ஒரு பொய் சொல்லி, அந்தப் பொய்யை நிஜமாக்கத் தொடர் பொய்கள் சொல்லி, அதனை நீட்டிக்க முயலும் கதைக்களம் கொண்ட கலகலப்பான திரைப்படம் ‘தில்லு முல்லு’.
அதே பணியில் தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வரும் மோசடிகளை மையமாக வைத்து நகைச்சுவைக் குறுந்தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளனர் உள்ளூர் இயக்குநர்கள் ஹரிகிருஷ்ணன் பிரகலாதன், அரவிந்த் நாயுடு ஜெயராம்.
‘சல்புல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், வசந்தம் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, திங்கள் முதல் வியாழன் வரை அன்றாடம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் அப்பாவிக் குடும்பம், அதிலிருந்து விடுபட மற்றொரு மோசடியில் ஈடுபடுத்தப்படும் சம்பவத்தை நகைச்சுவை கலந்து சொல்கிறது ‘சல்புல்’.
தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரே ‘ஷாப்பி’ மோசடி தொடங்கி பல வகை மோசடிகளில் பாதிக்கப்பட்டதைக் கண்டுள்ளதாகவும், அவை குறித்த தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து படைப்பது காண்போரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனும் எண்ணமே இந்தத் தொடரின் விதை என்றனர் இயக்குநர்கள்.
சிங்கப்பூரில் அன்றாடம் மக்கள் புழங்கும் பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் கதையுடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்றனர் குழுவினர்.
மூத்த தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில், முகமது ரஃபியின் பாடல்களை உபயோகித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
“நாம் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தளங்களில் வரும் வெளிநாட்டுத் தொடர்களை விரும்பிப் பார்ப்பதுபோல, அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்த உள்ளூர் தொடர்களைப் படைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் பயணித்து வருகிறோம். அந்த கனவை நோக்கிய பாதையின் முதல் படி இது,” என்றார் இயக்குநர் அரவிந்த்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த பத்தாண்டுகளாக நல்ல படைப்பைத் தர வேண்டும் எனும் நோக்கில் பயணித்து வரும் எங்களுக்கு, இது ஒரு திருப்புமுனைப் படைப்பாக அமையும் என்று நம்புகிறோம்,” என்றார் இயக்குநர் ஹரி.
சில படைப்புகள் மக்களின் மத்தியில் முக்கியமான, தேவையான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும். அந்த வகையிலான கதையுடன் வந்த இந்த இரு இயக்குநர்கள் மீது நன்மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
இந்தத் தொடருக்குப் பங்களிப்பது பெருமை என்றார் ‘சல்புல்’ தொடரின் தயாரிப்பாளர் ரூபென் ஜேம்ஸ்.