சிங்கப்பூரர்களின் வாழ்விடம், வேலையிடம் என அனைத்தையும் வரும் 2035ஆம் ஆண்டுக்குள், வடிவமைப்பு அம்சங்களுடன் விரும்பத்தக்க, துடிப்பான இடங்களாக மாற்றும் நோக்கில் ‘டிசைன் சிங்கப்பூர்’ அமைப்பு அதன் பெருந்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
வடிவமைப்புத் துறையின் திறன்களுக்கு ஆதரவளிக்கவும் எதிர்காலத்திற்குத் தயாரான நகரத்தை வடிவமைக்கவும் உதவும் பத்தாண்டுகாலத் திட்டம் இது.
வடிவமைப்புத் துறையினர், பொதுமக்கள் என ஏறத்தாழ 6,000 பேருடன் கலந்தாலோசித்து இந்த ‘வடிவமைப்பு 2035’ திட்டம் உருவாக்கப்பட்டது.
வடிவமைப்புகள், சிங்கப்பூரின் பொருளியல், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் தாக்கம் ஏற்படுத்தச் செய்யும் ஐந்து பகுதிகளை இந்தத் திட்டம் அடையாளம் கண்டது.
குறிக்கோளுடன்கூடிய புத்தாக்கம், பொறுப்புமிக்க வளப் பயன்பாடு, அக்கறையுள்ள சமூகங்கள், கலாசார ரீதியாகத் தனித்துவமான நகரம், துடிப்புமிக்க வடிவமைப்புத் துறை ஆகியவை அந்த ஐந்து பகுதிகளாகும்.
இப்பகுதிகளில் உறுதியான விளைவுகளை உருவாக்கவும் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிகவும் உதவும் முயற்சிகள், திட்டங்களுக்காக 2026 முதல் 2028 வரை 40 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய அங்கங்கள், ஹார்பர்ஃபிரண்ட் முதல் பொங்கோல் கோஸ்ட் வரையிலான 17 வெவ்வேறு பெருவிரைவு ரயில் நிலையங்களில் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும்.
‘வடிவமைப்புடன் கூடிய புதிய அன்றாட வாழ்க்கை’ திட்டம், வரும் நவம்பர் மாதம் முதல் கண்காட்சிகள், இருவழித்தொடர்புடன் கூடிய நிறுவல்கள், சந்தைகள் என வடிவமைப்பாளர்கள் மூலமாகவும் அனுபவங்களின் மூலமும் அன்றாட வாழ்க்கையில் வடிவமைப்பின் தாக்கம் இருப்பதை முன்னிலைப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த ‘வடிவமைப்பு 2035’ திட்டத்தின் மூலம் எதிர்காலத்தை மாறுபட்ட முறையில் அணுகுகிறோம். இது செயல்பாட்டிற்கான கட்டமைப்பு. சிங்கப்பூர் வடிவமைப்பின் எதிர்காலம், ஒட்டுமத்த சமூகத்தின் ஒன்றிணைந்த தேர்வுகளால் வடிவமைக்கப்படும். எனவே, வாழக்கூடிய, நேசிக்கக்கூடிய சிங்கப்பூருக்கான புதிய சாத்தியக்கூறுகளுடன் எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்,” என்றார் ‘டிசைன்சிங்கப்பூர்’ மன்றத்தின் நிர்வாக இயக்குநர் டான் லிம்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சமான சிங்கப்பூர் வடிவமைப்பு பியானேல், 2027ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறும். சிங்கப்பூரின் வடிவமைப்பு வாரத்திற்கு மாற்றாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி ஆறு வாரத்திற்கு நீடிக்கும்.
புதிய படைப்புகள், கூடுதல் வடிவமைப்பு வட்டாரங்கள், அனைத்துலகப் பங்காளித்துவம், வடிவமைப்பைப் பகிர்வதற்கான தளங்களுடன் நாட்டை ஓர் உலகளாவிய கலாசார மையமாக நிலைநிறுத்த அது உதவும். மேலும், அனைத்துலக அளவில் வடிவமைப்பாளர்களையும் பார்வையாளர்களையும் அது ஈர்க்கும்.

