தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கலைநயமிக்க கடைக்காரர்கள், புதிய தலைமுறை வாடிக்கையாளர்கள் 

மக்கள் கவனத்தை மெல்ல ஈர்க்கும் ‘தேக்கா பிளேஸ்’ தீபாவளிச் சந்தை

5 mins read
50c81859-8e1b-4d7e-9041-e6975eee2b52
லிட்டில் இந்தியா வட்டாரத்தின் முகப்பில் உள்ள தேக்கா பிளேஸ், 2020 மார்ச் 9ஆம் தேதி திறக்கப்பட்டது. - படம்: இணையம்

சிங்கப்பூரில் இந்தியர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளிடையே உணவு, ஆடை, ஆபரணம் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கான பிரபல இடமாக லிட்டில் இந்தியா திகழ்ந்து வருகிறது.

இருந்தபோதும், அந்த வட்டாரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள ‘தேக்கா பிளேஸ்’ கடைத்தொகுதி, மெல்ல மெல்லத்தான் சோபித்து வரத் தொடங்குகிறது.

2003ல் ‘தேக்கா மால்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டு அங்குள்ள வர்த்தகங்கள் மக்களைப் பேரளவில் ஈர்க்கத் தவறி, பின்னர் அது மூடப்பட்டு 2008ல் ‘தி வர்ஜ்’ என்ற பெயரில் அடையாள மாற்றம் கண்டது. 

2016ல் லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் லசெல் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகத்திலுள்ள நிதியம் ஒன்றும் அந்தக் கடைத்தொகுதியைக் கையகப்படுத்தி, அந்தக் கட்டடத்தை இடித்து புதிய கட்டடத்தை எழுப்பின. 

2020லிருந்து தற்போதைய தோற்றத்தில் செயல்பட்டுவரும் தேக்கா பிளேசில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிகக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள நிரந்தக் கடைகள் சிலவும் தற்போது தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. 

கடைத்தாெகுதியின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள சந்தையின் வெளிப்புறத்தில் ஆடை, அணிகல வடிவமைப்பாளர்கள் பலரின் தற்காலிக் கடைகள் அமைந்துள்ளன.

அங்குள்ள கடை உரிமையாளர்கள் பலர் இளையர்களாகவும் பெண்களாகவும் இருப்பதைக் காண முடிகிறது. 

உள்ளூரைச் சேர்ந்த வேலை செய்யும் இளம் பெரியவர்களின் சுவைக்கு ஏதுவான ஆடைகளையும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்குச் செவிசாய்க்கும் புதிய தலைமுறை கடைகளாக இவை தோற்றமளிக்கின்றன. பல கடைகளில் கடைக்காரர்கள், தாங்கள் விற்கும் பொருள்களின் வடிவமைப்பாளர்களாகவும் உள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு ஆடை அலங்கார ஆலோசனைகளை வழங்கும் கடைக்காரர்கள் பலர், இந்த வளாகத்திலுள்ள மற்ற கடைக்காரர்களையும் ஆதரிப்பதும் தெரிகிறது. 

சிங்கப்பூரிலேயே உருவாகி தங்களது அடையாளத்தை வளர்த்துள்ள இந்தக் கடைகள், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது அந்தக் கடைக்காரர்களிடம் பேசியபோது புலப்பட்டது.

போட்டி, பொறாமையைவிட ஒற்றுமை முடிவில் நன்மை பயக்கும் என்ற பண்பட்ட எண்ணப்போக்கு இவர்களில் பலரிடையே காணமுடிகிறது.

ஆண்டுக்காண்டு வாடிக்கையாளர் ஆதரவு

ஆண்டு முழுவதும் இணையம் வழியாக உடை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர், தீபாவளிக்காக தேக்கா பிளேசில் உள்ள தற்காலிகக் கடைக்குச் சென்று நேரில் தங்களை நாடுவதாக ஷர்வா ஆடைக்கடையின் உரிமையாளர் சர்வேஷ் செல்வராஜூ, 36, தெரிவித்தார். 

“இவ்வாறு நாங்கள் ஐந்து ஆண்டுகளாக தீபாவளிக் கடையை நடத்துகிறோம். துணிமணிகளை நேரில் தொட்டு வாங்கும் விழாக்கால அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

சந்தையில் பைகளுக்கான கடை நடத்தும் கோபால் அமுதவல்லியுடன் மருமகனும் ஷர்வா கடை உரிமையாளருமான சர்வேஷ் செல்வராஜூ, பேத்தி ஆர்யா.
சந்தையில் பைகளுக்கான கடை நடத்தும் கோபால் அமுதவல்லியுடன் மருமகனும் ஷர்வா கடை உரிமையாளருமான சர்வேஷ் செல்வராஜூ, பேத்தி ஆர்யா. - படம்: செய்யது இப்ராகிம்

மொத்த குடும்பத்திற்கான உடைகள் மட்டுமின்றி காலணிகளும் கிடைக்கப்பெறுகின்றன. ஷர்வாவைப்போல தீபாவளிக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதம் தற்காலிகக் கடையாகச் செயல்படும் ‘ஷூடிக்’, இத்தகைய காலணிகளைத் தயாரிக்கிறது.

“கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளிதோறும் வருகிறோம். இந்தக் காலணிகள் யாவும் நம் சொந்த வடிவமைப்புகளே,” என்று கடை உரிமையாளர் பாலமுருகன் ராமச்சந்திரம், 42, தெரிவித்தார்.

மனைவி தாட்சாயணியின் வடிமைப்புத் திறனுடன் இதனை வழிநடத்தும் திரு பாலமுருகன், “அணிகலன்களுக்குப் பயன்படுத்தப்படும் குந்தன் வேலைப்பாடு எனப்படும் கல் பதிக்கும் பாணியை நாங்கள் காலணிகளுக்கும் செய்கிறோம்,” என்றும் கூறினார்.

ஷூடிக் கடை உரிமையாளர் பாலமுருகன் ராமச்சந்திரம்.
ஷூடிக் கடை உரிமையாளர் பாலமுருகன் ராமச்சந்திரம். - படம்: செய்யது இப்ராகிம்

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வர்த்தகத்தின் வேகம் குறைந்துள்ளதாக திரு பாலமுருகன் குறிப்பிட்டார். எனினும், நிலைமை அடுத்த சில நாள்களுக்குள் மேம்படும் என்பது இவரது நம்பிக்கை

நிரந்தரக் கடைகளின் தொடக்கம்

கடைகள் சில, தீபாவளிக் காலகட்டத்தில் தற்காலிகச் சந்தைகளாகத் தொடங்கப்பட்டு பின்னர் நிரந்தரக் கடைகளாகச் செயல்படுகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக் காலகட்டத்தில் தற்காலிகக் கடையை நடத்திய ‘யசோதா’ அணிகலன் உரிமையாளர் அம்பிகை பிரியா, 29, வாடிக்கையாளர் வரவேற்பைக் கண்டு அதே வளாகத்தில் நிரந்தரக் கடையை அமைக்க முடிவு செய்திருந்தார். 

“நிரந்தரக் கடையைக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினோம். கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த ஆண்டு வர்த்தகம் செப்டம்பரில் மெதுவடைந்துள்ளது. ஆனால், அக்டோபரில் வியாபாரம் கூடியுள்ளது,” என்று திருவாட்டி அம்பிகை பிரியா கூறினார். 

யசோதா கடையின் உரிமையாளர்களும் சகோதரிகளுமான அம்பிகை பிரியா (வலது) அம்பிகை புகழ்.
யசோதா கடையின் உரிமையாளர்களும் சகோதரிகளுமான அம்பிகை பிரியா (வலது) அம்பிகை புகழ். - படம்: செய்யது இப்ராகிம்

ஆண்டுக்காண்டு விரைவாக மாறும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஈடுகட்டுவதில் சவால் உள்ளதாக யசோதா கடையை இணைந்து நடத்தும் இந்தச் சகோதரிகள் கூறுகின்றனர். 

இலகுவான, அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற அணிகலன்களை வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளில் விரும்பி வாங்குவதாக அந்தக் கடையின் மற்றோர் உரிமையாளர் அம்பிகை புகழ், 27, தெரிவித்தார். 

“அன்றாட புழக்கத்திற்கான இந்திய வடிவமைப்பும் கலைக்கூறுகளும் கொண்ட ஆடைகளையும் வாங்க வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

‘யசோதா’ கடை ஆபரணங்கள்.
‘யசோதா’ கடை ஆபரணங்கள். - படம் செய்யது இப்ராஹிம்

“இவ்வாண்டு பெரிதாக உள்ள தோடு, நகைகளுக்கான தேவை கூடியுள்ளது. வளையல், கோப்பு, மூக்குத்தி போன்றவற்றுக்கான தேவை இவ்வாண்டு கூடியுள்ளதையும் நாங்கள் காண்கிறோம். தேவைக்கேற்றபடி நாங்கள் விநியோகம் செய்வோம்,” என்று அவர் கூறினார்.

இவர்களைப் போலவே தமது கடையும் தொடக்கத்தில் தீபாவளிக்கால தற்காலிகக் கடையாக இருந்து பின்னர் நிரந்தரக் கடையாக தேக்கா பிளேசில் தளம் கொண்டுள்ளதாக ஷோபா ஷார்லின் அசோகன், 32, தெரிவித்தார்.

“உருவத்திற்கு ஏற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது, ஆடைகளைக் போட்டுப் பார்ப்பது போன்ற வசதிகள் நிரந்தரக் கடைகளுக்கென்று உள்ளன,” என்று திருவாட்டி ஷோபா கூறினார். 

கடந்த மூன்று ஆண்டுகளில் வாடிக்கையாளர் வருகை ஏற்ற இறக்கமாக இருந்தபோதும் தங்களை அடிக்கடி நாடுவோரின் ஆதரவு தொடர்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனித்துவம் வெளிப்பட முயற்சி

வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் பொருத்தங்களையும் இங்குள்ள வர்த்தகங்கள் நுட்பமாகப் புரிந்துகொண்டு தங்கள் விற்பனைப் பொருள்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பதாகவும் திருவாட்டி ஷார்லின் கூறினார்.

தம்மைப் பொறுத்தவரை, இங்குப் பொருள் விற்க வரும் எல்லோர்க்கும் இடம் உள்ளது என நம்புவதாகக் கூறினார். 

‘வேவா’ கடையின் இணை உரிமையாளர் ஷோபா ஷார்லின் அசோகன்.
‘வேவா’ கடையின் இணை உரிமையாளர் ஷோபா ஷார்லின் அசோகன். - படம்: செய்யது இப்ராஹிம்

“எல்லாக் கடைகளுமே இன்று ஒன்றாக வளரலாம். பல நேரங்களில் இங்கு ஒரு கடையை நாடிச் செல்பவர்கள், மற்ற கடைகளையும் நாடுகின்றனர், என்று திருவாட்டி ஷார்லின் கூறினார். 

வண்ணமயமான ‘வேவா’ கடைத்துணிகள்
வண்ணமயமான ‘வேவா’ கடைத்துணிகள் - படம்: செய்யது இப்ராஹிம்

உள்ளூர்ச் சுவையைப் புரிந்துகொள்வது, வடிவமைப்பாளர்களே கடை உரிமையாளர்களாக இருப்பது ஆகியவற்றால் தேக்கா பிளேசிலுள்ள கடைக்காரர்கள் தம்மைப் பொறுத்தவரையில் அழகான ஒரு சமூகம் என்று ‘பட்டுக்கடை’யைச் சேர்ந்த ஷாமினி ராஜ், 34, தெரிவித்தார்.

உடுத்துவதற்கு இலகுவான, மென்மையான சேலைகள், பளிச்சென்ற நிறங்கள் கொண்ட சேலைகளை தங்கள் வாடிக்கையாளர்கள் விரும்புவதாகக் கூறினார் திருவாட்டி ஷாமினி. கடந்த ஆண்டைக் காட்டும் இந்த ஆண்டு தங்களது கடைகளைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிகம் தெரிந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

 ‘பட்டுக்கடை’யைச் சேர்ந்த ஷாமினி ராஜ்.
 ‘பட்டுக்கடை’யைச் சேர்ந்த ஷாமினி ராஜ். - படம்: செய்யது இப்ராஹிம்

நிரந்தரக் கடைகள் இருந்துள்ளபோதும் இந்த மூன்று கடைகளுக்குமே இணையம் வழி தங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடையும் முயற்சி தொடர்கிறது. வெளிப்புறமாக இல்லாமல் கடைத்தொகுதிக்கு உள்ளேயே அனைத்துக் கடைளும் இருப்பது சவால் என்றாலும் இணையத்தையும் அதன்வழி பெருக்கிக்கொண்ட வாடிக்கையாளர் நட்பு வட்டாரத்தையும் இந்த இளம் வர்த்தகர்கள் பயன்படுத்துகின்றனர்.

‘பட்டுக்கடை’யில் பலவண்ணப் பட்டாடை.
‘பட்டுக்கடை’யில் பலவண்ணப் பட்டாடை. - படம்: செய்யது இப்ராஹிம்

கடைத்தொகுதி என்பதால் கடைக்குக் கடை வாடகை மாறும். இருந்தபோதும், தற்காலிகக் கடைக்காக வாடகை கடந்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதே விகிதத்தில் இருப்பதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

பொருளியல், வர்த்தக நிச்சயமின்மையின் அதிகரிப்புக்கு இடையிலும் வடிவமைப்புத் திறனை மதிக்கும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆதரவில் இவர்களைப் போன்ற கடைக்காரர்கள் தொடங்குகின்றனர், தொடர்கின்றனர். 

குறிப்புச் சொற்கள்