தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தும் ‘தலைமுறை தாண்டியும் வாலி’ நிகழ்ச்சி, பிப்ரவரி 8ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை அங் மோ கியோ நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைத் தெம்பனிஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றமும் கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்தது.
கவிஞர் வாலி 1958ஆம் ஆண்டு முதல் இயற்றிய பல்வேறு பாடல்கள், பல தலைமுறைகள் கடந்து இன்றளவும் உயிரோட்டத்துடன் விளங்குவதை எடுத்துக்கூறும் விதமாக முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு தலைப்பும் அத்தலைப்பை ஒட்டி ஐந்து பாடல்களும் கொடுக்கப்படும். ஒவ்வொரு பாடலையும் ஒருவர் பாட மற்றொருவர் அது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்.
பிப்ரவரி மாதம் ‘அன்பர் தினம்’ கொண்டாடப்படுவதால் ‘காதல்’ என்ற கருப்பொருளில், முன்பே வா என் அன்பே வா, கண்மணி அன்போடு காதலன், மயிலிறகே மயிலிறகே, முக்காலா முக்காபுலா, சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகிய பாடல்கள் குறித்துச் சிந்திக்கப்பட்டது.
அகிலா மணிகண்டன், ராஜன் அருணாச்சலம், பெனிட்டா அன்னபூரணி, அருண் பிரசாத், தேவி ஆகியோர் பாடல்களைப் பாட, மணிகண்டன், உமா மகேஸ்வரி, அழகு தெய்வானை, சுபாஷினி, சதீஷ் ஆகியோர் அந்தந்தப் பாடல் தொடர்பான கருத்துகளையும் தங்கள் பார்வையையும் பகிர்ந்து கொண்டனர்.
பாடல்களுக்கு இடையே முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன் கவிஞர் வாலியின் பெருமைகள், அவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள் உட்படக் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்தார்.

