உங்கள் கண்களை நம்பும் முன் இருமுறை யோசியுங்கள்

உங்கள் கண்களை நம்பும் முன் இருமுறை யோசியுங்கள்

5 mins read
மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய மனிதர்களைப்போல் ஆள்மாறாட்டம் செய்ய, மோசடி செய்பவர்கள் ‘டீப்ஃபேக்’ (Deepfake) போன்ற AI தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
2913de10-4c8f-473e-a4cd-40118114d38e
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் இப்போது எளிதாகக் கிடைப்பதால், அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் (இணையக் குற்றவாளிகள்) மோசடிகளை மேலும் வேகமாகவும் திறம்படவும் செய்ய முடிகிறது என்று ஒரு நிபுணர் கூறுகிறார். - படம்: கெட்டி இமேஜஸ்

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஓய்வுபெற்ற மார்ட்டின் எங், தனது கைப்பேசியில் யூடியூப் செயலியில் இசைக் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பரிச்சயமான ஒரு முகம் திரையில் தோன்றியது.

ஒரு விளம்பர வீடியோவில், ‘மூத்த அமைச்சர் லீ சியன் லூங்' மிகவும் கவர்ச்சிகரமான கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டம் ஒன்றைப் விளம்பரப்படுத்துவது போல் இருந்தது.

“முதலில் பார்த்தபோது, அது மிகவும் உண்மையானதாகவும் நம்பகமானதாகவும் தோன்றியது,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால் தொடர்ந்து பார்க்கும்போது, “இது ஒரு மோசடி என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் 69 வயதான எங். செய்திகளில் அரசியல் தலைவர்களைப்போல் ஆள்மாறாட்டம் செய்யும் வன்போலிக் காணொளிகள் (’டீப்ஃபேக்’) குறித்து படித்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.

குரல்தான் உண்மையைக் காட்டிக்கொடுத்தது என்கிறார் எங். காணொளியில் இருந்த ‘மூத்த அமைச்சர் லீ’ பார்ப்பதற்கு உண்மையானவரைப் போலவே இருந்தார். ஆனால், அவரது குரல் இயற்கை தன்மையற்ற உச்சரிப்புடன், ஒரு ரோபோ பேசுவதைப்போல் ஒலித்தது. இந்தக் காணொளி ,வன்போலித் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள இதுவே தெளிவான அறிகுறியாக எங் கருதுகிறார்.

டீப்ஃபேக் என்பது செயற்கை நுண்ணறிவுச் செயலி (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் படம், காணொளி மற்றும் ஒலிப்பதிவு உள்ளடக்கம் ஆகும்.

இந்த மோசடியில் தான் ஏமாறவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற போலி வீடியோக்களைக் கண்டறிவது மிகவும் கடினமாகிவிடும் என்று எங் கவலைப்படுகிறார்.

“(ஒரு வருடத்திற்கு முன்பு அந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து) இந்தத் தொழில்நுட்பம் எவ்வளவு விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நான் அறிவேன்,” என்று அவர் கூறுகிறார். அண்மைய மாதங்களில் தான் பார்த்த, சிரேஷ்ட அரசு அதிகாரிகளைப் போன்ற வன்போலி மோசடிக் காணொளிகள் இப்போது “இன்னும் தட்டச்சு நுட்பமாக, உண்மையானவை போலவே” இருப்பதாக எங் மேலும் கூறுகிறார்.

எங்கின் கவலைகள், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு பெரிய சவாலைப் பிரதிபலிக்கின்றன: ஏமாற்றுபவர்கள் நம்பத்தகுந்த போலிக் காணொளிகள், நகல் குரல்கள் மற்றும் பொதுப் பிரமுகர்களின் தத்ரூபமான ஆள்மாறாட்டங்களை உருவாக்க ஏஐ தொழில்நுட்பம் எளிதாக்குகிறது.

பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்துலகக் காவல்துறையான இன்டர்போல், ஜூன் 2026ல் வெளியிட்ட அறிக்கையில், வன்போலி மற்றும் ஏஐ சார்ந்த இணையக் குற்றங்களின் அதிவேக வளர்ச்சியைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தென்கிழக்காசியக் குற்றவாளிகளிடையே பிரபலமாக இருக்கும் டெலிகிராம் செயலி சேனல்கள் மற்றும் இணையக் குற்றவியல் மன்றங்களில், 2024 பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் வன்போலி பற்றிய விவாதங்கள் 600 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வு, ஜனவரி 2024 முதல் மார்ச் 2025 வரை ஆசிய மற்றும் தென்பசிபிக் வட்டாரத்தில் உள்ள இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் போக்குகளை ஆராய்கிறது.

சிங்கப்பூர் காவல்துறை புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் 37,308 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் $913.1 மில்லியனை இழந்துள்ளனர். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளைச் சிங்கப்பூர் காவல்துறை தனிப்பிரிவாகப் பதிவு செய்வதில்லை.

“ஏஐ கருவிகள் இப்போது மிகவும் சுலபமாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இது குற்றவாளிகளுக்கு அதிக வேகம், பெரிய அளவிலான பரப்பு மற்றும் நுட்பமான முறையில் மோசடிகளைச் செய்ய வழிவகுக்கிறது,” என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகமையின் தேசிய இணைய அச்சுறுத்தல் பகுப்பாய்வு மையத்தின் இயக்குநர் லூக் ஹோ கூறுகிறார்.

கண்டறிவது கடினம், நம்புவது எளிது

எங்கை பொறுத்தவரை, வன்போலிக் காணொளியைக் காட்டிக்கொடுத்தது அந்த ரோபோ போன்ற குரல்தான்.

இயற்கைக்கு மாறான முக அசைவுகள் அல்லது உதடசைவுக்கும் குரலுக்கும் இடையிலான பொருத்தமின்மை போன்ற சில காட்சி மற்றும் ஒலி முரண்பாடுகள், ஒரு வீடியோ உண்மையானதா இல்லையா என்பதற்கான தடயங்களை வழங்கக்கூடும் என்று இணையப் பாதுகாப்பு முகமையின் திரு ஹோ கூறுகிறார்.

ஆனால், ஏஐ மேலும் வளர்ச்சியடைந்து வருவதால், ஒரு காணொளி ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டதுதானா என்பதைத் தீர்மானிக்கக் காட்சி அல்லது ஒலி அறிகுறிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

அதற்குப் பதிலாக, அதன் முழுமையான பின்னணியில் கவனம் செலுத்துமாறும், “சந்தேகக் கண்ணோட்டத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறும்” பொதுமக்களை ஹோ கேட்டுக்கொள்கிறார். நீங்கள் பரிசீலிக்க வேண்டிய சில கேள்விகள்:

  1. இந்த உள்ளடக்கம் வழக்கத்திற்கு மாறான கவர்ச்சிகரமான மற்றும் “உத்தரவாதமளிக்கப்பட்ட” முதலீட்டு லாபங்களை வாக்குறுதி அளிக்கிறதா?
  2. இது பணம் அல்லது தனிப்பட்ட விவரங்கள்/வங்கி கணக்கு விவரங்கள் போன்ற உணர்திறன் மிக்க தகவல்களைக் கேட்கிறதா?
  3. யோசிப்பதற்கோ அல்லது இந்த கோரிக்கையைச் சரிபார்ப்பதற்கோ உங்களுக்கு நேரம் தராமல், உடனடியாகச் செயல்படுமாறு உங்களை வற்புறுத்துகிறதா?

வீடியோவில் உள்ள குறைபாடுகளை விட, இவைதான் பெரும்பாலும் ஒரு மோசடியை அடையாளம் காண்பதற்கான மிகவும் நம்பகமான எச்சரிக்கை அறிகுறிகளாகும் என்கிறார் திரு ஹோ.

ஆயுதமாகப் பயன்படும் ‘நம்பிக்கை’

ஏமாற்றுபவர்கள் டீப்ஃபேக்குகளை மட்டும் நம்பியிருப்பதில்லை என்று ஹோ மேலும் கூறுகிறார். பெரும்பாலும், அவர்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்காக அதிகாரம் மற்றும் பரிச்சயம் போன்ற தந்திரங்களுடன் இதையும் இணைத்துக்கொள்கிறார்கள்.

2025 ஏப்ரலில் சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் சுட்டிக்காட்டியது. அதில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நிதி இயக்குநர், நிறுவனத்தின் நிதியிலிருந்து கிட்டத்தட்ட US$500,000 (S$646,000) தொகையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நிறுவனத்தின் பிராந்திய மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க, அதன் தலைமை நிதி அதிகாரி மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளுடன் வீடியோ மாநாட்டில் தான் பங்கேற்பதாக அவர் நம்பினார்.

ஆனால் உண்மையில், அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் வன்போலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவர்கள்.

பாதிக்கப்பட்ட நபர், நிறுவனத்தின் கார்ப்பரேட் வங்கிக் கணக்கிலிருந்து மற்றோர் உள்ளூர் கார்ப்பரேட் வங்கிக் கணக்கிற்கு US$499,000க்கும் அதிகமான தொகையை மாற்றுமாறு பணிக்கப்பட்டார். அவர் சொன்னபடியே செய்தார். ஆனால், மேலும் US$1.4 மில்லியன் தொகையை மாற்றுமாறு கோரிக்கை வந்த பிறகே அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர் உடனடியாகத் தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் வங்கியை எச்சரித்தார், அதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட பணம் ஏற்கனவே ஹாங்காங்கில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது, இருப்பினும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் அப்பணம் பின்ன மீட்கப்பட்டது.

நம்பிக்கை ஏற்பட்டதும், பாதிக்கப்பட்டவர்கள் நிதானித்து அந்தக் கோரிக்கையைச் சரிபார்ப்பதற்குள், அவர்களை அவசரப்படுத்தவோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கவோ மோசடி செய்பவர்கள் முயல்கிறார்கள் என்று ஹோ விளக்குகிறார்.

“எனவே, எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், சற்று நின்று அதிகாரபூர்வ மற்றும் நம்பகமான ஆதாரங்கள் மூலம் சரிபார்ப்பது முக்கியம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த ஜூலை மாதம் அந்த வன்போலிக் காணொளியைப் பார்த்ததிலிருந்து, எங் மேலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த யூடியூப் காணொளிகளைப் பார்த்தபோது, எங் அந்தத் தகவல்களை அப்படியே நம்பிவிடாமல், அதிகாரபூர்வ பட்ஜெட் இணையதளத்தில் ஒப்பிட்டுச் சரிபார்த்தார்.

இணையத்தில் தகவல்களைச் சரிபார்ப்பதற்கு எங் பின்பற்றும் எளிமையான விதி: “(தகவல்களை) அதிகாரபூர்வ அரசாங்க இணையதளங்களில் மீண்டும் சரிபார்க்க வேண்டும் அல்லது எனது மகளிடம் கேட்க வேண்டும்,” என்பதே.

தொடர்வதற்கு முன் சற்று நில்லுங்கள்

உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு என்பது குறித்து சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகமையின் தேசிய இணைய அச்சுறுத்தல் பகுப்பாய்வு மையத்தின் இயக்குநர் லூக் ஹோ வழங்கும் சில ஆலோசனைகள்:

  1. எதிர்பாராத, 'அவசரமான’ கோரிக்கைகளை எச்சரிக்கையுடன் அணுகவும்: குறிப்பாகப் பணம், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) அல்லது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற உணர்திறன் மிக்க தகவல்களை வழங்குமாறு கேட்கப்படும் போது கூடுதல் எச்சரிக்கை தேவை.
  2. சந்தேகம் இருந்தால், சற்று நின்று சரிபார்க்கவும்: அவசரத்தை மட்டுமே காரணியாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
  3. 1799 என்ற 24 மணி நேர ScamShield உதவி எண்ணை அழைக்கவும்: ஒரு சூழ்நிலை மோசடியா இல்லையா என்பதில் உங்களுக்குத் தெளிவு இல்லை என்றால் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இது சிங்கப்பூர் காவல்துறையுடனும் தேசிய குற்றத் தடுப்பு மன்றத்துடனும் இணைந்து வழங்கப்படும் “மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை” என்ற தொடரின் ஒரு பகுதியாகும்.
குறிப்புச் சொற்கள்
மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகாவல்துறைசெயற்கை நுண்ணறிவு