தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஆசியா முதல் அமெரிக்கா வரை கலைப் பரிமாற்றப் பயணம்

சித்திரக்கலையால் உலகைப் பிணைக்கும் சுந்தரம் தாகூர்

4 mins read
16c02560-add0-4e6a-b9e4-23f8fac84dee
சுந்தரம் தாகூர் - வரலாற்றாளர், கலைக்கூடக் காப்பாளர். - படம்: சுந்தரம் தாகூர்
multi-img1 of 2

சுந்தரம் தாகூர் - வரலாற்றாளர், கலைக்கூடக் காப்பாளர், விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்; குறிப்பாக இரு நாடுகளுக்குத் தேசிய கீதங்களை எழுதியவரும் நோபெல் பரிசு பெற்றவருமான திரு ரவீந்திரநாத் தாகூரின் வழித்தோன்றல்.

சிங்கப்பூரில் அமைந்திருக்கும் இவரது கலைக்கூடத்தில் கலைப் படைப்புகளால் கலாசாரங்கள் சங்கமிக்கின்றன.

பிறப்பால் இந்தியரான திரு தாகூர், இந்தியப் பாரம்பரியம் தமக்களித்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலகக் கலைச் சமூகத்தில் தனித்துவமிக்க பண்பாட்டு அடையாளங்களைப் பதித்திடத் துடிப்புடன் செயலாற்றி வருகிறார்.

இவரது கலைப் பயணத்திற்கு இந்தியப் பூர்வீகமும் அனைத்துலக அனுபவங்களும் எவ்வாறு பங்களித்தன, பல வடிவங்களில் உயிர்வாழும் கலைகளில் சித்திரங்களுக்கு வலுவான இடம் உள்ளதா, கலையால் சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியுமா என்பது உள்ளிட்ட தமிழ் முரசின் பற்பல கேள்விகளுக்குப் பதிலளித்தார் திரு தாகூர், 64.

மனிதத்தை இணைக்கும் கலைகள்

“இலக்கியம், கலை, செழித்தோங்கிய வளமான சூழலில் பிறந்து வளர்ந்தேன். லண்டனில் ஓவியம் பயின்ற என் தந்தை, பிறகு இந்தியாவிற்கு வந்து 1943ல் கலைஞர்களுக்கான ‘கொல்கத்தா குரூப்’ எனும் அமைப்பை நிறுவினார்.

“ஆசியா, தென்கிழக்காசியாவுடன் இருந்த கலை சார்ந்த முக்கியப் பிணைப்புகள், கலைகளை நோக்கிய எனது தொடக்ககால ஆர்வத்திற்கு ஊக்கமளித்தன,” என்றார் திரு தாகூர்.

இந்தியராக உணர்வதாகவும், அதேவேளையில் தமது ஆர்வம் அனைத்துலக மானுடத்தைச் சார்ந்தும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு தாகூர், கலைகளில் கவனம் செலுத்தி சமூகப் பிணைப்புகளுக்கு வித்திட தமக்குக் கைகொடுக்கும் அம்சம் குறித்தும் பகிர்ந்தார்.

இந்தியக் கலைகளின் வியத்தகு தத்துவம்

“இந்தியக் கலாசார நெறிகள், குறிப்பாக இயற்கை மீதான அதன் மரியாதையைப் போற்றுகிறேன். காட்டு விலங்குகளை ஒழிப்பதைவிட அவற்றுடன் இணைந்து வாழ்வதை வலியுறுத்தும் தத்துவம் நம்முடையது.

“இயற்கையுடனான இந்த இணக்கம், இந்தியக் கலைகள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படுவதற்கான காரணம். மேலும் அது தொடர்ந்து எனக்கு ஊக்கமளிக்கிறது,” என்று நியூயார்க் வாசியான திரு தாகூர் விவரித்தார்.

அதேபோல ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளில் வசித்துள்ளதால் பெருநகரம் சார்ந்த வாழ்வியல் அனுபவங்கள், கலைகள் தொடர்பான உலகளாவிய கண்ணோட்டத்திற்கு வலுசேர்த்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

செல்வாக்குமிக்க ஆசியர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு தாகூர், சிங்கப்பூரில் உள்ள தமது கலைக்கூடம் கலாசாரங்களுக்கு இடையேயான உரையாடல்களை உருவாக்கும் நோக்குடன் நிறுவப்பட்டது என்றார்.

2012ல் கலைக்கூடம் அமைப்பதற்கான அழைப்பில் தொடங்கிய இப்பயணம், ஆண்டுகள் கடந்தும் சிறப்பாக அதன் இலக்கைத் தொட்டு வருகிறது என்றார் திரு தாகூர்.

“கலைகளை வண்ணமாக மட்டும் மிளிரச் செய்யாமல், அவற்றை உலகப் பண்பாட்டுக்கு இடையிலான சொல்லாடல்களைப் பேணும் தளமாக இக்கலைக்கூடத்தில் காத்து வருகிறோம்.

“இங்குள்ள கலைக்கூடத்தில் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் என்று நாங்கள் கருதும் அனைத்துலகக் கலாசார உள்ளடக்கங்களைப் பறைசாற்றும் கண்காட்சிகள், கலைக்கூட விரிவுரைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் வாயிலாக சமகால கலைகளை எடுத்துரைக்கிறோம்.

“இவற்றால் முற்றிலும் புதுமையானவற்றை உருவாக்குகிறோம்,” என்றார் திரு தாகூர்.

இதன்மூலம் சிங்கப்பூரை உலகளாவிய கலையுலகத்துடன் உற்சாகமாக இணைக்கவும் பல்வேறு கண்ணோட்டப் பார்வைகள் மூலம் சமகால ஆசியக் குரல்கள் நலமாக ஒலிக்கக்கூடிய தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் திரு தாகூர் விளக்கினார்.

எத்தனையோ கலைக்கூடங்கள் தோன்றியும் மறைந்தும் வரும் இந்தப் பரபரப்பான காலகட்டத்தில், தமது காட்சியகம் நிலைத்திருப்பது நிறைவைத் தருகிறது என்றார் அவர்.

1980களில் நியூயார்க்கில் கலையுலகில் நுழைந்த திரு தாகூர், தமது கூடங்களில் ஆசியா முதல் ஐரோப்பா வரையுள்ள நூற்றுக்கணக்கான கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

“எல்லைகள், கலாசாரங்கள், மொழிகளைக் கடக்கும் சக்தி கலைக்கு உண்டு என்று நம்புகிறேன். படைப்பாற்றலை வளர்ப்பதும் கலைஞர்களுக்குச் சேவை செய்வதும் என் முக்கியக் குறிக்கோள். அதன்மூலம் புத்தாக்கமிக்க கலைஞர்களை மேம்படுத்த முடியும். மொழிகள் கடந்து பாரம்பரியமும் கலைகள் வழியாக வாழும் ,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு தாகூர்.

திரையுலகு போலன்று கலையுலகில் வாகை சூடுவது

படம் அல்லது இலக்கிய உலகங்களுடன் ஒப்பிடும்போது, காட்சிசார் கலைத் துறை மிகவும் சிறியது என்ற அவர், அதற்கான காரணமாக தாம் கருதுபவற்றையும் விளக்கினார்.

“எடுத்துக்காட்டாக, திரையுலகைப் பார்ப்போம். பேரளவு முழக்கம் ஏதுமின்றியும் மில்லியன் கணக்கான மக்கள் ஆரவாரமின்றி ஒரு திரைப்படத்தைப் பார்க்கலாம் அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கக்கூடும்.

“ஆனால், ஒரு கலைக்கூடத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சியில் 5,000 பேர் கலந்துகொண்டாலே, அது மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இதில் தனித்துவமும் உண்டு, சவாலும் உண்டு,” என்றார் திரு தாகூர்.

அர்த்தமுள்ள, சிறப்புவாய்ந்த கலைப் படைப்புகளை உருவாக்குவதுடன், அவற்றை உலகிற்குக் கொண்டுசேர்ப்பதற்கான வாசற்கதவுகளைத் திறப்பது எவ்வளவு முக்கியம் என்பது உலகறிந்ததே,” என்று கூறிய திரு தாகூர், வாய்ப்பு வரும்போது ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

“கலைஞர்கள் செயலாற்றலுடன் இருக்க வேண்டும். எப்போது இரண்டாம் வாய்ப்பு கிட்டும் என்பது தெரியாது. எனவே அருங்காட்சியகங்கள், கண்காட்சி, கலைமாடங்கள், மின்னிலக்கத் தளங்கள் என ஏதாவது ஒருவழியில் கலைகளுடன் தொடர்புகொள்வது அவசியம். அதன்மூலம் வாய்ப்புகள் உலகை வண்ணமயமாக்க இயலும் என்றார் திரு தாகூர்.

சுவரிலும் கண்காட்சியிலும் இடம்பெற்றிருக்கும் கலைப் படைப்புகளே நம் உலக பண்பாட்டின் உயிர்த்துடிப்புகள் என்று நிறைவுசெய்தார் அவர்.

குறிப்புச் சொற்கள்