தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ‘தலைமுறை தாண்டியும் வாலி’ எனும் இலக்கியத் தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அவ்வகையில், கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 19) ‘நாயக பிம்பம்’ எனும் கருப்பொருளுடன் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
சிண்டா அரங்கத்தில் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர் வாலியின் ஐந்து திரையிசைப் பாடல்களைப் பாடகர்கள் இசையோடு பாடினர்; பேச்சாளர்கள் அப்பாடல்களை ஆய்வுசெய்து உரையாற்றினர்.
இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப் பிள்ளை.. (சுறா), நான் ஆணையிட்டால்.. (எங்க வீட்டுப் பிள்ளை), வத்திக்குச்சி பத்திக்காதுடா.. (தீனா), தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா.. (சிலம்பாட்டம்), இவன் வசம் இருந்தது ஏழு வரம்.. (பாபா) ஆகிய ஐந்து பாடல்களை மோகனபிரியா ராஜேந்திரன், சௌந்தரராஜன் சுரேஷ், சுரேஷ் ராஜகோபால், சுபாஷினி சுரேஷ், தமிழ்ச்செல்வன் இளங்கோவன், அன்பரசன் நாகலிங்கம், அகிலாண்டேஸ்வரி அன்பரசன் ஆகியோர் பாடினர்.
ஒவ்வொரு பாடலையும் தொடர்ந்து, பேச்சாளர்கள் மாமன்னன் அருணாச்சலம், வேல்பாண்டியன் கோபிராஜ், கோவிந்தராஜு சுமதி, வசந்த் குமார் ஆறுமுகம், சந்தோஷ் பாபு நாகரத்தினம் ஆகியோர் தத்தம் பாடல்களைப் பற்றிய கருத்துகளையும், அப்பாடல் குறித்த தங்கள் பார்வையையும் பகிர்ந்துகொண்டனர்.
பாரதியார் பேச்சாளர் மன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர்களாக இருக்கும் பேச்சாளர்கள் இராமன் குருந்தலிங்கம் நிர்மல், ராஜேஷ் தர்மலிங்கம், பாரதிசெல்வன் பரமசிவம் ஆகியோரைச் சிறப்பித்துப் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

