தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தம்மை வளர்த்தவர்கள், தாம் வளர்ப்பவர்கள்: தலைமுறைகள் தாண்டித் தொடரும் அன்பு

7 mins read
வாழ்வில் பல இலக்குகள் இருக்கலாம்; ஆனால் குடும்பப் பொறுப்புகளை என்றும் நிராகரிக்காத அன்புள்ளங்களே நம் சிங்கப்பூர் சமுதாயத்தின் அடித்தளம். அவர்கள் இரண்டையும் எப்படி சமாளிக்கிறார்கள்; அதில் அரசாங்கத்தின் பங்கு என்ன என்பதை ஆராயலாம்.
d07dbd84-edda-4ecf-9c7c-5d31deb3b5d8
தன் மகனுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன சையத் ஷரீஃப் மனத்தில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணவோட்டங்கள். - படம்: எஸ்பிஎச் மீடியா

“குடும்பத்தில் ஒருவர் மட்டும் சம்பாதிக்கும்போது, ஒவ்வொரு வெள்ளியும் முக்கியம். என் சம்பாத்தியத்தையும் சேமிப்பையும் மேம்படுத்துவது என் குறிக்கோள்களில் ஒன்று.

“ஏனெனில், என் மகனுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்; என் மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; வீட்டுச் செலவுகளும் இருக்கின்றன,” என்றார் சையத் ஷரீஃப், 34.

அவருக்குத் தற்போது மூன்று வயது மகன் இருக்கிறார்; கூடிய விரைவில் மற்றொரு பிள்ளைக்கும் தந்தையாகப் போகிறார். தன் அருகிலேயே குடியிருக்கும் வயதான பெற்றோருக்கு அவர் பல்வேறு வேலைகளைச் செய்துகொடுத்து அவர்களையும் பார்த்துக்கொள்கிறார்.

அவரைப் போல் சமீபத்தில் தந்தையான யுவராஜ் உத்தமன், 32, தன் ஒன்பது மாத மகனுக்குத் தந்தையாகவும் மூட்டுவலியினால் அண்மையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குச் சென்ற தன் தாயாரைப் பார்த்துக்கொள்ளும் நல்ல மகனாகவும் இரு பொறுப்புகளைச் சுமந்துவருகிறார்.

அப்படியிருந்தும் அவர் தம் சொந்த இலட்சியங்களையும் கைவிடவில்லை.

“புதிய மொழிக் கற்றுவருகிறேன். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்கிறேன். வலையொளியையும் செய்கிறேன். ஒரு சராசரி நாளில் பல விஷயங்களையும் செய்ய விரும்புகிறேன். அதுதான் நான்,” என்றார் யுவராஜ்.

இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பாதைகள் சில ஆண்டுகள்முன் ஒன்றோடோன்று பிணைந்தன. தற்செயலாக உடற்பயிற்சிக் கூடத்தில் நிகழ்ந்த ஒரு சந்திப்பு, மலரும் நட்புக்கு வித்திட்டு, 2020ல் அவர்கள் இரு நண்பர்களுடன் இணைந்து ‘வட போச்சே’ எனும் தமிழ் சார்ந்த வலையொளியைத் தொடங்கினர். அதனை டிக்டாக்கில் 30,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அது மற்ற சமூக ஊடகங்களிலும் இருக்கின்றது.

2020ல் அவர்கள் இரு நண்பர்களுடன் இணைந்து ‘வட போச்சே’ எனும் தமிழ் சார்ந்த வலையொளியைத் தொடங்கினர் சையத் ஷரீஃப் (வலக்கோடி), யுவராஜ் உத்தமன் (வலமிருந்து இரண்டாவது).
2020ல் அவர்கள் இரு நண்பர்களுடன் இணைந்து ‘வட போச்சே’ எனும் தமிழ் சார்ந்த வலையொளியைத் தொடங்கினர் சையத் ஷரீஃப் (வலக்கோடி), யுவராஜ் உத்தமன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: சையத் ஷரீஃப்

‘தங்கிலிஷ்’ என தமிழையும் ஆங்கிலத்தையும் அவர்கள் அறிவுபூர்வமாகக் கலந்துபேசும் விதம், சிங்கப்பூர், மலேசிய மக்களைச் சென்றடைகிறது. மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, அன்றாடம் ஒரு வலையொளியையாவது அவர்கள் பதிவேற்றுகின்றனர்.

குடும்பத்திலும் வாழ்விலும் சமநிலை

வலையொளியுடன் முழுநேர வேலை, துறைசார்ந்த இலக்குகள், குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றைச் சரிசமமாகக் கையாள்வது சுலபமல்ல.

யுவராஜ் ஓர் அனைத்துலக வர்த்தகப் பள்ளியில் சந்தைப்படுத்துதல் மேலாளராகப் பணியாற்றுகிறார். ஷரீஃப் ஒரு வங்கியில் உடன்பாட்டுப் (Compliance) பிரிவில் பணியாற்றுகிறார்.

அதனால் குடும்பத்துக்கும் வலையொளிக்கும் அவர்களால் குறிப்பிட்ட அளவே நேரம் செலவிடமுடிகிறது.

கிடைக்கும் நேரத்தில் இலக்கை நோக்கியப் பயணம்

“எங்கள் வலையொளி ஒளிப்பதிவுகள் சிலமுறை காலை 6 முதல் 8 மணிக்கும் இடையேகூட நடக்கும். அதன்பின் வேலைக்குச் செல்வோம். பெரும்பாலான நேரம் வெள்ளிக்கிழமை இரவுகளில் அல்லது சனிக்கிழமைகளிள் ஒளிப்பதிவு செய்து, வார இறுதியில் ஒரு நாளையாவது குடும்பத்துக்காக ஒதுக்குகிறோம்,” என்றார் யுவராஜ்.

“ஒளிப்பதிவு கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுக்கும். அதற்குப் பின்னணியிலும் பல வி‌‌ஷயங்களும் நடக்கின்றன. ஒளிப்பதிவுக்குப் பின் எடிட்டிங், பதிவேற்றம் எனப் பல பணிகளும் இருக்கின்றன. அனைத்தையும் நாங்கள் சொந்தமாகவே செய்கிறோம். தமிழர் அல்லாதவர்களும் நம் வலையொளியில் நாட்டம் காட்டுவதால் ஆங்கிலக் குறிப்புகளையும் அவர்கள் சேர்க்கின்றனர். உச்ச காலகட்டங்களில் வாரத்துக்கு 8 முதல் 10 மணி நேரம் வரைக்கூட செலவிடுவோம்,” என்றார் யுவராஜ்.

குடும்ப வாழ்விலும் சொந்த இலக்குகளிலும் சமநிலைக் காண்பதற்குச் சரியான தொடர்பும் நேரக் கட்டுப்பாட்டும் முக்கியம் என்றார் யுவராஜ்.

“என்னைப் போல், என் மனைவிக்கும் வேலையைத் தவிர மற்ற வி‌‌ஷயங்களையும் செய்வதில் விருப்பம் உண்டு. அதனால் நாங்கள் எங்கள் நேர அட்டவணையைப் பகிர்ந்துகொள்வதற்காக ஒரு தனி ‘வாட்ஸ்அப்’ உரையாடலை வைத்துள்ளோம்.

“அதைத் தாண்டி, சில சமயம் திடீரெனப் புதிய பணிகள் வரும்போதும் என் மனைவி புரிந்துகொள்கிறார்,” என்றார் யுவராஜ்.

யுவராஜின் மனைவி ஒரு தனியார் துணைப்பாட நிலையத்தில் பணியாற்றுவதும் கைகொடுக்கிறது. அவர் நண்பகல் கிட்டத்தட்ட 3 மணிக்கு வேலையைத் தொடங்கி இரவு 9 மணிக்கு வேலையை முடிக்கிறார். அதனால், யுவராஜ் வலையொளி ஒளிப்பதிவுகளைச் செய்யும்போது மனைவி மகனைப் பார்த்துக்கொள்கிறார்.

சிறந்த வாழ்வுக்காகத் திறன் மேம்பாடு

‌‌முன்பு ஷரீஃப் சில நாள்கள் பகலிலும் சில நாள்கள் இரவிலும் பணியாற்றிவந்ததால் மகனைப் பார்த்துக்கொள்ளக் கடினமாக இருந்தது. அப்போது மகனுக்கு ஒரு வயதுதான்.

“என் முதலாளியிடமிருந்துதான் நான் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பற்றித் தெரிந்துகொண்டேன். நான் அதை எதற்குப் பயன்படுத்துகிறேனோ, அதிலிருந்து ஆக அதிகமாகப் பயனடைய வேண்டும் என முடிவெடுத்தேன்,” என்றார் ‌‌ஷரீஃப்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதியால் தன் சொந்த பணத்தைச் செலுத்தவேண்டிய தேவையின்றி ‌‌ஷரீஃப் தன் துறை தொடர்பான மூன்று மாதப் பயிற்சியை மேற்கொண்டார். “நள்ளிரவு முதல் காலை 8 மணிவரை நான் வேலைசெய்தபின் உடனடியாக ஸூம்வழி இணைய வகுப்புகளை மேற்கொண்டேன்,” என்றார் ‌‌ஷரீஃப்.

சில நாள்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பையும் ‌‌வழங்குகிறது ‌‌ஷரீஃபின் நிறுவனம். எனினும், காலை 9 முதல் பிற்பகல் 6 மணிவரை அலுவலகத்தில் பணியாற்றவும், வேலை முடித்தபின் வீட்டுக்கு நேரம் ஒதுக்கவும் அவர் விரும்புகிறார்.
சில நாள்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பையும் ‌‌வழங்குகிறது ‌‌ஷரீஃபின் நிறுவனம். எனினும், காலை 9 முதல் பிற்பகல் 6 மணிவரை அலுவலகத்தில் பணியாற்றவும், வேலை முடித்தபின் வீட்டுக்கு நேரம் ஒதுக்கவும் அவர் விரும்புகிறார். - படம்: எஸ்பிஎச் மீடியா

அதன்மூலம் ஷரீஃபுக்கு இன்னும் அதிக சம்பளத்தில், அவர் விரும்பிய துறையில் வேலை கிடைத்தது. பகல் நேர வேலை என்பதால் அவரால் குடும்பத்துடன் கூடுதலான தரமான நேரத்தையும் செலவிடமுடிகிறது.

சொந்த விருப்பங்களுக்காகத் திறன் மேம்பாடு

2022ல் யுவராஜ் தனிப்பட்ட உடற்பயிற்சிப் பயிற்சியாளராவதற்கான (personal trainer) மூன்று மாத ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சியை இணையவழி மேற்கொண்டார். சிங்கப்பூர் அனைத்துலக விளையாட்டுப் பயிற்சிக்கூடம் அதனை நடத்தியது. அவரது பயிற்சித் தொகையில் 65.96% தமது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கிலிருந்து செலுத்தப்பட்டது.

“2009 முதல் நான் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சிசெய்துவருகிறேன். ஆனால் உடற்பயிற்சி பற்றி எனக்குத் தெரிந்தது அனைத்தும் நான் சுயமாகக் கற்றதே. அதன் பின்னணியிலுள்ள அறிவியலைக் கற்றுக்கொள்ளும் ஆசை எனக்கிருந்தது. யாராவது என்னிடம் ஆலோசனைக் கேட்டால் நான் சரியான தகவல்களை வழங்க விரும்பினேன்,” என்றார் யுவராஜ்.

அப்பயிற்சியை முடித்ததும் யுவராஜ் உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளராகப் பகுதிநேரம் பணியாற்றவும் செய்தார். தம் முழுநேர வேலைக்குச் செல்வதற்கு முன்பு உடற்பயிற்சிப் பயிற்சி வழங்கிவந்தார் யுவராஜ். “என் நாள் அதிகாலையில் 5 மணிக்கே தொடங்கும்,” என்றார் யுவராஜ். ஆனால் தன் மகன் பிறந்ததும் அதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார் அவர்.

தந்தையாகக் கடமையாற்ற உதவும் அரசாங்கத் திட்டங்கள்

இரண்டு வாரம் நீடிக்கும் அரசாங்கச் செலவிலான வேலை விடுப்பு யுவராஜ், ‌‌ஷரீஃப் இருவருக்கும் கைகொடுத்துள்ளது. “பிள்ளைப் பிறந்தவுடனே நான் என் இரு வார விடுப்பை எடுத்தேன். அந்த இரு வாரங்கள் நான் பிள்ளையைப் பார்த்துக்கொண்டது அவர் உடற்சோர்விலிருந்து மீண்டுவர உதவியது,” என்றார் ‌‌ஷரீஃப்.

தன் மகனைச் சிறுவர்நல மருத்துவரிடம் கொண்டுசெல்வதற்கு ஆறு நாள் குழந்தைப் பராமரிப்பு வேலை விடுப்பைப் பயன்படுத்துகிறார் ‌‌ஷரீஃப்.

தமது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் ஷரீஃப், அரசாங்கம் வழங்கும் நான்கு வார தந்தையர் விடுப்பையும் ஆறு வார பகிரப்பட்ட பெற்றோர் விடுப்பையும் எடுக்க உள்ளதாகவும் கூறினார். பகிரப்பட்ட பெற்றோர் விடுப்பு 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு 10 வாரங்களாக நீட்டிக்கப்படும்.

சில நாள்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பையும் ‌‌வழங்குகிறது ‌‌ஷரீஃபின் நிறுவனம். எனினும், காலை 9 முதல் பிற்பகல் 6 மணிவரை அலுவலகத்தில் பணியாற்றவும், வேலை முடித்தபின் வீட்டுக்கு நேரம் ஒதுக்கவும் அவர் விரும்புகிறார். “ஆனால் என் இரண்டாம் பிள்ளைப் பிறந்ததும் வீட்டிலிருந்து வேலை செய்வது, வேலை நேரத்தைத் தேவைக்கேற்றாற்போல் மாற்றுவது உதவியாக இருக்கும்,” என்றார் ‌‌ஷரீஃப்.

“குழந்தை போனஸ் நம் செலவினங்களுக்கு உதவியாக உள்ளது. எங்கள் குழந்தைக்கு ஃபார்முலா பால் போன்ற பொருள்களை வாங்கச் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துகிறோம்,” என்றார் யுவராஜ்.

தம் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக இல்லப் பணிப்பெண்ணையும் பணியமர்த்தியுள்ளார் யுவராஜ். வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் தீர்வைச் சலுகை அவருடைய குடும்பத்துக்கு மாதம் $240 சலுகை வழங்குவதால், அவர் $60 தீர்வையே செலுத்தவேண்டியுள்ளது. இச்சலுகை, வீட்டில் குறைந்தது ஒரு முதியவரையோ 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளையையோ உடற்குறையுள்ளவரையோ வைத்திருக்கும் குடும்பங்களுக்குப் பொருந்தும்.

நான் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது இடையிடையே என் குழந்தையுடனும் என்னால் நேரம் செலவிடமுடிகிறது. தீர்வைச் சலுகை, இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்த உந்துதலாக அமைகிறது.
நான் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது இடையிடையே என் குழந்தையுடனும் என்னால் நேரம் செலவிடமுடிகிறது. தீர்வைச் சலுகை, இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்த உந்துதலாக அமைகிறது. - படம்: யுவராஜ் உத்தமன்

“ஆரம்பகட்டத்தில் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே வலுவான பந்தம் ஏற்பட வேண்டும். வீட்டில் இல்லப் பணிப்பெண் இருப்பதால் குழந்தையைக் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்காமல் வீட்டிலேயே பராமரிக்க முடிகிறது. அதனால், நான் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது இடையிடையே என் குழந்தையுடனும் என்னால் நேரம் செலவிடமுடிகிறது. இந்தத் தீர்வைச் சலுகை, இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்த உந்துதலாக அமைகிறது,” என்றார் யுவராஜ்.

தன் இரண்டாவது பிள்ளை வந்ததும் இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்தவுள்ளதாக ‌‌ஷரீஃப் கூறினார்.

“வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபராக, ஒவ்வொரு செலவின் தாக்கத்தையும் நான் உணர்கிறேன். இந்த தீர்வைச் சலுகையால் என்னால் குழந்தை ஃபார்முலா போன்றவற்றை இன்னும் நிம்மதியுடன் வாங்கமுடிகிறது. என் சேமிப்புகளை இன்னும் காக்கமுடிவதால் மன உளைச்சலும் குறைக்கிறது,” என்றார் ‌‌ஷரீஃப்.

முதியோர் பராமரிப்பு

தன் பெற்றோருடன் கூடுதல் நேரம் செலவிட விரும்பிய ‌‌ஷரீஃப், மெக்பர்சனில் அமைந்துள்ள அவர்கள் வீட்டின் அருகிலேயே உபி வட்டாரத்தில் வீட்டை வாங்கியுள்ளார். இதன்மூலம் அவரால் பெற்றோரை அடிக்கடி சந்தித்துவரவும் உதவி நல்கவும் முடிகிறது. பெற்றோர் அல்லது பிள்ளைகளுடன் அல்லது அவர்களுக்கு அருகாமையில் வசிக்க மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கு $30,000 வரையில் வழங்கப்படும் மானியம் அது.

நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத்தின் மூலம் சையத் ஷரீஃப் (இடக்கோடி) தன் பெற்றோரின் வீட்டின் அருகிலேயே வீடு வாங்கியுள்ளார். தாய் (நடுவில்), தந்தையுடன் (வலக்கோடி) கூடுதல் நேரம் செலவிட முடிகிறது என்றும் அவர்களை அடிக்கடி சந்தித்துவர ஏதுவாக இருக்கிறது.
நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத்தின் மூலம் சையத் ஷரீஃப் (இடக்கோடி) தன் பெற்றோரின் வீட்டின் அருகிலேயே வீடு வாங்கியுள்ளார். தாய் (நடுவில்), தந்தையுடன் (வலக்கோடி) கூடுதல் நேரம் செலவிட முடிகிறது என்றும் அவர்களை அடிக்கடி சந்தித்துவர ஏதுவாக இருக்கிறது. - படம்: சையத் ஷரீஃப்

‌‌ஷரீஃபின் தந்தைக்கு வயது 61; தாயாருக்கு வயது 54. “நல்ல வேளை, என் தாயாருக்கு வீக்கமான சிறுநீரகம் இருந்தாலும் அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக நடமாடுகிறார்கள். என் தந்தை இன்னும் வேலை செய்கிறார். என் தாயார் அவ்வப்போது தமிழ்த் துணைப்பாடம் கற்பிக்கிறார்.

“என் பெற்றோர் சிடிசி பற்றுச்சீட்டுகள் போன்ற திட்டங்களை வரவேற்கின்றனர். ஏனெனில், அவர்கள்மீது அக்கறை செலுத்தப்படுவதை அவர்களால் உணரமுடிகிறது. இப்பற்றுச்சீட்டுகளை மெக்ஃபர்சன் உணவங்காடி நிலையம்போல அவர்கள் விரும்பிய இடங்களில் அவர்களால் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தமுடிகிறது.

“காய்கறிகளை வாங்க ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ் போன்ற இடங்களிலும் இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடிகிறது,” என்றார் ‌ஷரீஃப்.

யுவராஜின் தாயார் ஈராண்டுகளுக்கு முன்பு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டார். அரசாங்கம் வழங்கிய மெடிசேவ் டாப்-அப்கள் - 2024ல் அறிமுகமான மாஜுலா திட்டத்தின்கீழ் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்ட $2,000 வரையிலான மெடிசேவ் போனஸ் உட்பட - மருத்துவச் செலவுகளுக்கு உதவின. வழக்கமாக மருத்துவமனைக்குச் செல்லும்போதும் அவர் தன் மெடிசேவ்வைப் பயன்படுத்துகிறார்.

யுவராஜின் சகோதரி தாயாரை அன்றாடம் பார்த்துக்கொள்கிறார். யுவராஜும் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பைச் சகோதரியுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தாயார் சிகிச்சையிலிருந்து மீண்டுவருவதற்கு உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளராக யுவராஜின் அனுபவம் கைகொடுத்துள்ளது. “அவர் தம் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது என்னால் அவர் சரியாகச் செய்கிறாரா என்பதைப் பார்த்து உதவ முடிகிறது,” என்றார் யுவராஜ்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உதவி

‌‌‌வாழ்க்கையின் பல வி‌‌ஷயங்களும் பின்னிப் பிணைந்தவை என்பதற்கு ‌‌ஷரிஃப், யுவராஜ் இருவரும் நல்ல உதாரணங்கள்.

தம் பெற்றோரையும் பிள்ளைகளையும் பராமரித்துவரும் தலைமுறையினர், சரியாக நேரத்தை வகுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. குடும்பம், வாழ்க்கை, இலக்கு அனைத்திலும் சமநிலைக் காண்பதிலேயே அவர்களின் வெற்றி அடங்குகிறது.

இச்சவால்மிக்கப் பயணத்தை அவர்கள் தனியாக மேற்கொள்ளவேண்டியதில்லை. அவர்களுக்கு உதவ அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

முன்னேறும் சிங்கப்பூர் திட்டங்கள் சிங்கப்பூரர்களை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு உதவுகின்றன என்பதை நீங்களும் தவறாமல் தெரிந்துகொள்ளுங்கள்.

gov.sg உடன் இணைந்து
குறிப்புச் சொற்கள்