரா’ என்பது நேர மேலாண்மையில் கவனம் செலுத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் ஒரு நுட்பமாகும்.

‘போமோடோரா’ என்பது ‘தக்காளி’ எனப் பொருள்படும் இத்தாலிய மொழிச் சொல். சமையலறையில் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்ட தக்காளி வடிவக் கருவிகளின் நினைவாக, நேர மேலாண்மை நுட்பத்திற்கு இந்தப் பெயர் வந்தது.

இது ஒரு 25 நிமிட நேர மேலாண்மை முறையாகும். கடிகாரம் அல்லது நேரக் கண்காணிப்புக் கருவியில் 25 நிமிடங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். முக்கியச் செயலைத் தேர்ந்தெடுத்து அதனை 25 நிமிடங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். மீண்டும் 25 நிமிடப் பணி, 10 நிமிட ஓய்வு. இதுபோல நான்கு சுற்றுகளை முடித்தபின் 20 முதல் 30 நிமிடங்கள் நீடிக்கும் நீண்ட இடைவேளை எடுக்கலாம். தொடர்ந்து, அடுத்த நான்கு சுற்றுகளுக்கு இதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இடைவேளையில் எழுந்து நடப்பது, தண்ணீர் குடிப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

பணிகளைத் தள்ளிப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க இம்முறை உதவுகிறது. 25 நிமிடம் பணி மேற்கொள்வது குறைவான நேரம்போலத் தெரிவதாலும், அதனைத் தொடர்ந்து இடைவேளை கிடைக்கும் என்பதாலும் உற்சாகத்தோடு பணியில் ஈடுபடத் தூண்டுகிறது.

படிப்பிலும் பணியிலும் இருக்கும் ஆர்வமும் கவனமும் 30 நிமிடங்களுக்குப் பின் இயல்பாகக் குறையத் தொடங்கும். ‘போமோடோரா’ நுட்பம் ஊக்கத்தையும் அடுத்து வேலை செய்வதற்கான ஆற்றலையும் வழங்குகிறது.

மேலும், பெரிய பணிகளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து மேற்கொள்வது பிரமிப்பையும் மலைப்பையும் போக்கி, களைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்நுட்பம் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க உதவுகிறது. குறைந்த நேரம் பணி செய்வதால் அதனைத் தொடங்குவதில் உள்ள தயக்கம் உடைகிறது. இது சிக்கலான, சிரமமான பணி குறித்த அச்சத்தை உடைக்கிறது. ஒவ்வொரு 25 நிமிடத்தை முடிக்கும்போதும் மகிழ்ச்சிச் சுரப்புநீரின் அளவு அதிகரித்து, ஆற்றலும் கிடைக்கிறது. இது தன்னம்பிக்கையையும் கூட்டுகிறது.

குறிப்பாக, ஒதுக்கிய 25 நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட பணியை முடித்துவிட்டால் ஓய்வு நேரத்தை அதிகரிக்கக் கூடாது. அடுத்த பணியைத் தொடங்கலாம், அல்லது செய்து முடித்த வேலையின் தரத்தை மெருகேற்றும் பணியில் ஈடுபடலாம்.

‘போமோடோரா’ ஆயத்தப் பணிகள்

முதலில் செய்து முடிக்க வேண்டிய பணிகளைப் பட்டியலிட வேண்டும். நேரக் கண்காணிப்புக் கருவி இருந்தால் அதில் 25 நிமிட நேரம் ஒதுக்கலாம். அது ஏற்படுத்தும் ‘டிக் டிக்’ ஒலி மூளையைத் தூண்டி பணியை முடிக்கும் அவசரத்தை விதைக்கிறது. இதற்குத் திறன்பேசியில் உள்ள நேரக் கண்காணிப்புச் செயலியையும் பயன்படுத்தலாம்.

பல்வேறு சிறு சிறு பணிகளை முடிக்க வேண்டியிருந்தால் அவற்றை ஒரு 25 நிமிடப்பகுதியில் சேர்த்து முடிக்கத் திட்டமிடலாம்.

குறிப்பிட்ட நேரம் தொடங்கிய பின்னர், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, திறன்பேசியைப் பார்த்தல் ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது. ஏதேனும் சிந்தனைகள், பணிகள், கோரிக்கைகள் வந்தால் அவற்றைப் பின்னர் கவனிக்க ஏதுவாகத் தள்ளிவைக்க வேண்டும்.

திட்டமிட்ட அட்டவணைகளுக்கென வடிவமைக்கப்பட்ட மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவது உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க உதவும்.

இந்த ‘போமோடோரா’ நுட்பத்தைப் பயன்படுத்த ஏதுவாக ‘ஸ்ட்ரிக்ட் ஒர்க்ஃபுளோ’ போன்ற இணைய உலாவி விரிவாக்க மென்பொருளைப் (browser extension) பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்