திருமுறை பயில்வோர்க்கு ஊக்கமளித்த நிகழ்ச்சி

2 mins read
e8b35611-1053-4add-a314-0edaa5089157
ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தின் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. - படம்: சிங்கப்பூர் செட்டியார் கோயில் குழுமம்

திருமுறை பயில்வோர்க்குப் பெரும் ஊக்கம் தரும் நிகழ்ச்சியாக அமைந்த சிங்கப்பூர் திருமுறைத் திருவிழாவில் பங்குபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இம்மாதம் 10ஆம் தேதி தேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தின் வளாகத்தில் உலக இந்து சமய ஆன்மீகக் கலாசார மையம், சிவ ஸ்ரீ அண்ணா இணையத்தளத்தின் 450வது நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் செட்டியார் கோயில் குழுமத்தின் தலைவர் RM. ராமசாமி செட்டியார் அவர்கள் செய்திருந்தார். இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

பிள்ளையார்பட்டி ஆலயத் தலைமை அர்ச்சகர் டாக்டர் K. பிச்சை சிவாச்சாரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

செட்டியார் கோயில் குழுமத் தலைவர் RM. ராமசாமி செட்டியார், சுப.திண்ணப்ப செட்டியார், சமயசமூக சேவகர் AR. ராமசாமி செட்டியார், சிவ. அழகப்பன் கணேசன், ஸ்ரீநிவாசன், இலங்கை சைவ குருமார் அமைப்பின் தலைவர் டாக்டர் வைத்தீஸ்வர குருக்கள், திருமுறை ஆசிரியர் சோ. வைத்தியநாத தேசிகர், இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமதி சுபாஷினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

246 மாணவர்கள் சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்றனர். முன்னதாக மாணவர்கள் திருமுறை இசைத்தனர். ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத் தலைமை அர்ச்சகர் R. சிவசுப்ரமணிய குருக்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். கேலாங் ஈஸ்ட் அவென்யு தலைமை அர்ச்சகர் M. மணிசேகர சிவாச்சாரியார் நன்றி தெரிவித்தார். திரு சுப்பு அடைக்கலவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான லண்டன் ஸ்ரீ முருகன் ஆலய அர்ச்சகர் சிவாகம ரத்னம் கணேஷ் குருக்கள் விழா ஏற்பாடுகளைச் செய்தார்.

குறிப்புச் சொற்கள்