தீபாவளிப் பண்டிகை உணர்வை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன், உடற்குறை அல்லது சிறப்புத் தேவைகள் கொண்டவர்களுக்குக் கொண்டுசென்றது பிலீவ் டு சக்சஸ் (பி2எஸ்) தொண்டூழியக் குழு.
சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோருக்கு சேவையாற்றும் ‘எஸ்பிடி’ (SPD) அறநிறுவனத்தின் நடவடிக்கை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) கொண்டாட்டம் இடம்பெற்றது. கிட்டத்தட்ட 70 பயனாளிகளுக்கு பிரியாணி, பலகாரங்கள், உணவகப் பற்றுச்சீட்டுகள், அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார் பி2எஸ் உறுப்பினர் ஜஃபருல்லாஹ்.
சிறுநீரகம் செயலிழந்து, காலில் பெருவிரல் அகற்றப்பட்டாலும் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தில் தொண்டூழியத்தைத் தொடரும் மாலதி நாகரத்தினம், முதன்முறையாக ‘பி2எஸ்’ உடன் சேவையாற்றினார்.
73 வயதிலும் சிட்டாய்ப் பறக்கும் தொண்டூழியர் முனைவர் பிரேமா சுப்பிரமணியம், ஆண்டுதோறும் இம்முயற்சிக்கு நிதியாதரவளித்தாலும், சேவை செய்வது இதுவே முதன்முறை.
“முயற்சியெடுத்து அவர்கள் எங்களுடன் பேசும்போது மனம் நெகிழ்ந்தேன். அல்சைமர்ஸ் நோய் கொண்டிருந்த என் தந்தையும் நினைவுக்கு வந்தார்; கண்களில் கண்ணீர் வந்தது,” என்றார் முனைவர் பிரேமா.
“இவ்வாறு சேவையாற்றும்போதுதான் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை நாமே உணர்கிறோம்,” என்றார் அவர்.
நன்றிகூறும் தீபாவளி
‘பி2எஸ்’ நிறுவனர் சஞ்ஜீவன், 33, ஒரு விபத்துக்குப் பின் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தவேண்டிய நிலையில் ‘எஸ்பிடி’யில் நடக்கவும் பேசவும் சிகிச்சை பெற்றார்.
“அப்போதெல்லாம் என் தாயார் வேலைக்கும் தம்பிகள் பள்ளிக்கும் செல்லும்போது நான் அந்தப் பராமரிப்பு நிலையத்தில்தான் இருந்தேன். அப்போது இங்குள்ள பல்வகையான ஆற்றல்மிக்கவர்களுடன் உரையாடி, அவர்களைப் பற்றிப் புரிந்துகொண்டேன்,” என்றார் சஞ்ஜீவன்.
அந்த அனுபவத்தில் வாழ்வில் சவால்களைச் சந்திப்பவர்களுக்கு ஆதரவளிக்க 2015ல் ‘பி2எஸ்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போது, பட்டயக் கல்வி படித்துக்கொண்டிருந்த அவருக்கு சக மாணவர்கள் பக்கபலமாக உதவினர். சவால்களைக் கடந்துவந்தோர் தம் கதைகளைப் பகிர்ந்து பிறரை ஊக்குவிக்க பி2எஸ் (இன்ஸ்டகிராம் - @believetosuccess) தளம் உதவுகிறது.
உளவியல் பயிற்றுவிப்பாளராகவும் பேச்சாளராகவும் பணிபுரியும் சஞ்ஜீவன், தமக்கு உதவிய ‘எஸ்பிடி’ நிலையத்தில் ஆண்டுதோறும் ‘பி2எஸ்’ தொண்டூழியர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.
நிலையத்துக்கு வருவோர், வெளியே சென்று சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவும் ‘எஸ்பிடி சுவரற்ற டிஏசி’ (DAC Without Walls) முயற்சிக்கும் சஞ்ஜீவனும் அவ்வப்போது பி2எஸ் உறுப்பினர்களும் ஆதரவளித்துவருகின்றனர்.
‘உள்ளத்தால் ஒன்றிணைப்போம்’
“பண்டிகைக் காலங்களில் ஆதரவு தேவைப்படுவோருக்கும் முடிந்த உதவியைச் செய்யுங்கள்; உணவும் அன்பும் பகிர்ந்து உதவுங்கள்,” என்றார் நிகழ்ச்சி நெறியாளரும் தாதியுமான ரமேஷ் பட்பனாவன், 49.
“பண்டிகைக் காலத்தில் அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளை ஆதரிக்க தனிநபர்களையும் அமைப்புகளையும் ஊக்கப்படுத்துகிறோம்,” என்றார் ‘எஸ்பிடி’ நடவடிக்கை நிலைய உதவி மேலாளர் இயன் பெரேரா.
ஆசிய பசிபிக் ப்ரூவரீஸ் சிங்கப்பூர் (APBS), ‘எஸ்பிடி’யுடன் இணைந்து ‘ஒன்றிணைந்த உலகம்’ (Worlds Together) எனும் முயற்சியின் இரண்டாவது அத்தியாயத்தைத் தற்போது வழங்குகிறது. உடற்குறையுள்ளோரைச் சந்திக்கவும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் https://bit.ly/WorldsTogether2026 என்ற இணையத்தளத்தை நடலாம்.